Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகை மயக்கும் மயிலாடி சிற்பங்கள்... உதவியை எதிர்பார்க்கும் சிற்பிகள்!

மிழர்களின் கலைத்திறனில் முக்கிய அங்கமாக விளங்குவது சிற்பக்கலைதான்.பெரிய கற்களை உடைத்து அதனை இறைவனாக இறைவியாக, தலைவனாக ,தலைவியாக, அன்றாடம் பயன்படும் பொருள்களாக உயிர்ப்பித்து உலாவ விடுகிற வல்லமை, சிற்பக்கலைஞனின் சிற்றுளிக்கு உண்டு. சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், தஞ்சாவூர் சுடுமண் சிலைகள், கள்ளக்குறிச்சி மரச்சிலைகள் வரிசையில், உலகையே வியக்க வைக்கும் கற்சிலைகளுக்கு பெயர் போன கிராமம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி.

நாகர்கோவிலில் இருந்து சுற்றுலாப் பகுதியான கன்னியாகுமரிக்கு சென்றாலோ அல்லது வட்டக்கோட்டைக்கு சென்றாலோ, போகும் வழியில் கல்லோடு உளி மோதும் ஓசை காதில் ஸ்வரம் மாறாத இசையாக ரீங்காரமிடும். மயிலாடி பகுதியில் இரவு பகலாக சிற்பப் பணி நடந்து வருகிறது. திரும்பிய திசையென எங்கு பார்த்தாலும், கற்கள் குவிந்து கிடக்கின்றன .இரும்பு பட்டறையில், இரும்பை உருக்கி அடித்து உருவாக்குவது போல இடையிடையே, பெருமாள், நடராஜர், ஐயப்பன், காமாட்சி, மீனாட்சி, துர்க்கை, சுடலைமாடன், புத்தர்,அகத்தியர், முத்தாரம்மன், சரஸ்வதி என செதுக்கியும், செதுக்காமலும் சிலைகள் கிளைத்து நிற்கின்றன.

ஒவ்வொரு சிற்பத்துக்கும் ஒவ்வொருவிதமான இலக்கணமும், கணக்கீடும் உண்டு. அது கற்றுக் கொண்டு வருவதில்லை. ரத்தத்திலேயே ஊறியிருக்கும்.சுத்தியலின் வேகம் கல்லில் இறங்கக்கூடாது. உளியோட நின்று போகணும். மனசு, கை, கண், காதுன்னு எல்லா அவயங்களும் ஒரே நேர்கோட்டில் வந்து நிற்கும். கல்லுக்குத் தகுந்த உளி இருக்கிறது. ஒரு கல்லைப் பார்த்தவுடனே அதுக்குள் இருக்கிற சிலையை கண்கள் கண்டுபிடிச்சிடுமாம். சிலைக்கு மேலே ஒட்டியிருக்கிற கற்களைப் பெயர்த்து எடுக்கிறது மட்டும்தான் சிற்பியோட வேலை. இன்றைக்கு சிற்பத்தொழிலில்  பல நவீனங்கள் புகுந்துவிட்டன. பண்டைய காலத்தில் எவ்வளவு பெரிய சிலையாக இருந்தாலும், உளியையும் சுத்தியலையும் வைத்துதான் வாட்டப்படுத்துவார்கள். கல்லை வெட்டியெடுக்க நாள்கணக்கில் உளியை வைத்து தட்டிக்கொண்டு இருப்பார்கள். இப்போது மெஷின் வந்து விட்டது. பெரிய கல்லை சேதாரமில்லாமல் நொடிப்பொழுதில் வெட்டிப் போட்டுவிடுகிறது. மெஷின் வந்தாலும் உளியும், சுத்தியலும்தான் சிலைக்கு உயிர் கொடுக்கிறது.

சிலைகளை வடிப்பதற்கான பாறாங்கற்கள் மதுரையை ஒட்டியுள்ள பேரையூர், ஆண்டிப்பட்டி அருகில் இருக்கும் சுப்புலாபுரத்திலும் ,குமரி மாவட்டம் மயிலாடியிலும்தான் கிடைக்கின்றன. இந்த இடங்களில் கிடைக்கும் கருப்புக்கல்லில்தான் தெய்வங்களின் சிலைகளையே வடிக்க முடியுமாம். மயிலாடியிலிருந்து தமிழகத்தை விட கேரளா, கர்நாடகாவுக்குத்தான் அதிக சிலைகள் செல்கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. லண்டன் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை, அமெரிக்காவில் உள்ள நடராஜர் சிலை ஆகியவை மயிலாடி மண்ணில் இருந்து சென்றவை .

மயிலாடி தவிர, சேந்தன்புதூர், காமராஜர் நகர், மார்த்தாண்டபுரம், வழுக்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சிற்பிகள் வசிக்கிறார்கள். சிற்பத்தொழில் சார்ந்த பிற தொழில்களும் இப்பகுதியில் நிறைந்துள்ளன. தத்ரூபமாகச் செதுக்கப்படும் சுவாமி சிலைகள் பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அம்மி, உரல், எல்கைக் கற்கள் உள்ளிட்டவைகளும் இங்குதான் தயார் செய்யப்படுகின்றன. சிலைகள் செய்வதற்காக 100-க்கும் மேற்பட்ட சிறு பட்டறைகளும், 15-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களும் மயிலாடி சுற்றுவட்டார பகுதிகளில்  அமைந்துள்ளன.

கற்சிற்பத் தொழில் மயிலாடியை மையம் கொண்டுதான் இயங்குகிறது. திருவிதாங்கூர் மன்னர்களால் நாடு முழுவதும் இருந்து சிற்பக்கலைஞர்கள் சுசீந்திரம் தாணுமாலைய பெருமாள் சுவாமி கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது சிலைகள் செதுக்குவதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டனர்.

5400 சதுர அடி பரப்பளவைக் கொண்டு 134 அடி உயரத்தில் அமையப்பெற்ற இக்கோயிலுக்கான கட்டுமானப் பணிகள், முழுமையடைய பல ஆண்டுகள் ஆனதாம். இதனால் தொழிலாளர்கள் நிரந்தரமாக இப்பகுதியில் தங்க ஆரம்பித்து விட்டனர். குமரி மாவட்டம் தவிர, கேரளத்தில் உள்ள சிற்பிகளும் ஒரே இடத்தில் தங்கியிருந்து வேலை செய்வதைக் கேள்விப்பட்டு, இங்கு வந்து கோயில்களுக்குத் தேவையான சிலைகளை செய்யத் தொடங்கினர். அன்று தொடங்கி இன்றுவரை இவர்களின் கைவண்ணம் உலகமெங்கும் தொடர்கிறது.

அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்த சிற்பத் தொழிலை ஒருங்கிணைத்து ஒரு வடிவம் கொடுத்ததும், பாதுகாப்பையும் ஏற்படுத்தித் கொடுத்ததும் சுப்பையன் ஆசாரி என்பவர்தான்.  1975ல் மயிலாடி கற்சிற்பத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியவர் இவர்தான். இச்சங்கம் உருவான பின்தான் மயிலாடி சிற்பிகளின் புகழ், உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை, கயத்தாறில் உள்ள கட்டபொம்மன் சிலை ஆகியவை மயிலாடி சுப்பையா ஆசாரியினால் உருவாக்கப் பட்டவை .

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாகர்கோயில் வந்தால், மயிலாடிக்குப் போகாமல் சென்னை திரும்பமாட்டார். இந்த கிராமத்தோடு அவருக்கு நெருக்கம். தெருத்தெருவாக நடந்து சிற்பம் வடிக்கும் தொழிலை பார்வையிடுவாராம். இதற்கு ஒரு காரணமுண்டு. சிவாஜியின் தாயார் உருவச்சிலையை அற்புதமாக செதுக்கிக் கொடுத்திருக்கிறார் சுப்பையா. ‘அம்மா உயிர்பெற்று நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது’ என்று சிவாஜி நெகிழ்ந்து போனாராம். அது முதல் அவரது விருப்பத்திற்குரிய இடமாகிவிட்டது மயிலாடி. இப்படி மயிலாடியின் சிலையழகில் மயங்கிப்போன பல பிரபலங்களும் உண்டு.

‘‘இந்தச் சிற்பத்தொழில் தெய்வீக அம்சம் கொண்டது. சிற்பியின் கைபட்டு உருவாகிற சிற்பம் கோடிக்கணக்கான பக்தர்கள் வணங்கிற சிலையாக கருவறைக்குள் போகிறது. அதனால் கட்டுப்பாட்டோடும், அச்ச உணர்வோடவும் சிற்பிகள் இருக்கிறார்கள். முதலில் கல்லில் கரித்துண்டால் சிற்பத்தை ஓவியமாக வரைந்து கொள்கிறார்கள். அதன்பின் காவி மூலம் அடையாளங்களை குறித்துக் கொண்டு  செதுக்கத் தொடங்குகிறார்கள். எல்லா பாகங்களும் செதுக்கி முடித்ததும்  விரதம் இருந்து, பூஜை செய்துதான் கண் திறக்கிறார்கள். இதற்கென  சிற்ப மந்திரங்கள் இருக்கிறது.முன்னோர்கள் மூலமாக வழிவழியாக இதைக் கற்றுக் கொள்கிறார்கள்.அப்படி கண் திறக்கப்படுற சிற்பத்துக்குத்தான் தெய்வீக அம்சம் இருக்கும்"  என்கிறார்கள் சிற்பிகள்.

சிற்பங்கள் மட்டுமின்றி கோயிலுக்கான தூண்கள்,காமராஜர், நேரு, முத்து ராமலிங்க தேவர்,சிவாஜி  போன்ற தலைவர்களின் சிலைகளும் செய்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இசைத் தூண்கள், மயிலாடி சிற்பிகளின் கலைத் திறன்தான். கேரளாவின் ஆற்றுக்கால் பகவதியம்மன் கருவறை சிற்பமும் இங்கு உருவானதுதான். இப்படி தமிழக கைத்திறனுக்கு சாட்சி சொல்ல உலகம் முழுதும் இருக்கின்றன மயிலாடி சிற்பங்கள்.

சிலைகள் செதுக்குவதற்காக, மயிலாடியில் உள்ள தெங்கம்பொத்தையை பல ஆண்டு காலமாக சிற்பிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட உள்ளூர் பிரச்னை மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக தெங்கம் பொத்தையில் இருந்து கற்கள் எடுக்கக் கூடாது என அரசு தடைவிதித்தது. இதையடுத்து சிற்பத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பாறையில் தங்கியிருந்து சிலை செய்ய தேவையான கற்களை வடிவமாக வெட்டிக் கொடுக்கும் தொழிலாளர்கள் பலர் வேலை வாய்ப்பை இழந்து மாற்றுத் தொழில் தேடி சென்றுவிட்டனர்.

கிரானைட் மாஃபியாக்கள் மலைகளை தோண்டியதால், அரசாங்கம் ஆங்காங்கே ஒட்டுமொத்தமாக கற்களை எடுக்க தடை போட்டுள்ளதால், சிற்பிகளுக்கு சிலை செய்ய கற்கள் எடுப்பதிலும் சிக்கல் இருந்து வருகிறது.

கற்கள் கிடைக்காத நிலையில் மதுரை, திருநெல்வேலி மாவட்டம் கருங்குளம், பணகுடி பகுதிகளில் உள்ள மலைகளில் இருந்து கற்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் தொய்யும் நிலைக்கு போகிறது. இதனால் உலகப் புகழ்பெற்ற மயிலாடி சிற்பக் கூடங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்படுகிறது என்று வருந்துகிறார்கள் கடவுள்களை உருவாக்கும் பிரம்மாக்கள்.

கல்லில் இருந்து கடவுளை உருவாக்கும் சிற்பிகளின் வேண்டுகோளை அரசாங்கம் செவிக் கொடுத்து கேட்பார்களா  என்பது  இறைவனுக்கும்  இறைவிக்கும்தான் வெளிச்சம்!.

-த.ராம்

படங்கள்.ரா.ராம்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close