Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதைதான் செய்ய வேண்டும் மருத்துவர்கள்...! #WorldDoctorsDay

து சென்னையில் உள்ள ஓர் உயர்தரமான மருத்துவமனை. கையில் மருத்துவ அறிக்கையுடன், மருத்துவரின் அறைக்கு அவர் பதற்றத்துடன் செல்கிறார். இறுக்கமான முகத்துடன், மருத்துவர் ஏதோ கத்தையான காகிதங்களை மேய்ந்து கொண்டிருக்கிறார். மூக்கின் நுனியில் கண்ணாடி, எப்போது கீழே விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அமர்ந்து இருக்கிறது.
 

உள்ளே சென்றவர் கொஞ்சம் நடுங்கிய குரலில், “டாக்டர்...” என்கிறார். 'என்ன...?' என்னும் தொனியில் மருத்துவர் பார்க்கிறார். வந்தவர், அவரிடம் மருத்துவ அறிக்கையை ஒப்படைக்கிறார். இரண்டு நிமிடங்கள் மருத்துவ அறிக்கையை பார்த்தவர், தலையை தூக்கி வந்தவரின் முகத்தை ஆழமாக பார்த்து, “ஆமா... கண்ணு கொஞ்சம் மஞ்சளா இருக்குற மாதிரிதான் இருக்கு. அனேகமா லிவர்லதான் பிரச்னை... எதுவும் பயப்பட வேண்டாம்... இன்னைக்கே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிடுங்க. பெட்சு கம்மியாதான் இருக்குன்னு நினைக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் அட்மிட் ஆகுறீங்களோ அவ்வளவு நல்லது. ஐம்பதாயிரத்துல சரி பண்ணிரலாம்” என்கிறார். அருகில் இருந்த நர்ஸ் பதறியபடி, “சார் இவருக்கு ஒண்ணும் இல்லை... இது இவருடைய சொந்தக்காரர் ரிப்போர்ட்... பேஷண்ட் வெளியே வெயிட் பண்றாங்க...” என்றவுடன், மருத்துவர் எதுவும் நடக்காத தொனியில் பேச்சை மாற்றுகிறார்.

இது எதுவும் கற்பனையாக எழுதப்பட்டது அல்ல. நெருங்கிய நண்பருக்கு அண்மையில் நிகழ்ந்த அனுபவம் இது. இதை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கலாம்.


யாரின் கையில் மருத்துவர்கள்...?:

பொத்தாம் பொதுவாக,  'மருத்துவம் முழுவதும் வணிகமயமாகிவிட்டது, மருத்துவர்கள் எல்லாம் வணிகர்கள் ஆகிவிட்டார்கள்' என்று, மருத்துவர்கள் மீது சேற்றை வாரி இறைத்துவிட்டு நாம் கடந்து சென்றுவிட முடியாது. அது முழு உண்மையும் இல்லை.  அவர் தருமபுரியில் பிரபலமான இதய நோய் மருத்துவர். 'எங்கள் மருந்தை எழுதித் தாருங்கள்... நாங்கள் மாதம் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தருகிறோம்' என்று பல மருத்துவ நிறுவனங்கள் அவரை அணுகியபோதும்,  அவர் சஞ்சலப்படாமல் அவர்களை மருத்துவமனையைவிட்டு வெளியே அனுப்பியவர்.

இவரைப்போன்று  மக்களுக்காக சேவை செய்யும் ஒரே நோக்கத்துடன் செயல்படுகிற எண்ணற்ற மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால், நாம் பொதுப்படையாக குற்றச்சாட்டுகளை முன் வைப்பதை விட்டுவிட்டு, உண்மையில் மருத்துவ துறையை புனரமைக்க, மீட்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

புதிய புதிய சூழலியல் பிரச்னைகள், வேலை சார்ந்த அழுத்தங்கள், புதிய நோய்களை உண்டாக்கும் இக்காலத்தில், மருத்துவத் துறையின் எதிர்காலமும், நம் எதிர்காலமும் வெவ்வேறானது அல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தம் மாத பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை மருத்துவத்திற்காக  ஒதுக்குகிறோம். அது வருடா வருடம் உயர்ந்து கொண்டே போகிறதே அன்றி,  குறைவதாக இல்லை.  அதனால், மருத்துவத் துறையின் மீட்சி என்பது நம் எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்டது. அதை மீட்பது நம் சுயநலமும் கூட...

சரி, யாரிடமிருந்து மருத்துவத் துறையை மீட்பது....? நிச்சயம் பெரும் மருத்துவ நிறுவனங்களிடமிருந்தும், மருந்து நிறுவனங்களிடமிருந்தும்தான். 

ஏன் நவீனத்தை எதிர்க்கிறீர்கள்...?:

'ஏன் எப்போதும் வளர்ச்சியையும், நவீனத்தையும் எதிர்க்கிறீர்கள்... மருத்துவமனை கார்ப்பரேட்டாக மாறினால் நல்லதுதானே, நோயாளிகளுக்கு தரமான சேவை கிடைக்கும்தானே...' என்பது உங்களது வாதமா?. இல்லை. நவீனத்தை எப்போதும் எதிர்க்கவில்லை. நவீன மருத்துவம் நிச்சயம் தேவைதான்.

ஒரு மென்பொருள் நிறுவனம், அதிக இலாபம் ஈட்ட வேண்டுமென்றால் அதற்கு அதிக வாடிக்கையாளர்கள் தேவை. அந்த வாடிக்கையாளர்களை அது தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அதனால் தொடர்ந்து லாபம் ஈட்ட முடியும்.  இதே கருத்தாக்கத்தில்தான் நவீன கார்ப்பரேட் மருத்துவமனைகளும் இயங்குகின்றன. அதைதான் எதிர்க்க வேண்டும் என்கிறேன்.

'இது அடிப்படையில்லாத குற்றச்சாட்டு. மருத்துவத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்...?' என்பீர்களானால், கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பொறுமையாக கேளுங்கள். இது எதுவும் எனது குற்றச்சாட்டல்ல. மருத்துவத் துறையில் இருப்பவர்களே முன் வைத்த குற்றச்சாட்டு.

அண்மையில்  அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே என்ற இரண்டு மருத்துவர்கள், “Dissenting Diagonisis" என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள்.  அந்த புத்தகத்தில்  இந்திய மருத்துவத் துறையில் நடக்கும்  முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் விரிவாக எழுதி இருந்தார்கள்.

பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகள், மக்கள் நலனுக்காக இயங்குவதை விட,  முதலாளிகள் நலனுக்காகதான் இயங்குகின்றன. மருந்து நிறுவனங்கள் அதிக பணம் ஈட்ட வேண்டும் என்பதற்காக, தேவையற்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அது சில சமயம் நோயாளிகளின் மரணத்திற்கும் காரணமாகிறது என்று அந்த மருத்துவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள். அவை எதுவும் மேலோட்டமான குற்றச்சாட்டுகள் இல்லை. பல மருத்துவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களையும் அந்த புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்கள். 

இப்போது முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ள சம்பவத்தை பொருத்திப் பாருங்கள். அந்த மருத்துவர்,  நோயாளி யாரென்று கூட முழுமையாக ஆராயாமல், ஏன் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேரச் சொன்னார் என்பது தெரியும்.

இந்தியா இன்னொரு அமெரிக்கா :

 

2007 ம் ஆண்டு, அமெரிக்க  ஆவணப்பட இயக்குநர் மைக்கேல் மூர், சிக்கோ (SICKO) என்ற ஆவணப்படத்தை எடுத்தார். அதில் தெளிவாக அமெரிக்க மருத்துவத் துறை, யாரின் நலனிற்காக இயங்குகிறது என்பதை விவரித்து இருந்தார். அமெரிக்க மருத்துவத் துறை முழுக்க முழுக்க மருத்துவ நிறுவனங்களின் கட்டுபாட்டிற்குள் போனதால்,  அமெரிக்க சாமான்யனுக்கு மருத்துவ செலவுகள் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமாகிறது. அதனால் மருத்துவத்திற்காக திருட்டுத்தனமாக கியூபா செல்கிறான் என்பதை பதிவு செய்திருப்பார்.


நாம்தான் இந்தியா, அமெரிக்காவாக ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டோம். இந்திய மருத்துவத் துறையை பெரும் நிறுவனங்களிடமிருந்து மீட்கவில்லை என்றால், நிச்சயம் விரைவில் மருத்துவச் செலவில் இந்தியா இன்னொரு அமெரிக்காவாக மாறும்.  நாம் கூட்டம் கூட்டமாக மருத்துவத்திற்காக எங்கே செல்லப் போகிறோம்....?

மருத்துவம் படித்த சேகுவேரா,  ஆதிக்கவாதிகளின் கரங்களிலிருந்து உலக நாடுகள் மீள வேண்டும் என்று விரும்பி,  பெரும் புரட்சியை நிகழ்த்தியவன். எல்லைகள் கடந்து போராடியவன். எல்லைக் கடந்து,  நாடுகளின் விடுதலையை யோசிக்க வேண்டாம். மருத்துவத் துறையை உண்மையாக நேசிக்கும் மருத்துவர்கள் குறைந்தபட்சம், தம் துறையையாவது பணமுதலைகளின் கரங்களிலிருந்து மீட்க வேண்டும்.

மருத்துவர்கள் தின வாழ்த்துகள்... !

- மு. நியாஸ் அகமது
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ