Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்னொரு நிர்பயாவா ‘அவள்’...? டெல்லியில் மீண்டும் கொடூரம்

ங்கள் பள்ளி காலத்திலோ அல்லது கல்லூரி காலத்திலோ, வேதியியல் ஆய்வகத்தில் செறியமிலத்தை (Concentrated Acid) கையாளும் போது, எவ்வளவு கவனமாக கையாள்வோம். ஒரு சொட்டு அமிலம் நம் விரல்களில் பட்டால், நம் விரல் பொத்துக் கொள்ள கூட வாய்ப்பு இருக்கிறது. அதே அமிலத்தை நாம் குடிக்க நேரிட்டால் என்ன நிகழும்...?  நம் நாக்கு, நம் குடல், கல்லீரலை அந்த அமிலம் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கும். இறுதியில் மரணம்தான் என்றாலும், வார்த்தைகளால் எழுத முடியாத, ஒரு கொடுமையான வலிக்கு பிறகுதான் அந்த மரணம் வந்து சேரும். 

அந்த வலியை, அந்த மரணத்தை  கற்பனை செய்து பாருங்கள். மனம் பதறுகிறது அல்லவா...?  உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலும் படியுங்கள். இப்படியான மரணம்தான் அவளுக்கு நிகழ்ந்தது. ஆம். பதினான்கு வயதே ஆன, ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த அவளுக்கு,  உடல் உறுப்புகளை மெல்ல அரிக்கும் அமிலம் வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டது. அது கொடுக்கப்படுவதற்கு முன், அவள் மோசமாக பலமுறை பலாத்காரமும் செய்யப்பட்டாள்.  பின், அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி கடந்த ஞாயிற்றுக் கிழமை இறந்து போனாள்.

யார் அந்த அவள்...?

அவள் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் வசிக்கிறாள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அவள், தன் அண்டை வீட்டில் வசிக்கும் சிவ்சங்கர் என்பவனால் பலாத்காரம் செய்யப்பட்டாள். இது குறித்து காவல் துறையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் (பாக்ஸோ) கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே, மீண்டும் மே 15 ம் தேதி, சிவ்சங்கரின் அத்தையால் கடத்தப்பட்டு இருக்கிறாள். கடத்தப்பட்டது மட்டும் அல்லாமல், மீண்டும் மீண்டும் அவள் சிவ்சங்கரால் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறாள்.  அவளுக்கு எந்த உணவும் தரப்படவில்லை. அவளுக்கு இறுதியாக தரப்பட்டது அமிலம் கலந்த குளிர்பானம். அவளது உறுப்புகளை சிதைப்பதற்காக அந்த குளிர்பானம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அவளது பெற்றோரின் நீண்ட போராட்டத்திற்கு பின்பு, மே 19 - ம் தேதி இது குறித்த வழக்கு, புராரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.  மே 27 ம் தேதி சிதைக்கப்பட்ட நிலையில் அவளை கண்டெடுத்து,  அவளது பெற்றோரிடம் காவலர்கள் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

இது குறித்து அவளது பெற்றோர், “காவல் நிலையத்தில், அவளுக்கு நடந்த அவலங்களைச் சொன்னோம். ஆனால், அதை அங்கு இருக்கும் காவலர்கள் பதிவு செய்ய மறுத்துவிட்டார்கள்.

அவர்கள் இதை பதிவு செய்ய மறுத்தது மட்டுமல்லாமல், நடந்த விஷயங்களை மாஜிஸ்ட்ரேட்டிடமும் சொல்லக் கூடாது என்று வற்புறுத்தினார்கள்.” என்கிறார்கள்.

அவளை நார் நிகேதனில் (பாதிகப்பட்டோருக்கான இல்லம்)   சேர்த்துவிட்டு, காவலர்கள் சென்று விட்டார்கள்.  வறுமையின் பிடியில் இருக்கும் அவளது குடும்பத்துக்கும், அவள் அங்கு இருப்பதுதான் சரியெனப்பட்டு இருக்கிறது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே அவர்களுக்கு நார் நிகேதனில் இருந்து அழைப்பு வந்து இருக்கிறது. 'அவளது உடல்நிலை மோசமடைந்துவிட்டது. அவளை அழைத்து செல்லுங்கள்' என்று சொல்லி இருக்கிறார்கள். அவளது பெற்றோர் விரைந்து,  அவளை அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.

இதன் பின்தான், இந்த விஷயம் ஊடகத்தில் கசியத் துவங்கி இருக்கிறது. ஊடகங்களில் இந்த செய்தியை பார்த்த டெல்லி மகளிர் ஆணையம், உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அவளை தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறது. ஆனால், எந்தப் பலனும் இல்லை. கடந்த ஜூலை 24 அன்று, அவள் இறந்து போனாள்.

வழக்கம் போல் விரைந்து (!?) செயல்பட்டு,  சிவ்சங்கரை அவள் இறப்பதற்கு முன் தினம் கைது செய்து இருக்கிறது காவல்துறை.
 
இன்னொரு நிர்பயாவா ‘அவள்’...?


அவளை இன்னொரு நிர்பயா என்கிறார் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால். சமூக ஊடகத்தில் தன் விரக்தியையும், கையறு நிலையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.  அவரது ஒரு பதிவில், “இன்னும் எத்தனை நிர்பயாக்கள் டெல்லிக்கு வேண்டும்... இன்னொரு நிர்பயா இறப்பிற்காக நாம் காத்துக் கொண்டிருகிறோமா...?. அவள் இறந்துவிட்டாள். நாம், இந்த அமைப்புதான் ( system) அவளை கொன்றுவிட்டது. இப்படி ஒரு ஆதரவற்ற நிலையை நான் உணர்ந்ததில்லை. நாம் ஏதாவது செய்ய வேண்டு, வாருங்கள்...” என்று சமூக ஊடகத்தில் அழைப்பு விடுத்து இருக்கிறார்.

ஆனால், யாரும் வருவதாகதான் தெரியவில்லை.

தென் இந்தியாவில் இருப்பவர்களுக்கு  எப்போதும் ஒரு வருத்தம் இருக்கும். 'அது ஏன், டெல்லியில் ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் மட்டும் பெரிதாக எழுதுகிறீர்கள்... பேசுகிறீர்கள்... போராடுகிறீர்கள்... ஆனால், தமிழகத்திலோ அல்லது கேரளத்திலோ நடந்தால் அதை கண்டு கொள்ளமாட்டேன்' என்கிறீர்கள் என்று.

இனி அது குறித்த கவலை தேவையில்லை. ஆம், இந்த 14 வயது ‘அவளுக்காக’ நீதி வேண்டி யாரும் டெல்லியிலேயே கிளர்ந்தெழவில்லை. நிச்சயம் இது நன்மைக்கானது அல்ல.

டெல்லியில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:


“டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த மே 2016 - ல் மட்டும், 201 பலாத்கார வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதில் 82 வழக்குகள், குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமைகளுக்காக பதியப்பட்டவை.” என்கிறார் சுவாதி மலிவால்.

இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், பெண்கள் பாதுகாப்பு சிறப்பு பிரிவை மத்திய அரசு கலைக்க முடிவு செய்து இருப்பதுதான். நிர்பயா சம்பவத்திற்கு பின் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுபடுத்த பெண்கள் பாதுகாப்பு சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டது. ஆனால், அதை கலைக்க இப்போது மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

இதை கலைக்க கூடாது என்று வலியுறுத்தி, மலிவால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

- மு. நியாஸ் அகமது | ஓவியம் : ஹாசிப் கான்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close