Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமூகக் கல்வி மட்டுமே இனி சுவாதிகளையும் வினுப்பிரியாக்களையும் காப்பாற்றும்!

மிழகத்தில் கடந்த சில மாதங்களாக  அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொலை சம்பவங்கள், அதிர்ச்சி அளிக்கின்றன. சொத்து மற்றும் தனிப்பட்ட விரோதம் இதில் ஒருபக்கம் என்றால் 'என் காதலை ஏற்கவில்லையென்றால் உன்னை கொலை செய்வேன்' என்ற மனநிலையில் நிகழும் கொலைகள் பெரும் அதிர்ச்சியை தருகின்றன. கடந்த பல நாட்களாக பரபரப்பை கூட்டிவரும் சென்னை மென்பொறியாளர் சுவாதி கொலை இதன் உச்சம்.

சுவாதி கொலை சம்பவத்தில் கொலையாளியை கண்டுபிடிப்பதற்குள், அதே போன்ற சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தங்களின் பெண் பிள்ளைகள் மீதான கெடுபிடிகளை,  பல குடும்பங்கள் மேலும் அதிகமாக்கிக்கொள்ள வைத்துள்ளன இந்த இரு சம்பவங்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் நடக்கிறது. பொது இடத்தில் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் நிலைக்கு அவர்களை துண்டியது எது என்பது போன்ற பல கேள்விகளுடன், மனநல நிபுணர் அபிலாஷாவிடம் பேசினோம்.

"சுவாதி கொலைக்கு ஒருதலைக் காதல் காரணமாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் காதலே கிடையாது. பெண்களை சில ஆண்கள் எப்போதும் ஒரு பொருளாகவே பார்க்கிறார்கள். அதாவது எனக்கு ஒரு பொருள் தேவை, அந்த பொருள் எனக்கு எதிராக எந்தவிதமான கேள்வியும் கேட்கக்கூடாது. மேலும் தன்னை எந்த நேரத்திலும் நிராகரிக்கக்கூடாது இதுதான் சில  ஆண்களின் பொதுவான சிந்தனை.
 
ஏதோ சில காரணங்களால் ஒரு பெண், மேற்கூறிய மனநிலையைக் கொண்ட ஆண்களை நிராகரிக்கும்போது ஒரு 'பொருள்' எப்படி இதெல்லாம் செய்யலாம் என கோபம் அடைகிறான் அந்த ஆண். அதாவது ஒரு 'பொருள்' தன்னை நிராகரிக்கும் அளவுக்கு தன்னுடைய நிலைமை மோசமாகவிட்டதே என மனதிற்குள் குமைகிறார்கள். இது ஒருவிதமான சைக்கோ நிலை ஆகும்.

மேலும், ஆண்களில் சிலர் காதல் விஷயங்களில் எமோஷனால் டைப். அதாவது கண் அழகாக இருக்கிறது, தலை நீளமாக உள்ளது, குரல் இனிமையாக இருக்கிறது என சின்ன சின்ன விஷயங்களில் கூட ஒரு பெண்ணை காதலிக்கத் துவங்கிவிடுவார்கள். ஆனால் பெண்கள் அதற்கு நேர்மாறான சுபாவம் கொண்டவர்கள். ஆண்களின்  இயல்பு என்ன, தன்னை எப்படி பார்த்துக் கொள்வான், குடும்பம் எப்படி நடத்துவான், அவனது பழக்க வழக்கங்கள் என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து பிறகே காதலிக்க ஆரம்பிக்கிறாள்.

சில வகையான ஆண்கள் எமோஷனலாக காதலிக்கும்போது, பெண்கள் நிராகரித்தால்,  'நீ எப்படி என்னை வெறுக்கலாம். அதற்கெல்லாம் உனக்கு உரிமை கிடையாது' என நினைக்கிறான். இன்னும் சில ஆண்கள்,  தான் ஒரு அழகான பெண்ணைக் காதலிப்பதாக நண்பர்களிடம் பெருமையாக சொல்லி வைத்திருப்பார்கள். இந்த நிலையில் அது தோல்வியடையும்போது அல்லது காதல் ஏற்கப்படாதபோது அதை பெருத்த அவமானமாக கருதுகிறார்கள். அதுவரை அவள் மீதிருந்த காதல் குரோதமாக மாறுகிறது. அந்தப் பெண்ணை பழித்தீர்க்கும் மனநிலைக்கு வருகிறார்கள்.

அதனுடைய விளைவுதான் கொலை வரை செல்கிறது. கொலை செய்த பிறகும் இத்தகைய ஆண்கள், ' அவள் என்னை நிராகரித்தாள். அதனால்தான் இந்த தண்டனை' என தன் தரப்பை நியாயப்படுத்துவார்கள். 'அவளால்தான்  நானும் கொலை செய்தேன், என்னுடைய வாழ்க்கையும் இப்படி ஆகிவிட்டது' என்று சொல்வார்களே தவிர, கடைசி வரை தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ளவேமாட்டார்கள்” என்கிற அபிலாஷா, இத்தகைய ஆண்களின் இதுபோன்ற நடவடிக்கைக்கு காரணம் என்ன என்பது குறித்தும் விரிவாக பேசினார்.

“இதற்கு அந்த ஆண் மட்டும் காரணம் இல்லை. இந்த சமூகம் அப்படித்தான் உள்ளது. அதாவது, ஒரு பெண் எப்போதும் ஆணுக்கு கீழ்தான் இருக்க வேண்டுமென கூறுகிறார்கள். ஆனால் அதற்கு எதிராக செயல்படும் பெண்கள் மீது, ஆண்கள் வன்முறையை ஏவுகிறார்கள். ஆசிட் வீசுவது, கொலை செய்வது என அவர்கள் வன்முறை செயல்கள் நீட்சி அடைகின்றன. இது மாற வேண்டுமெனில் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

மேலும் நம்முடைய சமூகமும் ஆண்களுக்கு தரும் முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது ஆணுக்கு பெண் நிகர் என்பதை வலியுறுத்தவேண்டும். ஆனால் பெண்கள் வேலைக்குப் போன பிறகு, இந்த நிலைமை சற்று மாற துவங்கியுள்ளது என்றே சொல்லலாம். 'பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்' என ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள் இந்த தலைமுறை பெற்றோர்கள். இதனால் இன்னும் சில ஆண்டுகளில் முழுமையான மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது" என்கிறார்.

பொதுமக்கள் பலர் சுற்றியும் இருக்க, சுவாதி கொலை நடந்தது. அங்கிருந்தவர்களில் ஒருவரும், அந்தப் பெண்ணை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கவில்லை. சமூகத்தின் இந்த செயல் சரிதானா என்பது குறித்து சமூக ஆர்வலர் ஓவியாவிடம் கேட்டோம்.

" இந்த சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயத்தை இழந்துவருகிறது. அதாவது தனக்கு ஏதாவது நடக்காதவரை அடுத்தவரைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என நினைக்கிறார்கள். தேவையில்லாத விஷயங்களை நாம் ஏன் செய்ய வேண்டுமென நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான செயல். சுவாதிக்கு நடந்த மாதிரியான சம்பவங்கள் எப்போது வேண்டுமானாலும் யாருக்கும், எங்கும், ஏன் நமக்கே கூட நடக்கலாம்  என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, ஏன் அதை நாம் எதிர்க்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது பொதுமக்கள் அதை எதிர்க்கத் துணிந்தால், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

'தான் தன்னுடைய வேலைகளை சரியாகச் செய்தால் போதும் ' என்பதுதான் இன்றைய உலகில்,  மக்கள் ஒவ்வொருவரின் எண்ணமாக இருக்கிறது. அவர்களின் சூழலும் அப்படிதான் உள்ளது. சுவாதி விவகாரத்தில் காலையில் வேலைக்குப் போகும் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்களை எதிர்த்தால் அல்லது அந்த பெண்ணுக்கு உதவி செய்தால் தனக்கு எதாவது பிரச்னை வரும் என அச்சப்பட்டிருக்கலாம் அங்கிருந்த மக்கள்.

மேலும் இந்த உதவியினால் தன்னுடைய பணிக்கு தாமதமாக போக வேண்டியிருக்கும். அதன் விளைவாக பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலகத்துக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு பதில் சொல்லுவது தனக்கு இழுக்கு எனவும் நினைக்கிறார்கள். மேலும் அதனுடைய நீட்சியாக தன்னுடைய வேலை பறிபோகலாம் என்ற பயமும் பலருக்கு உள்ளது. ஒருநாள் அலுவலகத்துக்கு போகவில்லை என்றால் கூட பலவேலைகள் அடுத்தநாள் செய்ய வேண்டியிருக்கும் என்ற மன அழுத்தத்தில்தான் இன்று பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதற்கு அடுத்து பெரிய சிக்கலாக இருப்பது பயம். அதாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது அதை தடுக்க நாம் போனால் நமக்கு ஏதாவது நடந்து விடுவோமோ என நினைக்கிறார்கள். இந்த சமூகமும் இவர்கள்  இப்படி இருப்பதைத்தான் விரும்புகிறது. இங்குள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்துமே அடுத்தவர்களுடன் ஏற்படும் நெருங்கிய நட்பு வட்டத்தை விரும்புவதில்லை. அதாவது பள்ளி மற்றும் அலுவலகங்களில் யாராவது நெருங்கிய நட்புடன் இருப்பதை எப்படி தடுப்பது என்றுதான் பார்க்கிறது. பள்ளிகளிலும் குழந்தைகள்  ஒருவருடன் ஒருவர் பேசுவதை தடுக்கிறார்கள். அடுத்த குழந்தைக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் கூட, எந்த குழந்தையும் எதுவும் செய்யக்கூடாது என நினைக்கிறார்கள்.

அப்படி குழந்தைகள் வளர்வதைதான் சமூகம் ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக குழந்தைகள், அடுத்தவருக்கு பிரச்னை ஏற்பட்டால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள். இது போன்ற நடவடிக்கைகளை குறைத்து, சமூகம் சார்ந்த பாடத்திட்டங்களை உருவாக்கி அதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தாலே நல்ல சமூகத்தை உருவாக்க மூடியும்.

இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு உண்டு. அதை தேவையான நேரத்தில் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் நம்முடைய அடுத்த தலைமுறை மட்டுமல்ல; இந்த தலைமுறையும் நிம்மதியாக வாழ முடியும். இதை உணர்ந்தாலே வேடிக்கை பார்க்கும் நிலை மாறி எதிர்க்கும் குணம் உருவாகும்" என்றார்.

ஒருதலைக் காதல் அல்லது வேறு எந்த காரணமாக இருந்தாலும்  சரி, ஒருவரை கொலை செய்யும் உரிமையும் துணிச்சலும் எங்கிருந்து வருகிறது...அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? இதற்கு பெரும்பாலானவர்களிடம் இருந்து வரும் பதில் சமூகம்தான். சமூகம் என்பது வேற்றுக் கிரகம் கிடையாது. நாம்தான் சமூகம். எனவே நம்முடைய பிள்ளைகள் எப்படி வளர வேண்டும். வாழும் சூழல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

- இரா.ரூபாவதி
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close