Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோட்டையில் இருக்கை பஞ்சாயத்து! 21-ம் தேதி பார்ட்- 2 ஆரம்பம்?


2016 தமிழகட்டசபை தேர்தலுக்கு பின்னர் அதிமுக ஆட்சி அமைத்து, முதல் சட்டசபைக் கூட்டமும் முடிந்துவிட்டபோதிலும், இன்னமும் முடியாமல் இருக்கிறது, கோட்டையில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கான அறை  ஒதுக்கும் பஞ்சாயத்து.

வருகிற 21.7.2016 அன்று சட்டசபை மீண்டும் கூடவுள்ள நிலையில், இதே பிரச்னை மீண்டும் பூதாகரமாகுமா அல்லது மக்கள் பிரச்னைகள் குறித்து  எம்.எல்.ஏ.க்கள் அங்கே பேசுவார்களா,  என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும்

திமுக, இந்த முறை 89 எம்.எல்.ஏ.க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக கோட்டைக்குள் நுழைந்திருப்பதால், தங்களுக்கான அறையைப்  பெரிதாக மாற்றித் தருமாறு, கடந்த ஜூன் 16 அன்று சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

திமுகவின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர், 'சிறப்பான' முறையில் எதிர்க்கட்சித் தலைவருக்கான அறையை ஒதுக்கித் தருவதாக அப்போதே உறுதி அளித்தார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர, திமுகவின் கடந்த கால அறை ஒதுக்கப்பட்டது. அதே சமயம், ' நாங்கள் அன்று 23 பேர், இன்று 89 பேர். தற்போது எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் 50 பேர் அமருகிற அளவில் கூட இல்லை' என்று குற்றஞ்சாட்டி புதிய இடத்தை நிராகரித்த திமுக, பழைய இடத்தையே மீண்டும் பயன்படுத்துகிறது.


காங்கிரஸ் உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்திலிருந்து திமுக 'போகாத' காரணத்தால் வேறு அறை இல்லாமல் காங்கிரஸ் தவிக்கிறது. ஆனால் என்ன செய்ய...? கூட்டணி வைத்தாயிற்று என்பதால் காங்கிரஸ் சைலன்ட் மோடில் இருக்கிறது.

திமுக தரப்பு ஏன் இத்தனை கோபப்பட்டது என்று அறிவாலயத் தரப்பில் விசாரித்தால், "ஆறு வி.ஐ.பி. இருக்கைகள், 15 பிளாஸ்டிக் சேர்கள் என மொத்தம் 21 இருக்கைகளும், 2 சோபாக்களும் மட்டுமே அந்த அறைக்கு அனுமதித்துள்ளனர். ஆனால் இருக்கும் உறுப்பினர்களோ, 89 பேர். இதுதான் எங்கள் கோபத்துக்கு காரணம்" என்கிறார்கள்.   

இது போக, 'திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய இருக்கை பேரவையில் ஒதுக்கித் தரப்படவில்லை' என்ற திமுகவின் கோரிக்கையும் ஒரு பக்கம் அப்படியே இருக்கிறது.

-ந.பா.சேதுராமன்

படங்கள்:சொ.பாலசுப்ரமணியன்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ