Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்னொரு கும்பகோண சோகம் நிகழ்ந்துவிடக்கூடாது - தமிழக அரசுக்கு கல்வியாளர் கோரிக்கை!

 

சொல்லொணாத எதிர்காலக் கனவுகளைத் தேக்கிக் கொண்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த 94 பெற்றோர்கள், கதறித்துடித்து கண்ணீர் விட்டது இதே நாளில்தான்.  கும்பகோணம் என்றால் மகாமகம் நினைவுக்கு வருவதற்கு முன் 94 பிஞ்சுகள் கருகிய கொடுமைதான் கடந்த 12 ஆண்டுகளாக நினைவில் வந்து தைத்துக் கொண்டிருக்கிறது.

2004 ஜூலை 16- அன்று கும்பகோணத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர். 16 குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு நீதிபதி கே.வெங்கட்ராமன், இந்த விபத்தில் இறந்த மற்றும் படுகாயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்க முடியாது எனக் கூறி, இன்பராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "இந்த விபத்தில் இறந்த மற்றும் படுகாயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு மொத்தம் ரூ.24 கோடியே 95 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்" என  கோரியிருந்தார்.

தொடர்ந்து மேல்முறையீடுகள், பள்ளியின் நிர்வாகிகளுக்கும், பொறியாளருக்கும், மாவட்ட கல்வி அதிகாரிக்கும் சிறைத் தண்டனை, மேல்முறையீட்டின் காரணமாக குற்றஞ் சாட்டப்பட்டோர் விடுதலை, விடுதலையை எதிர்த்து அரசு மேல் முறையீடு என்றெல்லாம் பல வாரங்கள், மாதங்கள் ஓடி 12 ஆண்டுகள் கடந்துவிட்டன.
 
மார்ச், 7, 2016 அன்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன் பேரில் இந்த வழக்கு கடந்த 13ம் தேதி(ஜூலை 2016) அன்று சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதிகள்  எஸ்.கே. கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "இந்த வழக்கில் எப்போது நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதோ அந்த நாளில் இருந்துதான் வட்டியைக்  கணக்கிட ஒரு நபர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் சம்பவம் நடந்த நாளில் இருந்தே, 9 சதவீத வட்டியைக்  கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், "இந்த 9% வட்டியை சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து கணக்கிட்டு வழங்குவது தொடர்பாக எழுப்பப்படும் கோரிக்கையை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து உரிய பதிலை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.


"ஒவ்வோராண்டும், அந்தப் பிஞ்சுகளுக்கு அஞ்சலி செலுத்துவதோடு  கடமை முடிந்து விடுகிறதா, இதுபோன்ற துயரங்கள் இனியும் நடவாத நிலைக்கு அரசின் தொலைநோக்குத் திட்டம்  எப்படி இருக்க வேண்டும், அரசுகள் என்ன செய்தால் இதற்கான தீர்வு முழுமையாகக் கிடைக்கும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் அமைப்பாளரான கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம்  கேட்டேன்.

"பொதுப்பள்ளி மூலம் அருகாமை கல்விக் கூடங்கள் அமைப்பதே இதற்கான முழுமையான தீர்வு. ஒரு சுருதி இறப்புக்குப் பின்னரே பஸ்களுக்கு, வேன்களுக்கு கம்பி அமைக்கணும், டோர் போடணும் என்றெல்லாம் அரசு சொல்ல ஆரம்பித்தது. அதையெல்லாம் செய்த பின் இப்போது அதற்கு தீர்வு முழுமையாகக் கிடைத்து விட்டதா.

அதே போன்ற வேன்கள், பஸ்களில் பயணம் செய்து இந்த ஆண்டு கூட  மூன்று வயது, நான்கு வயது பிள்ளைகள் பரிதாபமாக இறந்து போயினர். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அப்படி ஒரு உயிரிழப்புச் சம்பவம் நிகழ்ந்து விட்டது. இந்த பரிதாப உயிரிழப்புகளை அரசால்  தடுக்க முடிந்ததா இல்லையே. சாலையைக் கடந்து பள்ளிக்கு பிள்ளைகள் சென்றால் விபத்தின் மூலம் உடல் ஊனமோ, மரணம் சம்பவித்தலோ தவிர்க்க முடியாததுதான்.

ஜியாகரஃபிகல் ஏரியா என்று எல்லா நாட்டிலும் உண்டு. குறிப்பிட்ட ஒரு வட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே அந்த வட்டத்தில் வருகிற  ரேசன் கடையில் பொருள் வாங்க முடியும், அந்த வட்டத்தில்தான் போய் கம்யூனிட்டி சான்று வாங்க முடியும், ஈ.பி. பில் கட்ட முடியும். "நெய்பர்  ஸ்கூல்" (அருகாமை பள்ளி) என்பது அனைத்து நாடுகளிலும் உள்ளது, நம்முடைய நாட்டைத் தவிர.

பிரபல தொழிலதிபர் பில்கேட்சின் இளமைக் காலத்தில், அவருடைய சிறந்த கல்விக்காக அவர் பெற்றோர், தங்கள் வீட்டையே கல்விக்கூடத்தின் அருகில் மாற்றிக் கொண்டதாக அவர் வரலாறு சொல்கிறது. இங்கே ஒவ்வொரு பெற்றோரும் அப்படி தங்கள் வீடுகளை மாற்றிக் கொண்டிருக்க முடியுமா? தரமான 'நெய்பர்' பள்ளிகளை இன்று அனைத்து உலகநாடுகளும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறதை ஏன் கவனத்தில் கொள்ள மறுக்கிறது அரசு ?

புவியியல் எல்லை ஒன்றை வரையறுத்து அந்த எல்லைக்குள் உள்ளவர்கள் மட்டுமே  அந்த எல்லைக்குள் வருகிற  பள்ளியில்தான் படிக்க வைக்க முடியும். அனைத்துப் பள்ளிகளும் ஒரே மாதிரியான  தரத்தில் இருந்தால்தானே, பெற்றோர்கள் எந்தப் பள்ளியிலும் பிள்ளைகளைச் சேர்க்க முடியும். இதை யாரால் செய்ய முடியும், அரசு சக்திகள்தானே செய்ய முடியும்.

ஒவ்வொரு தனியாரும் ஒவ்வொரு விதமான வசதிகளைச்  செய்து வைத்திருப்பார்கள். இந்தச் சூழலை உலக நாடுகள் அத்தனையிலும் அந்த அரசுகள்தான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. அனைவருக்கும் சமமான கல்வியைக் கொடுக்க வேண்டியது அரசுதானே. பொதுப்பள்ளி மூலமாக அருகாமை பள்ளிகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமைதானே.

கும்பகோணம் விபத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர், ஒரு குடும்பத்துக்கு 25லட்சம் கேட்கிறார்கள்,  94 குழந்தைகளின் குடும்பத்துக்கு அவ்வளவு கொடுக்க முடியாது என்று இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குழந்தையின் மதிப்பு இத்தனை லட்சம்தான்  என்று எப்படி தீர்மானிக்கிறீர்கள்?

இறந்த குழந்தையிலிருந்து எத்தனை சர். சி.வி. ராமன்கள் இந்த நாட்டிற்கு கிடைத்திருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்க்க வேண்டாமா?

தீர்வு என்பது உலகத்தின் அனுபவத்தின் வாயிலாகத்தான் பெறமுடியும். இந்தியாவிலுள்ள கல்விக் குழுக்களின் பரிந்துரையைக்  கருத்தில் கொள்ள வேண்டாமா?

ஒரு அரசு தன் பொறுப்பில் வழங்கும் கல்வியே மாணவர் சமுதாயம் நல்லபடி வாழ்வதற்கான தீர்வு, அதுவே பாதுகாப்பு.

உலகம் மொத்தம் பொருந்தும் இது இந்தியாவுக்கு ஏன் பொருந்தாது. அஞ்சலி செலுத்துவதும் , நஷ்ட ஈடு கொடுப்பதும் தேவைதான் ஆனால் அதுவே தீர்வல்ல"

- என்றார் தீர்க்கமாக.

 ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close