Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷ்ணுப்பிரியா, சுவாதி, வினுப்பிரியா... நமக்கு சொல்லும் பாடம் என்ன?

மூன்று பெண்கள், மூன்று மரணங்கள், ஒரு செய்தி...!

 

சின்சியர் விஷ்ணுப்ரியா:

செப்டம்பர் 18, 2015 வெள்ளிக்கிழமை. திருச்செங்கோட்டில், ஒரு ஆசிரியரை காவலர் கன்னத்தில் அறைந்துவிட்டதாக கூறி, ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். கோகுல்ராஜ் வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்  காவல் துறை துணை கண்காணிப்பாளர் விஷ்ணுப்ரியா, சம்பவ இடத்திற்கு சென்று, ஆசிரியர்களை சமாதானப்படுத்துகிறார்.  ஆசிரியர்கள் கலைந்து செல்கிறார்கள். மதியம் ஆகிறது. சாலையெங்கும் வெயில் வழிந்தோடுகிறது. பிறகு, தன் அலுவலகத்திற்கு சென்று விட்டு, மாலை 4.30 மணிக்கு வீட்டிற்கு செல்கிறார். அரை மணி நேரத்தில் மீண்டும் வந்து தன்னை அழைத்துச் செல்ல தன் வாகன ஓட்டுநரிடம் சொல்கிறார் விஷ்ணுப்ரியா.

 


இதனிடையே உதவி ஆய்வாளர், ‘கோகுல்ராஜ் கொலைவழக்கு’ குறித்து பேச விஷ்ணுப்ரியாவை அழைக்கிறார். மறுமுனையில் அழைப்பை யாரும் எடுக்கவில்லை.  விஷ்ணுப்ரியாவை அழைக்கச் சென்ற ஓட்டுநர், வெகு நேரமாக கதவுகளைத் தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை.  ஜன்னல் வழியாக பார்த்த போது விஷ்ணுப்ரியா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.


உயர் காவல் அதிகாரிகள் அனைவரும் நாமக்கலை முற்றுகையிடுகின்றனர். அவர் எழுதியதாக கூறப்படும் 8 பக்க தற்கொலை கடிதம் கைப்பற்றப்படுகிறது. அவர் மரணம் குறித்து பல வதந்திகள் பரிமாறப்படுகிறது. அவர் தலித் என்பதால், ஆதிக்க சாதியைச் சேர்ந்த  உயர் அதிகாரிகளால் உதாசீனப்படுத்தப்பட்டார், கோகுல்ராஜ் கொலை வழக்கில் அளவிற்கு அதிகமான அழுத்தம் அவருக்கு கொடுக்கப்பட்டது, குடும்ப பிரச்னை என அனைத்து கோணங்களிலும் ஊகங்கள் உலாவின. அவர் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று அவரது  தந்தை கோரிக்கை வைக்கிறார். அது தமிழக அரசால் நிராகரிக்கப்படுகிறது. மிக நீண்ட போராட்டத்திற்கு பின், நேற்று சென்னை உயர் நீதி மன்றம் அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுகிறது.

இறை நம்பிக்கை சுவாதி:

 

சுவாதி,பிராமண குடும்பத்தை சேர்ந்தவள். மென்பொறியாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு கனவாக இருக்கும் உலகத்தரம் வாய்ந்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவளது அக்கா நித்யாவின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், மிகுந்த இறைநம்பிக்கை உடையவள். இயற்கையை நேசிப்பவள். மலையேற்றம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஜூன் 24 ம் தேதி, நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தபோது, ஒருவன் அரிவாளால் அவளை வெட்டுகிறான். அந்த இடத்திலேயே அவள் துடிதுடித்து இறக்கிறாள். அவள் வழக்கமாக செல்லும் அந்த 6.46 தொடர்வண்டி, அன்று அவள் இல்லாமல் செல்கிறது. என்றும் அவள் இல்லாமல்தான் இனி செல்லும்!

அபலை வினுப்பிரியா:

வினுப்பிரியா இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி. இடைநிலை சமூகத்தைச் சேர்ந்தவள். சென்ற மாத இறுதியில் ஒரு மோசமான நாளில், அவளின் படம் அரை நிர்வாணமாக சித்தரிக்கப்பட்டு (உண்மையில் எழுதுவதற்கு கூசுகிறது... வேற எப்படி  எழுதுவது...? ) சமூக ஊடகத்தில் பரவவிடப்படுகிறது. அவள் அதிர்ச்சியடைகிறாள். மிகவும் அஞ்சி குடும்பத்துடன் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறாள். வீட்டின் சந்தேகமான பல கேள்விகளுக்குப் பின், இந்த விஷயம் காவல் துறையிடம் எடுத்துச் செல்லப்படுகிறது. அவர்கள் வழக்குப் பதிய மறுக்கிறார்கள். வினுப்பிரியாவின் ஒழுக்கத்தை சந்தேகத்திற்கு உட்படுத்துகிறார்கள். வன்மமான பல கேள்விகளுக்குப் பின், ஒரு செல்ஃபோன் வாங்கி தரச் சொல்லி கேட்கிறார்கள். அதுவும் வாங்கித் தரப்படுகிறது. இரண்டு நாட்களில்  வினுப்பிரியாவின் இன்னொரு படம், அதேபோல் மோசமாக சித்தரிப்புக்குள்ளாகி வெளியாகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து, ஜூன் 27 ம் தேதி தூக்கில் தொங்குகிறாள் வினுப்பிரியா.


படத்தை பகிர்ந்தவனை கைது செய்யாமல், அவளது சடலத்தை வாங்க மாட்டோம் என்கிறார்கள் வினுப்பிரியா உறவினர்கள். ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின் காவல் துறை இறங்கி வருகிறது. காவல் துறை கண்காணிப்பாளர் மன்னிப்புக் கேட்கிறார். சடலம் வாங்கிக் கொள்ளப்படுகிறது. அடுத்த நாள் அவள் படத்தை பகிர்ந்த கயவன் கைது செய்யப்படுகிறான்.

மூன்று கதைகளை இணைக்கும் புள்ளி:

இந்த மூன்று சம்பவங்களும் வெவ்வேறு இடங்களில், சமூகத்தின் வெவ்வேறு படிநிலையில் இருப்பவர்களுக்கு நிகழ்ந்தவை. இந்த மூன்றையும் இணைப்பது ஒன்றுதான்.  இறந்தவர்கள் அனைவரும் பெண்கள்.

உண்மையில் இந்த சம்பவங்கள் எதனை சொல்ல வருகின்றன....?  யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அதிகாரமிக்க காவல் துறை அதிகாரியாக...  இடைநிலை சாதியாக, பிராமணராக... யாராக இருந்தாலும் பெண்களை சுலபமாக வீழ்த்திவிடலாம் என்பதையா...? ஒரு பெண்ணைக் கத்தியால் கொல்லலாம்,  ஆயுதத்தின் மீது விருப்பம் இல்லையா... சமூக ஊடகத்தில் ஒரு படத்தை பகிர்வதன் மூலம் கொல்லலாம் என்பது உண்மையில் மிக மோசமான சமிக்ஞை. இது ஆரோக்யமான சமூகத்திற்கு என்றுமே நல்லதாக இருக்க முடியாது.

விஷ்ணுப்பிரியா, ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேலெழுந்து வருகிறாள். ஒரு வழக்கை நேர்மையாக நடத்த முற்படுகிறாள். ஆனால், அவள் சார்ந்த துறையே அவளுக்கு அழுத்தங்களை தந்து அவள் சாவுக்கு காரணமாகிறது. அவளுக்கு பரிந்துப் பேச இன்னொரு பெண் வருகிறாள். விஷ்ணுப்பிரியா மரணத்திற்கு காவல் துறை உயர் அதிகாரிகள்  தந்த அழுத்தம்தான் காரணம் என்கிறார். அவர் வாயும் அடைக்கப்படுகிறது. விஷ்ணுப்பிரியா தற்கொலை சமயத்தில், இந்த வழக்கு சம்பந்தமாக பலருடன் உரையாடியபோது, அவர்கள்  சொன்னது, விஷ்ணுப்பிரியா தோற்றத்தை அவள் ஆண் உயர் அதிகாரிகள் கிண்டலுக்கு செய்தனர் என்பது. ஆண் மனம் எவ்வளவு சீழ்ப் படிந்து போயிருந்தால், தன் சக பெண் ஊழியரை தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும்...? 

சுவாதியை ராம்குமார் பல நாள் பின்தொடர்ந்து வந்து தொல்லைக்கொடுத்தான் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை அவள் வீட்டுடன் இதை பகிர்ந்து கொள்ளும் சூழலை நமது சமூக அமைப்பு ஏற்படுத்தி கொடுத்திருந்தால், அவள் இறந்திருக்கவே மாட்டாள்.

ஆம். நமது சமூக அமைப்பானது, ஒரு பெண் தன் சிக்கலை வீட்டில் சொல்லினால், அவளையே குற்றச் சுமத்துவதாகதான் இருக்கிறது.

 வினுப்பிரியாவின் படம்  மோசமாக சித்தரிக்கப்பட்டு சமூக ஊடகத்தில் வெளியிடுப்படுகிறது.  அவளை அவர் குடும்பம் அரவணைத்திருந்தால், நிச்சயம் அவள் இந்த முடிவை நாடி இருக்க மாட்டாள். இதில் வினுப்பிரியாவின் பெற்றோர் மீது  மட்டும் குற்றம் சொல்லி தப்பித்துவிட முடியாது. அவர்களும் சமூக அழுத்தத்தின் பலியாடுகள்தான். 

சக மனிதர்களைப் போட்டியாளர்களாக மட்டும் கருதவைக்கும் உலகமயமும், வணிகமயமான கல்விச் சூழலும், பெண்கள் தங்கள் மனஅழுத்தத்தை  பகிர்வதற்கு எந்த வாய்ப்பும் தரமறுக்கிறது. இப்படியான காலகட்டத்தில் பெண்களுக்கு குறைந்தபட்சம் வீடாவது, ஆறுதல் அளிக்கும் மடியாக இருக்க வேண்டும். ஆனால், அதுவும் அப்படி இல்லை என்பதுதான் நிதர்சனம். சமூகவெளியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவளது குடும்பம் செவி சாய்த்து, ’என்ன நடந்தாலும் நான் உன்னோடு இருக்கிறேன்’ என்று கரங்களை இறுகப்பற்றி இருந்தால் நிச்சயம் எந்த பெண்ணும் மரணத்தை நாடமாட்டார்கள்.

இதற்கெல்லாம மேலாக, ஆண்கள் தம் சகபெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை, மரணத்தின் மூலம், இந்த மூன்று பெண்களும் சமூகத்திற்கு சொல்லிவிட்டு போய்விட்டார்கள். பெண்கள் எப்போதும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது மரியாதையை மட்டும் தான். மரியாதை என்றால், வயதிற்காக மட்டும் தருவது அல்ல, அவர்கள் எடுக்கும் முடிவிற்கும், அவர்களின் சிந்தனைக்கும் தரும் மரியாதை. ஒரு பெண் தம் காதலை மறுக்கிறாள் என்றால், அவளின் முடிவிற்கு மரியாதைக் கொடுப்பது தான் உண்மையான ஆண்மையாக இருக்கும். இந்த நவீன காலத்தில் அது தான் பேராண்மையும் கூட.

இதை நம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

இல்லை.... இது வேறு யாருக்கோ நிகழ்ந்ததுதானே என்று இதை வெறும் செய்தியாக கடந்துச் செல்ல முயல்வீர்களாயின், மன்னியுங்கள்... இதே நிலை நாளை நம் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம்... நாளை நம் பிள்ளைகள் கொல்லப்படலாம். இல்லை தற்கொலைக்குத் தூண்டப்படலாம். அல்லது ஒரு கொலைகாரனாக நிற்கலாம். பயமுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை.  வளர்ச்சி என்பது சீழ்களையும் கொண்டது. அந்த சீழை நாம் கண்டுக்கொள்ளாமல் விடுவோமாயின் அது புற்றாக மாறி நம் சமூகத்தையே அழித்துவிடும்.  

அந்தக் கொலை, அதன் காரணம். அந்த தற்கொலை, அதன்  காரணம் என்று தட்டையான காரணங்களை மட்டும் தேடி வழக்கை முடிக்காமல், ஒரு பரந்துப்பட்ட விவாதங்களை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. ஏனெனில், பெண்களின் எதிர்காலமும் ஆரோக்யமான சமூகத்தின் எதிர்காலமும் வெவ்வேறானது அல்ல. பெண்களை மதிக்காத, வீழ்த்திய சமூகங்கள் வரலாற்றில் மிக பரிதாபமாக வீழ்ந்து இருக்கின்றன.

நம் நல் வாழ்வை விரும்புகிறோமா இல்லை வீழத்தான் விரும்புகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டிய நேரம் இது! 

- மு. நியாஸ் அகமது | ஓவியம் : பிரேம் டாவின்சி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close