Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏன் திரையில் நம் வரலாற்றினை பதிவு செய்ய மறுக்கிறோம்...?

 

மிழர்களுக்கு எப்போதும் தம் வரலாறு குறித்த ஒரு பெருமிதம் இருக்கும். 'தாங்கள்தான் உலக நாகரிகங்களுக்கு எல்லாம் முன்னோடியானவர்கள். ஆதிக்குடி தமிழ்குடிதான்' என்று பெருமைபட்டுக் கொள்வார்கள். மேலும், 'நாங்கள்தான் உலகிற்கு நாகரிகத்தை போதித்தோம். உலகில் பிற இனங்கள் நாகரிகம் அடைவதற்கு முன்பே, தமிழன் நாவாய் கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்து இருந்தான்' என்பார்கள். ஆனால், அந்த வரலாற்றைப் பதிவு செய்வதில் எப்போதும் பின் தங்கி விடுவார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில், லகான் இயக்குநர் அஷுதோஷ் கெளரிக்கர் இயக்கத்தில் வரவிருக்கும் மொகஞ்சதாரோ திரைப்படம்.

சிந்துவெளி நாகரிகம்:

வரலாறு எப்போதும் பல சுவாரஸ்யமான தகவல்களை தன்னுள்ளே கொண்டது. பல வரலாற்றுச் செய்திகள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பிரமாண்டமானதாகவும், பிரமிப்பு தருவதாகவும் இருக்கும். அத்தகைய ஒரு வரலாறுதான் சிந்துவெளி நாகரிக வரலாறு. முதன்முதலில் சிந்துவெளிக் குறித்த தகவல்கள் வெளிவர துவங்கியது 1844 ம் ஆண்டுதான்.

பிரிட்டானிய ராணுவப் பணியை பாதியிலேயே முறித்துக் கொண்டு ஓடிவந்த சார்லஸ் மேசன் என்னும் ஜேம்ஸ் லூயி , பஞ்சாப், ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் ஆகியப் பகுதிகளில் சுற்றி, 'Narrative of Various Journeys in Balochistan, Afghanistan and the Punjab’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் ஹரப்பா நகரச் சிதிலங்கள் பற்றி விவரித்து இருந்தார். அப்பகுதி உள்ளூர் மக்களுடன் உரையாடி, அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், மண்ணிற்கு அடியில் ஒரு நகரம் புதைந்து கிடக்கிறது என்று விவரித்திருந்தார். ஆனால் இது முதலில், படித்தவர்கள் மட்டுமே விவாதிக்கும் பொருளாக இருந்தது. சிந்துவெளி நாகரிகம் குறித்த பிரமாண்ட தகவல்கள் பொது சமூகத்திற்கு தெரியத் துவங்கியது, 1920 களில் தான். ஆம், சர் ஜான் ஹியூபர்ட் மார்ஷல் தலைமையில் 1921 ம் ஆண்டு, சிந்துப் பகுதியில் அகழ்வாராய்ச்சி துவங்கியது. ஹரப்பா, மொகஞ்சாதாரோ உள்ளிட்ட பிரம்மாண்ட நாகரிகம் குறித்த தகவல்கள் அப்போது தான் வெளி உலகத்திற்கு தெரிய துவங்கினபிரமாண்ட கட்டடங்கள், மூன்று அடுக்கு வீடுகள்,  நன்கு வடிவமைக்கப்பட்ட நகர கட்டமைப்பு, குளம், குளத்தின் அருகிலேயே உடைமாற்றுவதற்கு இடம் என ஹரப்பாவும், மொகஞ்சாதாரோவும் நாகரிகத்தில் செழித்து இருந்தன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சிந்துவெளி தமிழர் நாகரிகம்:

அந்த நாகரிகங்கள் திராவிட நாகரிகங்கள் தான் என அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட பல வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகள் மூலம் நிறுவி இருந்தாலும். இன்னும் அந்த நாகரிகம் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.  குறிப்பாக அந்த நாகரிகம் எப்படி அழிந்தது என்பது குறித்த தகவல்கள்.  இன்னும் வரலாற்று ஆய்வாளர்கள் அந்த நாகரிகம் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்கள். அதற்கு சமீபத்திய சான்று ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வு முடிவுகள்.


தமிழகத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், இப்போது ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், முதன்மை நிதிச் செயலாளராகவும் இருக்கிறார். இவர்  தனது 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்னும் ஆய்வு நூலில், ஹரப்பா, மொகஞ்சாதாரோவில் இருந்த  இடப்பெயர்கள் குறித்த ஒரு நெடிய ஆய்வை மேற்கொண்டு தமிழகத்திற்கும், சிந்துவெளிக்கும் உள்ள தொடர்பை நிறுவி உள்ளார். இப்போதும் சிந்துவெளி நாகரிகம் பரந்து விரிந்திருந்த பாகிஸ்தானிலும், அதன் அருகில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானிலும் கொற்கை, பாண்டி, கிள்ளி, சேரலா, தோன்றி, குன்று, ஆமூர் என்ற பெயர்களில் இடங்கள் உள்ளன என தம் ஆய்வில் எடுத்துரைக்கிறார். 

மொகஞ்தாரோ திரைப்படமும், கோலிவுட்டும்:


பல ஆய்வு தகவல்கள் தமிழர்களுக்கும், சிந்துவெளிக்கும் இருக்கும் தொடர்புகளை தொடர்ந்து நிறுவுகின்றன. ஆனால், தம் பிரமாண்ட நாகரிகத்தை திரைப்படத்தில் பதிவு செய்ய தமிழ் படைப்பாளிகள் தவறிவிட்டார்கள். நம் பக்கமிருந்து வந்தது சிந்து சமவெளி என்னும் பெயரில், ஒரு மூன்றாம் தர சினிமாதான். ஆனால், பாலிவுட் சினிமா மொகஞ்சாதாரோ என்ற பெயரில், சிந்து நாகரிகத்தை பின்னணியாகக் கொண்டு  ஒரு படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளது. ஏன் தமிழ் படைப்பாளிகளுக்கு இது தோன்றவில்லை...? படம் தயாரிக்க ஆகும் இமாலயச் செலவுகளை நிச்சயம் காரணமாக சொல்ல முடியாது. இப்போது நூறு கோடிகளில் படம் பண்ணுவதெல்லாம் தமிழில் சர்வசாதாரணம் ஆகிவிட்டது. பிறகு ஏன் நம் படைப்பாளிகள் இதை சினிமாவாகக் கொண்டு வர முயலவில்லை...?

தூக்குத் தண்டனைக்கு எதிராக ‘இப்படிக்கு தோழர் செங்கொடி, ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக போராடிய மாணவர் போராட்டத்தை அடிப்படையாக வைத்து அறப்போர், படகில் ஆஸ்திரேலியா செல்ல முயலும் ஒரு ஈழத்தமிழனின் கதையை வைத்து இடுக்கண் ஆகிய ஆவண மற்றும் குறும்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்,  “ உஸ்தாத் ஹோட்டல் என்று மலையாளத்தில் ஒரு படம் வந்தது. அது நம் மதுரையில் வாழும் நாராயணன் கிருஷ்ணன் என்பவரது வாழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதுபோலதான், சென்னையில் விபத்தில் இறந்த ஹிதேந்திரனின் மரணத்தையும், அதைத் தொடந்து அவனின் இதயத்தை இன்னொருவருக்கு பொருத்த வேலூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் மலையாள டிராஃபிக் திரைப்படம். அவர்கள் எடுத்த பின்பு தான் நாம் அதனை, சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் தமிழ்படுத்தினோம். அதுபோல் கோவை குண்டுவெடிப்பை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் பல படங்கள் வந்துவிட்டன. ஆனால், நாம் ஒரு திரைப்படத்தைக்கூட எடுக்கவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.

ஆம். நமக்கு காந்தியை சினிமாவில் பதிவு செய்யக் கூட அட்டன்பிரோதான் வரவேண்டியதாக இருக்கிறது.

 


இல்லை. நாமும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழனின், பாரதி, காமராஜர் வரலாற்றை சினிமாவாக ஆக்கி இருக்கிறோம் என்கிறீர்களா...? ஆம்தான். ஆனால் அது அனைத்தும் கடந்த காலம். வரலாறு என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த காலத்திலும் நாம் என்ன செய்திருக்கிறோம்?.

நாம் நமது பெருமிதங்களை சினிமாவாக ஆக்க தவறுகிறோம். அதை இன்னொருவர் எடுக்கும் போது,   நம்மை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று நாம் குதிக்கிறோம், போராடுகிறோம். இது எத்தகைய நிலைப்பாடு...?  யூத மக்களின் வலியை உலகமறிய செய்தது சினிமாதான். எத்தனை எத்தனை படங்கள் வந்துவிட்டன. ஏன் நம்மிடமிருந்து அது போன்று படைப்புகள் வருவதில்லை.  இது நம் பிழைதானே...?

தமிழ் சமூகம் வளமான வரலாறும், அபார கற்பனை திறனும் கொண்டது. அதற்கு எடுத்துக் காட்டு சங்க இலக்கியங்கள். படிப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் உள்ள வர்ணனைகள் அனைத்தும் பிரமிக்கதக்கவை.

வணிக நோக்கில் பார்த்தாலும், நிச்சயம் நம் வரலாறு சுவாரஸ்யமானதுதான் என்பது அப்பாதுரையாரின் குமரிகண்டம் மற்றும் பெ. கோவிந்தசாமியின் சிந்துவெளியும் தமிழர் நாகரிகமும் போன்ற நூல்களை படித்தால் தெரியும்.

வரலாறு தெரியாத இனம் நிச்சயம் வீழ்ந்து போகும். நாம் நம் வரலாற்றை செல்லுலாய்டில் நேர்மையாக பதிவு செய்வோம். வெற்று பெருமைகளை நம் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம். நம் உண்மையான பெருமிதங்களையும், வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு சினிமா என்னும் வலிமையான ஊடகம் மூலம் கடத்துவோம். வரலாறு பேசுவது ஒன்றும் அரசியல் அல்ல, அதே நேரம் சினிமாவில் அரசியல் பேசுவதும் தவறு அல்ல.


- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close