Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு பெருங்கனவின் மீதான தாக்குதல்...! #WhereIsMyGreenWorld

பியூஷின் கைதும், அதைத் தொடந்து அவர் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதல் தொடர்பாகவும், அவரின் அக்கா ஊர்வசி லூனியா, இப்படி ஒரு பதிவை முகநூலில் பதிந்துள்ளார்- “எனக்கு தெரிந்து எங்கள் சமூகத்திலிருந்து  வந்த மிக தீவிரமான சமூக செயற்பாட்டாளர் அவர். நான் எப்போதும் அவரை ஆதரித்து இருக்கிறேன். ஆனால், இப்போது அது தவறோ என்று தோன்றுகிறது. ஆம், எந்த சுயநலமும் இல்லாமல் மக்களுக்காக குரல் கொடுத்த, நியாயத்தின் பக்கம் நின்ற ஒரு மனிதன், காவல் துறையால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்.” என்பதாக அந்தப் பதிவு இருக்கிறது. 

இந்தப் பதிவை என்னால் சுலபமாக கடந்துச் செல்ல முடியவில்லை. ஆம். இது குறித்த ஒரு தீவிரமான உரையாடல் எனக்கும் பியூஷுக்கும் சில மாதங்களுக்கு முன் நடந்து இருக்கிறது.

அது ஒரு பனிப்பொழிவு காலம். தருமபுரியில் இருக்கும் அவரது கூட்டுறவு வனத்தில், வேளாண்மை சம்பந்தமான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள நேர்ந்தது. பறவைகள் எல்லாம் தம் கூட்டிற்கு திரும்பிய பின்னர், அடர்த்தியான ஒரு இருட்டில், சுள்ளிகளால் மூட்டப்பட்ட ஒரு நெருப்பொளியில், அவருக்கும் எனக்குமான உரையாடல் ஓடைகளின் சலசலப்புகளுக்கு இடையே நிகழ்ந்தது. 

இயற்கையில் மூழ்குதல், நீதியை கடைப்பிடித்தல்:

நிச்சயமாக அவரிடமிருந்து இவ்வளவு தத்துவார்த்தமான பதில்கள் வருமென்று எதிர்பார்க்காமல்தான், நான் மிக சாதாரணமாக  அவரது அக்கா தற்போது குறிப்பிட்டுள்ள இந்த கேள்வியை அப்போதே கேட்டேன்,

ஏன் பியூஷ்... பொதுவாக மார்வாரிகள் யாரும் இவ்வளவு தீவிரமாக சூழலியல், இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மை ஆகிய துறைகளில் இயங்குவதாக நான் அறிந்ததில்லை. உங்களுக்கு எப்படி இவ்வளவு ஆர்வம் வந்தது...?

 சிரித்தவாரே, “நான் ஆன்மா கரம் பிடித்து மட்டும்தான் நடக்கிறேன்... அதுதான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

புரியவில்லையே பியூஷ்...?

“பொதுவாக நம் உள்ளுணர்வு நமக்கு நல் வழியைதான் காட்டும். நியாயத்தின் பக்கம்தான் நடக்கச் சொல்லும். ஆனால், நாம் எப்போதும் அந்த உள்ளுணர்வின் குரலுக்கு செவிமடுக்க மறுக்கிறோம்.  நான் பிறந்த சமண மதம் உட்பட, அனைத்து மதங்களும் உள்ளுணர்விற்கு செவிக் கொடுங்கள் என்றுதான் சொல்கிறது. அந்தக் குரலை நாம் தொடந்து உதாசீனப்படுத்துகிறோம். நான் அந்த உள்ளுணர்வின் குரலை கேட்டேன்.”

அவரே தொடர்ந்தார், “நியாயத்தின் பக்கம் நிற்பது என்பது, நிச்சயம் நாம் மட்டும் சரியாக வாழவேண்டும் என்று அர்த்தம் அல்ல. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதுதான் அதற்கான சரியான பொருள். நான் அதை தான் செய்கிறேன். நீதியின் பக்கமே நிற்கிறேன்.”சூழலியல் மீது பெருங்காதல் கொள்ள காரணம்...?

“உள்ளுணர்வு நம்முடன் எப்போதும் உரையாட வேண்டுமென்று விரும்பினால், நாம் இயற்கைக்கு முழுவதுமாக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இயற்கையை சிதைக்காமல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல,  இயற்கையின் அழிவென்பது உண்மையாக நீதியின் அழிவு, நியாயத்தின் அழிவு.  இயற்கையை அழித்து முன்னேறலாம் என்று நம்பும் சமூகம், அனைத்தும் பேரழிவுகளையும் சந்தித்து இருக்கின்றன.

நாம் அமைதியாக, கலகங்களற்ற ஒரு சமூகத்தில் வாழ வேண்டுமென்றால், நீதியை காக்க வேண்டும். உண்மையில் நீதியை காப்பதும், இயற்கையை காப்பதும் வெவ்வேறானதல்ல.” என்றார் தத்துவம் கலந்த நடைமுறை அரசியலோடு.

அவருக்கு ஒரு பெருங்கனவு இருந்தது:

வெறும் வறட்சியான போராட்டவாதியாக மற்றும் இல்லாமல், பியூஷ் எப்போதும் மாற்றத்தை முன்மொழிவராகவும் இருந்தார். காந்தி மீது அவருக்கு பெரும் பற்று இருந்ததா என்று தெரியாது. ஆனால், ஜே.சி. குமரப்பா, காந்தி போல் இயற்கையுடன் இயைந்த பொருளாதார தத்துவத்தை முன் வைத்தார். தத்துவ அளவில் மட்டுமல்லாமல், அவரே அதை சாத்தியம் ஆக்கியும் காட்டினார்.

நண்பர்கள் துணையுடன்,  வறட்சி மாவட்டமாக அறியப்பட்ட தருமபுரியில் ஏறத்தாழ 150 ஏக்கர் நிலங்களை வாங்கினார். வறண்ட அந்த நிலத்தில், ஏறத்தாழ ஒரு லட்சம் மரங்களையும், 20 நீர் நிலைகளையும் உண்டாக்கி, அதை வனமாக மாற்றினார்.  அந்த வனம் எப்போதும் சில பேரின் தனியார் சொத்தாக இருக்க அவர் விரும்பவில்லை.  அந்த வனத்தை எப்போதும், அனைவருக்காகவும் திறந்தே வைத்திருந்தார்.

இயற்கையின் மீதும், மாற்று பொருளாதாரத்தின் மீதும் காதல் கொண்டவர்கள் யார் வேண்டுமானலும் அங்கு சென்று வரலாம். இயற்கை சார்ந்த தொழில்கள் செய்ய விரும்பினால் செய்யலாம்.

இதைத்தாண்டி அவருக்கு ஒரு பெருங்கனவு இருந்தது. அது, அந்த வனத்தில் ஒரு சமூகத்தை உண்டாக்க வேண்டும் என்பது. இயற்கை சார்ந்த தொழில்கள் செய்யும், இயற்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்,  நீதிக்காக எப்போதும் குரல் கொடுக்கும் சமூகமாக அது இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான முயற்சிகளில் அவர் மிகத் தீவிரமாக இயங்கினார்.

உண்மையில் இது  தென் ஆப்பிரிக்கா ட்ரான்ஸ்வாலில் காந்தி உண்டாக்கிய டால்ஸ்டாய் பண்ணை போன்றதுதான்.

ஒரு பெருங்கனவு சிதைக்கப்படுகிறதா...?:

சமூகத்தில்  ஒரு செயற்பாட்டாளர்  கைது செய்யப்படுவது என்பது புதிதல்ல. ஆனால், அந்த செயற்பாட்டாளரை  முன்வஞ்சத்துடன் சிறையில் தாக்குவது என்பது, நிச்சயமாக ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் அன்றி வேறல்ல. ஒரு சமூகம் அமைதியாக, வளத்துடன் இயங்க வேண்டுமென்றால் அறிவார்ந்த பல கருத்துகளை கேட்பது அவசியம். ஆனால், எந்த கருத்தும் இருக்கக் கூடாது என்று நினைப்பது எந்த சமூகத்திற்கும் நல்லதல்ல.

பியூஷ்  ஒரு மாதிரி சமூகத்தை உண்டாக்க விரும்பினார், சேலத்தில் இருந்த அனைத்து நீர் நிலைகளையும் மீட்டு, புனரமைக்க  வேண்டும்  என்று கனவு கண்டார். அதற்கான திட்டங்களை வகுத்து, அவர் முன்னோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் சிறையில் தாக்கப்பட்டார் என்ற செய்தி வருகிறது.

உண்மையில் இது அவர் மீதான தாக்குதல் அல்ல.... ஒரு பெருங்கனவின் மீதான தாக்குதல்..! 

- மு. நியாஸ் அகமது


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close