Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அறிவியல் ஆர்வம் அதிகரிப்பது மகிழ்ச்சி!'- சென்னை மாணவர்களிடம் நெகிழ்ந்த மோடி

சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பான ‘சத்யபாமாசாட்’ கடந்த ஜூன் 22ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதோடு இந்த செயற்கைக் கோளுடன் இன்னும்  21 செயற்கைக் கோள்கள் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி 34 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. தற்போது இவை அனைத்தும் வெற்றிகரமாக சிக்னல் அனுப்பி வருகின்றன.

இதை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி, செயற்கைக் கோள் தயாரித்த மாணவர்களைச்  சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஆறு மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட 8 பேர் மோடியைச்  சந்தித்து இருக்கிறார்கள். இந்தச் சந்திப்பைப் பற்றி,சத்யபாமா மாணவர்களில் ஒருவரான ராஜா பிரீத்தமிடம் பேசினோம்.

" இந்த செயற்கைக் கோளுக்கான விதை மறைந்த எங்களின் முன்னாள் சேர்மேன் ஜேப்பியார் அவர்களால் விதைக்கப்பட்டது. ஆறு வருடங்களாக இதற்கான பணியில் எங்கள் கல்லூரியைச் சேர்ந்த பல மாணவர்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவில் இருக்கும் மாசுக் கட்டுப்பாட்டையும், பசுமை இல்ல வாயுக்களையும் கண்டறியும் நோக்கில் இந்த செயற்கைக் கோள் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. நான் உட்பட புலிநிகால் ரெட்டி, ராகலபள்ளி ரெட்டி தருண், சாச்சா ஸ்ரீஹரி, செளமியா ராஜன் தாஸ் ஆகிய 5 மாணவர்கள் இதற்காக உழைத்தோம். ஏப்ரல் 30ம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் 22ம் தேதி ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் தினமும் நான்கு முறை சுற்றி வந்து, பசுமை இல்ல வாயுக்கள் பற்றிய தகவல்களைக் கொடுக்கும். தற்போது சிக்னல் கிடைக்க தொடங்கிருக்கிறது" என்றார்.

அவரிடம் பிரதமர் மோடியுடனான சந்திப்பைப் பற்றிக் கேட்டோம். " அது மிகவும் சந்தோசமான ஒரு அனுபவம். நாங்கள் இதைக்  கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் வழக்கம்போல கல்லூரி சென்றபோது, எங்களுக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து எங்கள் துணைவேந்தர் ஷீலா ராணி எங்களிடம், ‘பிரதமர் மோடி உங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். நமக்கு 19ம் தேதி அப்பாயின்மெண்ட் கொடுத்து இருக்கிறார்கள். நாம் டெல்லி செல்ல தயாராக வேண்டும்’ என்று சொன்னபோது எங்களுக்கு ஏறக்குறைய அது ஆச்சர்யமாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. அதையடுத்து நாங்கள் டெல்லி சென்றோம்.

19 ம் தேதி காலை 9.45 மணிக்கு பிரதமர் அலுவலகம் சென்றோம். அங்கு வழக்கமாக நடத்தப்படும் பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு பிரதமரை சந்திப்பதற்காகக் காத்திருந்தோம். 11 மணிக்கு எங்களை உள்ளே அழைத்தார்கள். நாங்கள் உள்ளே செல்லும்போது அவ்வளவு பயமாக இருந்தது. அங்கே, பிரதமர் தனது வழக்கமான  ட்ரேட் மார்க் உடையில் எளிமையாக இருந்தார். கம்பீரமாக எழுந்து வந்து எங்களை ‘வெல்கம்’ சொல்லி வரவேற்றார். அந்த நிமிடங்கள் மிகவும், மகிழ்ச்சிகரமானவை. அதன்பின் எங்களிடம் கைகுலுக்கிவிட்டு, எங்களது பெயர்,படிப்பு போன்றவற்றைக்  கேட்டுத் தெரிந்து கொண்டார் தனித்தனியாக. பின்னர் நாங்கள் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

அதன்பின்பு சுமார் 20 நிமிடங்கள் எங்களோடு உரையாடினார் மோடி. எங்களது செயற்கைகோளான ‘சத்யபாமாசாட்’ பற்றியும், அதன் இயக்கத்தையும் பற்றியும் கேட்டறிந்தார். அதோடு, ஏற்கெனவே அதைப் பற்றி சில விஷயங்களை அதிகாரிகளிடம் இருந்து கேட்டு அறிந்து வைத்திருந்ததாகச் சொன்னது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த உரையாடலுக்குப் பிறகு எங்களது எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துச் சொன்னார். இந்தியாவில் மாணவர்களிடம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான விழிப்புணர்வு அதிகரித்து வருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமது அரசு இன்னமும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் எங்களுடனான அந்த உரையாடலில் பிரதமர் தெரிவித்தார்.

- மா.அ.மோகன் பிரபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ