Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை டூ ஆந்திரா ! சாக்லெட் டூ பான் மசாலா ! ரூ. 500 கோடி, 10 கிடங்கு... மிரட்டும் போதை விவகாரம் !

முதல்வர் தொகுதியான சென்னை ஆர்.கே.நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தண்டையார் பேட்டை. இங்குள்ள பள்ளியில் மாணவன் ஒருவன் கடந்த (ஜூலை- 2016) 4-ம் தேதி பள்ளிக் கூடம் அருகே கடையில் வாங்கிச் சாப்பிட்ட சாக்லெட்டால், மயங்கி கீழே விழ, அந்த நிமிடம் தொற்றிய பரபரப்பு தமிழகம்  முழுவதும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள், ஆர்.கே.நகரின் சுகாதாரத்துறை அதிகாரிகள் என்று அரசு சக்திகள் மொத்தம் திரண்டு, மாணவனின் மருத்துவ சிகிச்சைக்கு ஆளாய்ப் பறந்தது.

போதை சாக்லெட்டைச் சாப்பிட்டு விட்டு சிகிச்சையில் இருந்த மாணவன், சாக்லெட் சாப்பிட்ட அன்றிலிருந்த அதே மயக்க நிலையிலேயே தொடர்ந்து மருத்துவ மனையில் இருந்து வருகிறான் என்கிறது மருத்துவமனை வட்டாரம். 

ஒரு சம்பவம் நடந்து முடிந்த பின்னரே, அதுகுறித்த விழிப்புணர்வு, ரெய்டு என்றெல்லாம் களத்தில் இறங்கும் அதிகாரிகள் , இந்த விவகாரத்திலும் 'மாணவன் சுருண்டு விழுந்த' பின்னர், நடத்திய ரெய்டில் பெரும்பாலான கடைகளில் 'ஜாலி சாக்லேட்' இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயகுமார், உதவி கமிஷனர்கள் ஆனந்தகுமார், ஸ்டீபன், ஆர்.கே.நகர் சட்டம் -ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் ஆகியோரைக் கொண்ட ஸ்பெஷல் டீமும், மருத்துவத்துறை, மருந்து கட்டுப்பாடு இயக்ககம், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்று பல டீம்கள் இந்த ரெய்டில் அதிரடியாகக் களம் இறங்கியுள்ளன.

ஆர்.கே. நகரின் பட்டேல் நகர் கடையில் 'ஜாலி' சாக்லெட் வைத்திருந்த சுரேஷ்பகதூர் என்பவரது கடையில் இருந்து ஏராளமான போதை சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவருடைய வாக்குமூலத்தில், " பீகாரில் இருந்து மார்க்கெட்டிங் செய்கிறார்கள், நாங்கள் இதை 'பாங்கு' என்றுதான் சொல்வோம். பெரியவர்கள் பசி நன்றாக எடுக்க வேண்டும் என்று வாங்கிச் சாப்பிடுவார்கள், குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுப்பார்கள்.
இது ஆளை காலி செய்யும் அளவுக்கு போகும் என்று நான் அறியவில்லை" என்றிருக்கிறார் சுரேஷ்பகதூர். அதேபோல் தண்டையார் பேட்டையில் 'ஜாலி' சாக்லெட் விற்ற பீம் என்பவரும் சிக்கியுள்ளார்.

மேலும் ஆர்.கே.நகரின் சுந்தரம் பிள்ளை நகரில் மோதிலால் என்பவர் கடையில் 25 போதை சாக்லெட்டுகள் சிக்கின. சாக்லெட் உறையில் பகிரங்கமாகவே, இந்தி, ஆங்கிலத்தில் ‘பாங்கு’ கலந்திருப்பதாக எழுதப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன், "பிடிபட்ட போதை சாக்லெட்டுகள், மொத்தமாக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்த பின்னரே சாக்லெட்டுகளில் என்ன பொருட்கள் கலந்திருக்கின்றன என்பது  குறித்து தெரிய வரும்" என்கிறார்.

போதை சாக்லெட்டுகளுக்கு விரித்த வலையில் பான் மசாலா, குட்கா, மாவா போன்ற அடிஷனல் போதை வஸ்துக்களும்  சிக்கிக் கொள்ள விவகாரம் பெரிதாய் சூடு பிடித்துள்ளது.கொளத்தூர், ஹரிதாஸ் மெயின் தெருவில் 50 கிலோ, அதற்கடுத்த 6 இடங்களில் நடத்தப் பட்ட 185 கிலோ என்று அடுத்தடுத்து பொருட்கள் சிக்கியுள்ளன.

சென்னையில் அடையாறு, அண்ணாநகரில் படிக்கும் “பெரிய இடத்து’ மாணவர்களிடம், ஒரு கும்பல் நண்பர்களாக பழகி, அவர்களுக்கு இலவசமாக போதை வஸ்துகளை சப்ளை செய்கிறது. “ஸ்லீப்பரி ஸ்லாப்’ என்ற குறியீட்டில் செயல்படும், இவர்களின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்களின் தொடர்பும் இருக்கக் கூடும் என்ற அதிர்ச்சிக் கிளப்புகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

சென்னையில்,  கஞ்சா, பிரவுன் சுகர், ஓபியம், குட்கா, அபின், கேட்டமைன்’ என பல்வேறு வகையான போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல், செயல்பட்டு வருகிறது. ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனை அவுட்-கேட், ஓட்டேரி, கெல்லீஸ் சிக்னல், அயன்புரம், ஏகாங்கிபுரம், செம்பியம் -பட்டேல் ரோடு, ரயில்வே மார்க்கெட், வியாசர்பாடி, சர்மா நகர், முல்லை நகர்,சிந்தாதரிப்பேட்டை,தரமணி,பெசன்ட்நகர் பீச்,மெரீனா பீச் ஆகிய பகுதிகளை கஞ்சா விற்பனையின் கேந்திரமாகவே சிலர் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு அந்தந்தப்  பகுதி அரசியல்வாதிகள் சிலரின் பக்கபலமும் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை மன்றோ சிலை அமைந்துள்ள தீவுத் திடல் ஒட்டிய குடியிருப்புப் பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பகிரங்கமாக விற்பனை செய்து வந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் ஒருவரை கஞ்சா போதைக்கும்பல் வெட்டிக் கொலை செய்தது.இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தினாலும் இன்னமும் அங்கே கஞ்சா விற்பனை  வெகுவேகமாகத்தான் நடந்து வருகிறது.       

அதே போல வடசென்னையின் முக்கிய பகுதியான புளியந்தோப்பும், பேசின்பாலமும் சந்திக்கிற இடத்தில் நான்குமுனை கஞ்சா வியாபாரிகளின் தொழில் போட்டியில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.

இரு தரப்பிலும் ஆண்டுக்கு 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனாலும் கஞ்சா விற்பனை தொய்வில்லாமல் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இந்தக் கூட்டத்தின் தலைவியான கஞ்சா கிருஷ்ணவேணி தன்னுடைய கடைசி காலமான 80-வது வயதிலும் கஞ்சா விற்பனையின் 'மொத்த கொள்முதல் தலைவி'யாக வாழ்ந்து விட்டுத்தான் அண்மையில் இறந்து போனார்.

சென்னையில் அதிகளவு (15முறை) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு, ஓராண்டு என சிறைப்பறவையாய் வாழ்ந்தாலும், இவர் சார்பில் வெளியே இவருடைய 'சிஷ்ய கோடிகள்' கஞ்சா விற்பனையைத் தொடர்ந்தே வந்தனர், இன்னமும் தொடர்கின்றனர்.

ஆந்திராவிலிருந்து வரக்கூடிய கூட்ஸ் ரயிலில் ஒரு டீமும் பயணிகள் ரயிலில் ஒரு டீமும் கஞ்சா மூட்டைகளை பத்திரமாக கொண்டு வந்து பேசின்பிரிட்ஜ், தண்டையார் பேட்டை வைத்தியநாதன் பாலம் வழியாக இறக்கி ஏற்றி செயலாற்றுவது ஆர்.கே.நகர் தொகுதி மக்களே அன்றாடம் பார்த்து விட்டு முகம் சுளித்துச் செல்லும் அன்றாடக் காட்சி.சாதாரணமாகவே கஞ்சா வின் போதை அசாத்தியமான 'கிக்' தரக் கூடிய ஒன்று என்கிறார்கள். 'அதை இனிப்புடனும், குளிர்ந்த பொருளுடனும் கலந்து சாப்பிட்டால் இன்னும் 'கிக்' உச்சத்தை தொடும்' என்கிற கஸ்டமர்கள், அதன் காரணமாக உருவானதுதான் கஞ்சா சாக்லெட், கஞ்சா ஐஸ்கிரீம் என்று விளக்கம் கொடுத்து பதற வைக்கிறார்கள் இந்தத் தொழில் கல்லா கட்டுபவர்கள்.
 
பணக்கார வீட்டுப் பிள்ளைகளை, குறிப்பாய் மாணவர்களை நோக்கி நகரும் 'ஸ்லீப்பர் ஸ்லாப்’ கும்பலின் பிடியில் சென்னை அடையாறு, அண்ணாநகர், மத்திய கைலாஷ், ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள பணக்காரர்களின் வாரிசுகள் சிக்கியுள்ளதாகவும் ஒரு "டீட்டெய்ல்ட்- ரிப்போர்ட்" இருக்கிறது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

செங்குன்றத்தில் உள்ள பான்மசாலா விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் வீடுகளில் செய்யப்பட்ட  ரெய்டில், சட்ட விரோதமாக பான்மசாலா, குட்கா,புகையிலை பொருட்கள் விற்ற ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இதன் மூலம் ரூ.500 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு செய்து இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குடோன்கள் அமைத்து பான்மலாசா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களைத்  தயாரிப்பதாகவும் ஒரு தகவல் கிடைக்கவே அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ரெய்டில் சோத்துப்பாக்கம், கோட்டூர் சாலையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான 8 குடோன்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

ரைஸ்மில் என்ற பெயரில் இயங்கிய இந்த குடோன்கள் பான்மசாலாவும், குட்காவும் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. குடோன்கள் ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்குச்  சொந்தமானது என தெரிய வந்தது. அவர் சென்னை அண்ணா நகரில் வசிக்கிறார். குடோனில் இருந்த மேலாளர் ராஜேந்திரனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த சோதனைகள் நடப்பதே அறியாமல் வழக்கமாக அங்கே பான் மசாலா தயாரிப்புக்கான மூலப் (ரசாயன) பொருட்கள் ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராமல் சிக்கியது. லாரியுடன் அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
சென்னையின் புறநகரான செங்குன்றத்தைத் தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பான்மசாலா, குட்கா குடோன்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் 30 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

தமிழக முதல்வர் தொகுதி மாணவன் சாப்பிட்ட சாக்லெட்டின் இனிப்பு, சமூக விரோத கும்பலுக்கு கசப்பாக திரும்பி அது தமிழகம் தாண்டி ஆந்திரா வரையில் போயுள்ளது. பான்பராக், பான் மசாலா போன்றவைகளை பதுக்கி வைத்திருக்கும் கிடங்குகள் சிக்கியுள்ளன.

500 கோடி ரூபாய்க்கு மேல் "பான் மசாலா" வணிகத்தில் (?) வரி ஏய்ப்பு செய்தது வெளி வந்திருக்கிறது. எல்லாம், எல்லாமே இரண்டு நாள் மட்டுமே நடத்தப்பட்ட  ரெய்டில் சிக்கியது என்பது கவனிக்கத்தக்கது.

ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close