Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிளஸ் 2 தேர்வு: மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடும் ஆசிரியர்கள்... மறுகூட்டலின் மறுபக்கம்!

ன்றாக தேர்வு எழுதியிருந்த அந்த மாணவன், பிளஸ் 2 தேர்வு முடிவு வந்தபோது மனம் நொறுங்கிப் போனான். 200 ஐ நெருங்குவோம் என கனவு கண்டுகொண்டிருந்தவன் எடுத்திருந்ததோ வெறும் 87. பதற்றத்துடன் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தபோது வந்த மதிப்பெண் 187. விஷயம் வெளிவந்து ஒட்டுமொத்த பெற்றோர் தரப்பும் இப்போது அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது. இப்படி மறு கூட்டல் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பலரது அலட்சிய அணுகுமுறை. 

பிளஸ் 2 படிப்பில் ஒரு மாணவர் எடுக்கும் மதிப்பெண்தான் பின்னாளில் அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி டியூசன் வைத்து, பிளஸ் 2 வில் நல்ல மதிப்பெண் எடுக்க, தங்கள் பிள்ளைகளுக்கு ஈடாக பெற்றோர்களும் அந்த வருடம் பிளஸ் 2 ஃபீவருக்கு ஆளாகிறார்கள். 
'அண்டா குண்டா அடகு வைச்சு, அதோடு ஆத்தா தாலியையும் அடகு வைச்சு படிக்க வைக்கிறோம்' என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். ஆனால் இத்தனை துயரங்களைத்தாண்டி தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் சரியாக திருத்தப்படுகிறதா, என்பதுதான் கேள்விக்குறி.

கிராமப்புற மற்றும் நடுத்தர மாணவர்கள்,  'இதுதான் நம் தலைவிதி' என்று பிளஸ் 2 வில் கிடைக்கும் மதிப்பெண்ணை ஏற்றுக்கொண்டு, ஏதாவது கலைக்கல்லுாரிக்கு படிக்கப் போய் விடுகின்றனர். அல்லது படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு செல்லத் தொடங்கி விடுகின்றனர். சில நடுத்தர குடும்பங்களில், பிளஸ் 2 தேர்வில் தங்களது பிள்ளைகள் குறைவான மார்க்குகள் பெற்றால், அவர்களை திட்டித் தீர்த்து விடுகின்றனர். இந்த மன உளைச்சலில், மாணவ-மாணவிகள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெரிய நகரங்களில் உள்ள உயர்தர மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்த பெற்றோர்கள்தான், தங்களது பிள்ளைகள் மருத்துவராகவோ, இன்ஜினியராகவோ ஆக வேண்டும் என்ற கனவில், பிளஸ் 2 தேர்வு ரிசல்ட் தொடர்பாக மறு கூட்டல், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்து போராடி, அதன் மூலம் கூடுதல் மதிப்பெண்களை பெறுகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் வசிப்போரிடம் இதுபோன்ற விழிப்புணர்வு இல்லை.

சமீபத்தில் அரசு தேர்வுத்துறை, பிளஸ் 2 தேர்வு தொடர்பான மறு கூட்டல், மறு மதிப்பீடு விபரங்களை வெளியிட்டது. அதில்தான் கட்டுரையில் முதலில் சொன்ன நிகழ்வு நடந்தது. மறுகூட்டலில் ஒரு மாணவன் அறிவியல் பாடத்தில் 187 மார்க் பெற்றிருக்கிறான். ஆனால் முன்பு அவன் பெற்றிருந்தது வெறும் 87 மதிப்பெண்தான். ஒன்றிரண்டு மதிப்பெண் வித்தியாசம் என்றால் அது வழக்கமானது. 100 மதிப்பெண்களை கோட்டை விடும் அளவிற்கு திருத்தியிருக்கிறார்கள் என்றால் திருத்தியவரின் லட்சணத்தை என்னவென்று சொல்வது?

கடந்த மார்ச் 2016 ம் தேதி நடந்த பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதில் தேர்வு முடிவுகள் வெளியானதும் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் ஜெராக்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர்கள் ஒரு லட்சத்து 751 பேர். அவர்களில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் 3 ஆயிரத்து 344 பேர், மறு மதிப்பீடுக்கு 3 ஆயிரத்து 422 பேர் விண்ணப்பித்தனர். இதில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் 3 ஆயிரம் பேருக்கு சராசரியாக 10 முதல் 100 மதிப்பெண்வரை அதிகரித்துள்ளது.

இதில்தான் மேலே சொன்ன மாணவனுக்கு விடைத்தாள் திருத்திய ஆசிரியர், கூட்டலின் போது 100 மதிப்பெண்ணை கோட்டை விட்டு, வெறும் 87  என்று போட்டிருக்கிறார். அவசரப்பட்டு அந்த மாணவன் ஏதாவது விபரீதத்தில் இறங்கியிருந்தால் யார் பொறுப்பு?.
அதே போல் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்த 3 ஆயிரத்து 422 பேரில், 2 ஆயிரத்து 222 பேருக்கு 5 முதல் 50 மதிப்பெண்கள் வரை கூடியுள்ளது.

மருத்துவம் மற்றும் இன்ஜி., தர வரிசைப் பட்டியலில் மாற்றம்


பிளஸ் 2 மறுமதிப்பீட்டால், மருத்துவம் கட் ஆஃப் மார்க்கின் தர வரிசை பட்டியலிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 149.75 கட் ஆப் மார்க் பெற்று மருத்துவ தர வரிசை பட்டியலில் 2069 வது இடத்தில் இருந்த மாணவி சாய் துர்கா, மறு மதிப்பீடு மூலம் கூடுதல் மார்க் பெற்று, தற்போது 199.67 கட் ஆப் மார்க் பெற்று, தர வரிசை பட்டியலில் 24வது இடத்தைப் பிடித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.
அதேபோல் மாணவி அட்சயா சண்முகி என்பவர், முதலில் பெற்ற மார்க் அடிப்படையில் தரவரிசை பட்டியலில் 2 ஆயிரத்து 24வது இடத்தில் இருந்தார். மறு மதிப்பீடு மூலம் கூடுதல் மார்க் பெற்று தர வரிசை பட்டியலில் 644 வது இடத்தை பிடித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.

மறு மதிப்பீடு மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்த 8 பேர்


ஸ்ரீதேவி, அனுநிதா மரியா பான்டின், அருள்செல்வன் உள்ளிட்ட இதுபோல் 8 மாணவர்கள் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் மூலம் பழைய மதிப்பெண்ணை விட கூடுதலாக வாங்கி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

எல்லோரும் விண்ணப்பித்தால் என்ன ஆகும்?

பிளஸ் 2 தேர்வை கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு சில ஆயிரங்கள் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். கிட்டத்தட்ட விண்ணப்பித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கும் கூடுதல் மதிப்பெண் கிடைத்துள்ளது. கிராமப்புற மற்றும் நடுத்தர குடும்பங்களில் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை. தேர்வு முடிவை எதிர்த்து, 8 லட்சம் பேரில் சில லட்சம் பேர் விண்ணப்பித்தால் என்ன ஆகும்?. நம் தேர்வுத்தாள் திருத்தும் அலட்சிய ஆசிரியர்களின் லட்சணம் இன்னும் பளிச்சென தெரியவரும்.  தங்கள் திறமையின்மையால் மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் இந்த ஆசிரியர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

இது தொடர்பாக அரசுத்தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவியை தொடர்பு கொண்டு பேசினோம்.


"பிளஸ் 2 தேர்வில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு மூலம் கணிசமான மாணவர்களின் மதிப்பெண் கூடியிருக்கிறது. அதுபோல் ஆண்டுக்கு ஆண்டு மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்படி தவறாக விடைத்தாள்கள் திருத்தப்பட்டிருப்பது கவலைப்பட வேண்டிய விஷயம்தான். ஒன்று, இரண்டு மார்க் கூடுதலாக இருக்கிறது என்றால் பரவாயில்லை. இந்த ஆண்டு 100 மார்க் வரை ஆசிரியர்கள் கோட்டை விட்டுள்ளனர். மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு மூலமாக கூடுதல் மார்க்கை பெற்ற மாணவர்களின் விடைத்தாள்களை திருத்திய, தவறு செய்த அந்த  500  ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார். 

மாணவர்களின் எதிர்காலத்திற்கு வேட்டு வைக்கும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மணிவாசகத்தை தொடர்பு கொண்டு பேசினோம்.

" இதுபோல் ஆசிரியர்கள் கவனக்குறைவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஆனால் அதே நேரம் பள்ளிக்கல்வித்துறைக்கும் இந்த பிரச்னையில் சம்மந்தம் இருக்கிறது. பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்களை  75 மையங்களில் 30 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் திருத்துகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு ஆசிரியர் 24 விடைத்தாள்களை திருத்த வேண்டியதிருக்கிறது. கிட்டத்தட்ட 50 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக கணிதம் திருத்தும் ஆசிரியர்களை வேதியியல், உயிரியியல் பாடத்தாள்களை திருத்தச் சொல்லி நிர்பந்தப்படுத்துகின்றனர். தங்கள் பாடத்திட்டம் தவிர்த்த பாடத்தின் விடைத்தாள்களை அவர்கள் திருத்தினால் இதுபோன்ற குழப்பங்கள்தான் வரும்.

மேலும், விடைத்தாள் திருத்தும் பணியில் கணிசமாக தனியார் பள்ளி ஆசிரியர்களையும் ஈடுபடுத்துகின்றனர். அதுமட்டுமின்றி விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. ஏதோ சுமாரான பள்ளிகளை விடைத்தாள் திருத்தும் மையங்களாக நியமிக்கின்றனர். குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. இதனால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி கவனச் சிதறல் ஏற்பட்டு விடுகிறது. எனவே இதுபோன்ற தவறுகள் இனி நேராதவாறு அடிப்படை வசதிகள் கொண்ட தனி விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படவும் வேண்டும்” என்றார்.

- எம்.கார்த்தி

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ