Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு பெண்ணுக்கு கால் டாக்ஸி பயணம் கொடுத்த வேதனை!

டிப்படை வசதி முதல் நவீன வாழ்வின் ஆடம்பரங்கள் வரை குவிந்திருக்கும் நகரங்கள், இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்பதை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சம்பவங்கள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. விலாசனி ரமணி , எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர். அவர் கடந்த ஞாயிறு இரவு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் செல்ல, ஓலா கால் டாக்சியை புக் செய்துள்ளார். அது 15 கி.மீ தூர பயணம்தான். வாகன நெரிசல் அதிகமாக இருந்தால் கூட ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். அனால், அந்த பயணம் அவருக்கு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. காரணம்...? ஓட்டுநரின் மோசமான நடவடிக்கை.

அன்று என்ன நடந்தது?

திருவான்மியூரிலிருந்து புறப்பட்ட அந்த ஓலா வாகனம்,  வேகமாக சென்று இருக்கிறது. விலாசனி ஓட்டுநரிடம், “அவசரம் ஏதுமில்லை... மெதுவாகவே செல்லவும்...” என்றுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத அந்த ஓட்டுநர், வாகனத்தை வேகமாக செலுத்தி உள்ளார். மீண்டும் விலாசனி, “உங்கள் வேகம் எனக்கு அச்சமூட்டுவதாக உள்ளது... தயவு செய்து மெதுவாக செல்லுங்கள்...” என்று சொல்ல, அந்த ஓட்டுநர் கோபமாக, “மெதுவாகவெல்லாம் செல்ல முடியாது. குறிப்பிட்ட நேரத்திற்குள், நாங்கள் கணிசமான எண்ணிக்கையிலான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு அசெளகரியமாக இருந்தால், இறங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்லியுள்ளார் கோபத்துடன்.அச்சமடைந்த விலாசனி அண்ணா பல்கலைகழகம் அருகே வாகனத்திலிருந்து இறங்கி, ஆட்டோவில் செல்ல முயற்சித்துள்ளார்.

அதன்பின் நடந்தவற்றை விவரிக்கிறார் விலாசனி, “நான் வாகனத்திலிருந்து இறங்கிய பின்பும், அங்கேயேதான் ஓலா ஓட்டுநர் நின்று என்னை முறைத்துக் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல், நான் மேற்கொண்ட பயணத்திற்காக, நான் பணம் தர வேண்டுமென்றும் நிர்பந்தித்தார். ஆனால், நான் பணம் கொடுக்க மறுத்துவிட்டேன். அவர்தான் என்னை நான் செல்ல வேண்டிய இடத்தில் விடாமல், வாகனத்திலிருந்து இறங்க சொன்னார்.  நான் ஏன் பணம் தர வேண்டும்...? ஆனால், அதற்கு அந்த ஓட்டுநர் என் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டினார்."  என திகிலுடன் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

காவல் துறையினரின் மெத்தனம்:

பின் இந்த சம்பவம் குறித்து ராமாபுரம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் விலாசனி. அவர்கள் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்க சொல்லி உள்ளார்கள். ஆனால், அங்கும் அவரின் புகார் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அங்கு இருந்த காவலர்கள், “இந்த சம்பவம் நடந்தது கிண்டியில், அது எங்கள் அதிகார வரம்பிற்குள் வராது. நீங்கள் கிண்டி காவல் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள்...” என்று அலைக்கழித்துள்ளார்கள். இந்தச் சம்பவம் நடந்த போது இரவு பத்து மணி.

ஏற்கெனவே, அச்சத்தில் இருந்த விலாசனியை இந்த சம்பவம் மேலும் மன உளைச்சலில் ஆழ்த்தி உள்ளது. தனியாக கிண்டி செல்ல மறுத்த அவர், குறைந்தபட்சம் தன்னை வளசரவாக்கத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பாக வாருங்கள் என்று காவலர்களிடம் கேட்டுள்ளார்.  அதன் பின், ஒரு காவலர் துணையாக அனுப்பப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விலாசனி, “சம்பவம் நடந்தது கிண்டி பகுதியில். அந்த ஓலா வாகன ஓட்டுநர் அந்தப் பகுதியில் இருக்க வாய்ப்புகள் அதிகம். நான் ஏற்கெனவே, அச்சமடைந்த சூழ்நிலையில் இரவு பத்து மணிக்கு மேல், என்னைத் தனியாக நந்தம்பாக்கத்திலிருந்து கிண்டி சென்று புகார் அளியுங்கள் என்று சொல்வது, எத்தகைய அறிவுடைய செயல் என்று எனக்கு தெரியவில்லை...” என்றார் வருத்தமாக.

சமூக ஊடகம் பணிய வைத்தது:

அந்த இரவில் நடந்த சம்பவங்களை சமூக ஊடகத்தில் எழுதினார் விலாசினி. அந்தப் பதிவை  பல்லாயிரம் பேர் பகிர்ந்துள்ளார்கள். அதன்பின்னர்தான் இந்த பிரச்னை பொது வெளிக்கு வந்தது.  விலாசனி தன் வருங்கால கணவரின் கைபேசியிலிருந்து ஓலா டேக்சியை புக் செய்ததால், அவர் மின்னஞ்சலில் இருந்தே ஓலா நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார். அதன் பின், ஓலா நிறுவனம் விலாசனியை தொடர்பு கொண்டு,  நிச்சயம் அந்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளது.  காவல் துறையும், புகாரைப் பெற மறுத்த காவலர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக ஓலா நிறுவனம் என்ன சொல்கிறது?:

இது குறித்து ஓலா நிறுவனத்திடம் விளக்கம் பெற முயற்சி செய்தோம். நம்மிடம் பேசிய வாடிக்கையாளர் சேவை ஊழியர், “இந்த பிரச்னையை அதற்கான துறையிடம் எடுத்துச் செல்வதாக” கூறினார்.  நம்மிடம் இது குறித்து ஒரு மின்னஞ்சலும் அனுப்பச் சொன்னார். அனுப்பிவிட்டு, பதிலுக்காக காத்திருக்கிறோம்.

2010 ம் ஆண்டு துவங்கப்பட்டது ஓலா நிறுவனம். இப்போது நூறு நகரங்களில் தன் சேவையை வழங்கி வருகிறது. அதனிடம் 2,50,000 வாகனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்தனை திறன்மிகு ஓட்டுநர்கள் அவர்களிடம் இருக்கிறார்களா...? சமீபத்தில் ஓலா நிறுவனம் 700 மில்லியன் ரூபாயும், உபேர் நிறுவனம் 1,000 மில்லியன் ரூபாயும் முதலீடாக திரட்டியது. 

பணத்தைக் கூட சுலபமாகத் திரட்டிவிடலாம். ஆனால்,  வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைத் திரட்டுவது அதைவிட கடினமல்லவா..!?


- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close