Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிகரித்த நிதிப் பற்றாக்குறை, குறையாத இலவசங்கள் - தமிழக பட்ஜெட் ஒரு பார்வை!

 

ஜெயலலிதா தலைமையில் தொடர்ந்து  இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற அதிமுக அரசு,  2016-17 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து, தங்களது பதவிக் காலத்தை நிறைவு செய்த அதிமுக அரசு, மீண்டும் அரியணை ஏறிய பின் தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட் இது. இதில் தேர்தல் வாக்குறுதிகளாக ஜெயலலிதா அறிவித்த பல திட்டங்களுக்கு முன்வடிவம் கொடுத்துள்ளார்கள்.

கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போதே பற்றாக்குறை பட்ஜெட்டாக இருந்ததால், புதிய பட்ஜெட்டில் வரிகள் அதிகம் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் கருத்து வெளியிட்டனர். ஆனால் அவர்கள் அனைவரின் யூகத்தையும் பொய்யாக்கும் விதமாக வரியில்லா பட்ஜெட்டை அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அதே நேரம்  தமிழக அரசின் மொத்தக் கடன் தொகை  ரூ.2.52 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த பட்ஜெட்டில் ரூ. 9,154 கோடி ரூபாய் பற்றாக்குறை  என்று அறிவித்தார்கள். இந்த பட்ஜெட்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 15,854 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும், நிதிப் பற்றாக்குறை ரூ. 40,533 கோடியாக இருக்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.

2016-2017 ம் நிதி ஆண்டின்  வரவு செலவு கணக்கு

மொத்த வருவாய் ---                                   ரூ.1,48,175.09 கோடி
மொத்த செலவு    ----                                   ரூ.1,64,029.56 கோடி
 வருவாய் பற்றாக்குறை ----                       ரூ.15,854.47 கோடி  

அரசின் வருவாயில் பெரும்பகுதியே வரியில் இருந்துதான் வருகின்றது. அதிலும் குறிப்பாக வணிகவரி. இந்த பட்ஜெட்டில்  வணிக வரி மூலம் கிடைக்கும் வரி அதலபாதாளத்திற்குச் சென்று, 2.31 சதவிகிதம் என்ற அளவில் குறைந்ததும்  இந்த நிதி பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்துவிட்டது. பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவும், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாலும் அரசுக்கு வணிக வரி மூலமான வருவாயில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறை பட்ஜெட்டாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தாலும், அரசின் இலவசத் திட்டங்களை நிறுத்தவோ, அரசின்  வருவாயை பெருக்கும் திட்டங்களோ இல்லாமல் இருப்பதை பார்க்கும்போது,  உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு தீட்டப்பட்ட பட்ஜெட்டாகவே தோன்றுகிறது. தமிழக அரசு ஏற்கனவே வழங்கி வரும் விலையில்லா ஆடு மற்றும் மாடுகள் வழங்கும் திட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 182 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப் திட்டத்திற்கு 890 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் அறிவித்த பெண்களுக்கு ஸ்கூட்டர் திட்டம் இந்த பட்ஜெட்டில் மிஸ்ஸாகியுள்ளது.  மாதம் தோறும் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் அரசுக்கு 1,607 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தமிழகம் விஷன் -2023' திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசு ஐந்து இயக்கங்களை வடிவமைத்துள்ளது.

தொழில் முனைவோர் மாநாடு நடத்தி, தமிழகத்திற்கு 2.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. ஆனால் அதன் நிலைகுறித்து இந்த பட்ஜெட்டில் விரிவாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் அ.தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கபட்ட 'வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகட்டி தரப்படும்' என்ற அறிவிப்பு,  இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

வரும் ஐந்து ஆண்டுகளில் நகர் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு பத்து லட்சம் புதிய வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது. அதே போல் குறு விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு என்று பிரத்யேக அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று விவசாயிகள் தரப்பில் கவலை தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள நிறை மற்றும் குறைகள் குறித்து பொருளாதார வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள்...?

பேராசிரியர் சீனிவாசன்

பட்ஜெட்டைப் பார்க்கும்போது செலவுகள் அதிகமாகியிருப்பது தெரிகிறது. அதே நேரம் வரிவருவாய் குறைந்துள்ளது. இதுதான் பற்றாக்குறை அதிகரிக்க காரணம். ஒருலட்சம் கோடி ரூபாய் வரி வருவாயைக் கூட எட்ட முடியாத நிலைதான் இங்கு உள்ளது. வரிவருவாய் குறைந்ததற்கு பெட்ரோல் விலை குறைவும், டாஸ்மாக் கடையை மூடுவதாலும் வரிவருவாய் குறைந்துவிட்டதாக அரசு தெரிவிக்கிறது என்றால் ஒருமாநிலத்தின் வரிவருவாயை இரண்டு பொருட்களின் மீது மட்டுமே அரசு வைத்துள்ளது என்பது தெரிகிறது.

இது எந்த மாதிரியான அரசு நிர்வாகம் என்று தெரியவில்லை? தமிழகத்தில் இந்த இரண்டு பொருட்கள் மட்டும்தான் உள்ளதா, இன்னும் மீதமுள்ள லட்சக்கணக்கான பொருட்கள் மீதான வரிவருவாய் நிலை என்ன ஆனது. முறையாக அவை வசூல் செய்யப்படவில்லை என்பதுதான் இதன் அர்த்தம். இன்னும் இரண்டு வருவாய் கேந்திரங்கள் உள்ளன. ஒன்று பத்திரப்பதிவு, இன்னொன்று மோட்டார் வரி. ஆனால் இந்த வரி வருவாய்களும்கூட அதிகளவில் வளர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் அதிகமாக நகர்மயமான மாநிலம் தமிழகம் என்று பெருமைபட்டுக் கொள்கின்றோம்.

அப்படி நகரமாக மாறியிருந்தால், இடத்தின் மதிப்பு கண்டிப்பாக அதிகரித்து,  வரி வருவாயும் அதிகரித்து இருக்கும். அதேபோல் அதிக மோட்டார் வாகனங்களும்  புழக்கத்தில் வந்து வரி வருவாயை அதிகரித்து இருக்கும். இதை அரசு கவனத்தில் கொண்டதா என்று தெரியவில்லை. அதேபோல் வணிகர்கள், அரசின் வரிவிதிப்பிற்கு எந்த அளவு வளைந்து கொடுப்பார்கள் என்றும் தெரியவில்லை.

ஊழல் அதிகமாக இருக்கும் துறை என்றால், அது வரித்துறைதான். அதில் பொதுமக்களும் பங்குகொள்வதால்தான் அதில் நடைபெறும் ஊழல்கள் பற்றி யாரும் பேசுவது இல்லை. அதே போல தமிழக அரசு  அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களுக்கு செலவீனங்கள் அதிகமாக இருக்கும். ஆனால்  அதை ஈடுகட்ட  அரசு திறமையாக செயல்பட வேண்டும். செலவு அதிகமாக கூடிக்கொண்டே செல்லும் போது, அதை திறம்பட நிர்வாகிக்கும் திறன் அரசுக்கு வேண்டும். அரசு திறம்பட செயல்படாவிட்டால், அரசின் திட்டங்கள் மீது மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். விலை ஏற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகும். இதுவும் வருவாய் குறைவுக்கு ஒரு காரணம்.

தமிழக அரசு கடன் வாங்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளது. ஒரு மாநில அரசு, அதன் உற்பத்தி வருவாயில் மூன்று சதவீதம் கடனாக வாங்கலாம் என்று சட்டம் உள்ளது, அதில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்து 3.5 சதவீதமாக மாற்ற  உள்ளது. ஏற்கனவே அதிகளவில் கடன் வாங்கி, தமிழக அரசு பற்றாக்குறையில் இருக்கும் நிலையில், மீண்டும் அதிகமாகக் கடன் வாங்கினால் அந்த வட்டியை எப்படி கட்டுவார்கள். மேலும் அடுத்த ஆண்டு ஊதியக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்தும்போது இன்னும் செலவு அதிகரிக்கும். இன்னும் கடன் அதிகமானால் அதை ஈடுகட்ட அரசு என்ன செய்யப் போகிறது என்பதற்கான எந்த விளக்கமும் சொல்லப்படவில்லை. எனவே இது பற்றாக்குறை பட்ஜெட்டாக இருந்து, அது வரும் ஆண்டுகளிலும் தொடர இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

எஸ்.ஆர். ராமன், பொருளாதார நிபுணர்

தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் இல்லாமல் இருப்பது சாமான்ய மக்களுக்கு சந்தோஷத்தை தந்தாலும், நிதிப் பற்றாக்குறை ரூ. 15,854 கோடியாக இருப்பது கவலைப்பட வேண்டிய விஷயம்.
பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 24,310 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இது கடந்த ஆண்டை விட ரூ.3373 கோடி அதிகம். மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் கொடுப்பதும் நல்லதுதான். அதே போல் மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது, தொழில் துறையின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டதாகவே உள்ளது.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ. 1680 கோடி அளவுக்கு தள்ளுபடி என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், அது மட்டுமே போதாது என விவசாயிகள் கூறுவது யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது. 'அடுத்த ஐந்தாண்டுகளில் 18,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்' என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் அந்தப் பணிக்கு தேவையான நிதியை,  ஐந்து ஆண்டுகளுக்கு தமிழக அரசு ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும்.

மோனோ ரயில் திட்டம்  பற்றி இந்த பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடாதது சென்னை மக்களுக்கு வருத்தமான விஷயம்தான். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கியுள்ளார்கள், ஆனால் அந்த நிதி போதாது. சென்னை போன்ற நகரங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கும் இடங்கள் ஏராளமாக உள்ளன. அதை துாய்மை செய்யவும், ஸ்மார்ட் சிட்டியாக மாற்றவும் மேலும் நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும்.

இலவச திட்டங்களை குறைத்து, உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதத்தில் திட்டங்களை அரசு கொண்டுவந்தால் வருவாய் பெருகும். மத்திய அரசின் 'முத்ரா திட்டம்' போல தமிழகத்திலும் இலவச கடன் திட்டம் கொண்டுவந்தால் பொறியியல் பட்டதாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பட்ஜெட்டில் ஆடம்பர செலவுகளுக்கும், அந்நிய உணவு வகைகளுக்கும் கூடுதல் வரி விதித்து இருந்தால், வருவாய் ஈட்டியிருக்கலாம், இளைஞர்களிடமும் அந்த பழக்கங்கள்  குறைந்திருக்கும்.

- அ.சையது அபுதாஹிர்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ