Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 நாட்கள் முகாமிட்டும் சந்திக்க மறுத்த சோனியா! - ஈவிகேஎஸ் ராஜினாமாவின் பின்னணி தகவல்கள்

மிழக காங்கிரஸ் தலைவர் பதவியை, ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும்,  எதிர்க்கோஷ்டியை சார்ந்த தலைவர்கள், கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கான காய் நகர்த்தல்களை தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், திமுக உடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஏற்கனவே இளங்கோவனுடன் தங்கபாலு, ப.சிதம்பரம்,  விஜயதரணி, ஜோதிமணி  உள்ளிட்டவர்கள் மோதல்போக்கை கடைப்பிடித்து வந்த நிலையில்,  தேர்தல் தோல்வியை தொடர்ந்து இளங்கோவன், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல்கள் கட்சியின் பல மட்டத்திலிருந்தும் எழத்தொடங்கின. 

ஜோதிமணி, விஜயதரணி ஆகியோர் தேர்தலுக்கு முன் இளங்கோவனுடன் கடும் மோதல்போக்கை கடைபிடித்தவர்கள். ஆனால் மோதலுக்கான  காரணங்கள் இருவருக்குமே வெவ்வேறானவை. ஜோதிமணியை பொறுத்தவரை அவர், இளங்கோவனின் ஆதரவாளராக இருந்தவர்தான். தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே, அவர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தில் மக்களை சந்தித்து, தனக்கு ஆதரவு திரட்டும் வேலைகளை தொடங்கியிருந்தார். இளங்கோவனும் அவருக்கு அரவக்குறிச்சி தொகுதியை தருவதாக வாக்குறுதி அளித்திருந்தாராம். ஆனால் திமுக உடனான தொகுதி உடன்பாட்டில் அரவக்குறிச்சியை திமுக எடுத்துக்கொள்ளவே கொந்தளித்தார் ஜோதிமணி.
 

அதே தொகுதியில், தான் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார். "ராகுல் காந்தி அரவக்குறிச்சியை எனக்கு ஒதுக்கச் சொல்லி பேசுமாறு சொல்லியும், எனக்கு சீட் கிடைக்காமல் சதி செய்தது இளங்கோவன்தான். இந்தத் தொகுதியைப் பெறுவதற்கு இளங்கோவன் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. அடுத்த தலைமுறையினர் காங்கிரஸ் கட்சியில் வளருவதை இளங்கோவன் விரும்பவில்லை" என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதனையடுத்து, 'தலைமையின் முடிவைத் தாண்டி ஜோதிமணி போட்டியிட்டால் அவரைக் கட்சியை விட்டு நீக்குவோம்' என எச்சரித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இதனையடுத்து அப்போதைக்கு ஜோதிமணி அடங்கிப்போனாலும், தேர்தல் முடிவுக்கு பின்னர் இளங்கோவனுக்கு எதிராக கட்சித்தலைமையிடம் புகார் பட்டியல் வாசிக்கும் அதிருப்தி தலைவர்கள் பட்டியலில் அவரும் சேர்ந்துகொண்டார்.

அதேபோன்றுதான் விஜயதரணி உடனான மோதலும். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் முன் வைக்கப்பட்டிருந்த பேனரில் விஜயதரணியின் படம், இளங்கோவனின் படத்திற்கு இணையாக பெரிதாக வைக்கப்பட்டு இருந்ததாக கூறி, பிரச்னை எழுந்தது. இதையடுத்து அந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதுதொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் விஜயதரணி முறையிடச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பெண்களை இழிவுபடுத்துவதாக இளங்கோவன் மீது விஜயதரணி போலீசில் புகார் கொடுக்கும் அளவுக்கு சென்றது. இருப்பினும் மேலிடம் தலையிட்டதால்,  சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் 'சீட்' பெற்று,  ஒருவழியாக வெற்றியும் பெற்று எம்.எல்.வாகவும் ஆனார் விஜயதரணி. ஆனால் அவருக்குமே இளங்கோவன் மீதான கோபம் தணியாமல்தான் உள்ளது.

இந்நிலையில்  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தல் தோல்வி குறித்து பேட்டி அளித்த விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவரை  கட்சியில் இருந்து நீக்கினார் இளங்கோவன். ஆனால் அவர் தனது நீக்கம் செல்லாது என இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

இவர்கள் தவிர, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலு உள்ளிட்டவர்களும் டெல்லி சென்று கட்சி மேலிடத்திடம் இளங்கோவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இவ்வாறு நாலாபுறமும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்தே, இளங்கோவன் டெல்லி சென்றார். காங்கிரஸ் துணைத் தலைவர்  ராகுல் காந்தி, வெளிநாடு செல்வதற்கு முன்னதாக கடந்த 14 ம் தேதியன்று அவரை சந்தித்த இளங்கோவன், தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார். அவரிடம் தமிழக காங்கிரஸின் தற்போதைய நிலவரம் மற்றும் உட்கட்சிப் பூசல் உள்ளிட்ட விவரங்களை ராகுல் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி மறுநாள்15 ம் தேதியன்று பதவி விலகல் கடிதத்தை கொடுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க இளங்கோவன் 3 நாட்கள் காத்திருந்தும், அவரை சந்திக்க சோனியா மறுத்துவிட்டதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இளங்கோவனின் ராஜினாமா கடிதம் குறித்த தகவல் இன்றுதான் வெளியே கசிந்தது. ஆனாலும் காங்கிரஸ் தலைமை இதனை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ராகுல் காந்தி வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின்னர் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ராஜினாமா தகவல் வெளியே தெரிந்துவிட்டதால், புதிய தலைவருக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இளங்கோவனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, செல்வகுமார் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் போட்டியில் குதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ