Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிநீரில் குறைகிறதா குளோரின்? டைபாய்டில் தவிக்கிறது சென்னை! #WhereIsMyGreenWorld

ன்னொருமுறை வெள்ளம் வந்தால் சென்னையைக் காப்பாற்ற முடியுமா,மழை வெள்ளம் வெளியேறாவிட்டால் வரக்கூடிய தொற்று நோய்களைத் தடுக்க முடியுமா என்று சென்னை வாசிகளுக்கு, கடந்த ஆண்டு (நவம்பர், டிசம்பர்-2015) நிகழ்ந்த வெள்ள பாதிப்பு வேறு அவ்வப்போது நினைவில் வந்து அச்சுறுத்துகிறது.

இந்நிலையில்,வழக்கமாக வரும் பருவகால நோய்கள் காலமுறை தவறி வந்து கூடுதல் அச்சத்தை வேறு தந்து  கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப்போல கொட்டும் மழையும் பெருகும் வெள்ளமும் வந்து சென்னை மக்களை  தவிக்கவிடுமோ என்பதை உறுதியாக கணிக்க இயலவில்லை என்றாலும் வட  மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை ஏதோ ஒன்றை சைலண்டாக கூறத்தான் செய்கிறது.

அண்மைக்காலமாக சென்னை தவிர்த்து பரவலாக அதிகமான அளவில் வெளி மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாகியுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி எல்லையில் மழையின் வேகம் பரவாயில்லை என்றாலும் அதை ஒட்டியுள்ள ஓசூர் நகரம் வெள்ளத்தில் சில நாட்களாக மிதந்து கொண்டிருக்கிறது.

ஆற்று மணல் சுரண்டல், நிலத்தடி நீர் மாசுபடுதல், அதிக உஷ்ணத்தை பூமியில் விளைவிக்கக் கூடிய பொருட்கள் தயாரிப்பு, மலைகளில் கனிமங்களைச் சுரண்டுதல், விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகள் நிறுவுதல், கூவம் நதி, பக்கிங்ஹாம் கால்வாய் கரைப்பகுதிகளில் முளைத்து நிற்கும் உயரமான கட்டிடங்கள் இப்படி பல விஷயங்கள் இயற்கைக்கு எதிர்திசையில் போய்க் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் எல்லாத் தரப்பினருக்கும் தெரிந்ததேதான் நடக்கின்றது.

சித்திரையில் பெய்யும் கோடை மழையும் , ஐப்பசியில் கொட்டும் அடைமழையும் பொய்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக ஆடியிலும், ஆனியிலும் கனமழை அடிக்கிறது. மழைநீரை சேமித்து வைக்க முழுமையான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் இல்லை என்பது கவலை அளிக்கும் ஒன்று.  பெய்யும் மழைநீர் அவ்வளவும் கடலில்தான் கலக்கிறது.

சென்னை பெரம்பூர் மேட்டுப்பாளையம் அருந்ததி நகரில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் அடிப்படைப் பிரச்சினையாக அடிக்கடி தலையெடுப்பது, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதுதான். அன்றாடக் கூலிகள் அதிகம் வசிக்கும் இந்த இடம் சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்டது. ‘குடிநீரில் கழிவு நீர் கலப்பதை’ தடுக்கும் வகையில் குழாய்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இப்பகுதிக்கு வரும் போதெல்லாம் உறுதி கூறும் அதிகாரிகள் தான் இந்தப்பகுதி மக்களின் நம்பிக்கை நாயகர்கள்.ஆனால் அவர்களின் வாக்குறுதிகள் வழக்கம்போல காற்றில் கலந்துவிடும்.

அருகில் உள்ள பெரம்பூரின் 'பிரதான' பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை, தண்ணீர் வரத்தும் அங்கு  அதிகம் என்பதால், அருந்ததி நகர் வாசிகளுக்கு பிரதான பெரம்பூரே ஆதரவாக இருக்கிறது. ஆம், சுமார் 5 முதல் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து அவர்கள் இங்கிருந்து தண்ணீர் பிடித்துச் செல்கிறார்கள். நகரத்துக்குள், ஒரு கிராமம் போல தண்ணீர்க் குடங்களுடன் முதியோர், பெண்கள், கல்லூரி மாணவர்கள் காலை 6.45 முதல் 7.30 வரை தண்ணீர் பிடித்துச் செல்வதைத் தினம்தோறும் காணலாம்.

தண்ணீர் பிடிக்கும் காலை நேரத்தை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியமான காரணம் இருக்கிறது. சென்னையில் உள்ள குடிநீர் வழங்கும் சாலையோர கைப்பம்புகள், வீடுகளில் உள்ள கைப்பம்புகளில் அதிகாலை 4.45-மணிக்கு தண்ணீர் வர தொடங்குகிறது.இந்த நேரத்தில் அவ்வப்போது மாறுதலும் இருக்கும். தண்ணீர் இணைப்பைத் துண்டிக்கும் நேரமும் அதே போல் 7.30 முதல் 7.55 வரை என்று கூட கொஞ்சம் கரிசனம் காட்டி ஊழியர்கள் நிறுத்துவது உண்டு. ஆனால், நல்ல தண்ணீர் வேண்டுமென்றால் அது காலை 6.45 முதல் 7.55 வரையில் அதாவது தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும் வரையில்தான்  கிடைக்கும். 6.45-க்கு முன்பாக வருகிற தண்ணீரில் கலங்கல் அதிகமாகக் காணப்படும், குளோரின் இருப்பதில்லை. ருசியான, பாதுகாப்பான குடிநீருக்கு 6.45- க்குப் பின்னர் குழாயடிக்குச் செல்வதே சிறந்தது. அவசர வேலையாகச் செல்ல வேண்டியவர்கள், அந்த நேரத்தில் வருகிற குடிநீரைப் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அது தான் அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பைக் கொண்டு வந்து விடுகிறது.ஏன் எனில் இதில்தான் நோய்த் தொற்று ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.  

கடந்த சில வாரங்களாக சென்னையில் பரவலாக டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் தொடர்பான நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் காணப்படுவதைப் போல ஆங்காங்கே உள்ள மெடிக்கல் ஷாப் முன்பாக மக்கள் கூட்டம் காலை மாலை வேளைகளில் நிரம்பி வழிகிறது. பெரும்பாலும் குழந்தைகள் முதியவர்களை இந்த இடங்களில் அதிகம் காண நேர்வதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.வருகிற 100 நோயாளிகளில் 70 பேர் மலேரியா,டைபாய்டு நோய்களுக்கே சிகிச்சை எடுக்கவும் மருந்துகள் வாங்கவும்  வருகிறார்கள்.

சென்னை ராயபுரம் தொகுதியில் என்.என்.கார்டன் தெரு, தட்டான்குளம் தெரு, சஜ்ஜா முனுசாமி தெரு, முனிராம் பாண்டியன் தெரு, பார்த்தசாரதி பிள்ளை லேன், எம்.எம்.ஆகிய பகுதிகளில்  டைபாய்டு, மலேரியா தாக்குதலுக்கு ஆளான பொதுமக்கள் அதிகம் உள்ளனர். அதே போல் ஆர்.கே.நகர் தொகுதியில், ஆர்.கே. தெரு, ஆதி திராவிடர் தெரு, பட்டேல் நகர், கே.ஜி. கார்டன், கார்ப்பரேசன் காலனி, நேதாஜிநகர் போன்ற பகுதிகளிலும் அதிக அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துரைப்பாக்கம்-கண்ணகி நகர், அயன்புரம், செம்பியம், ஓட்டேரி கு.மா.வா. பகுதி, திருவொற்றியூர் ராஜா கடை பகுதி, தாங்கல் ஆகிய பகுதிகளையும் மலேரியா,டைபாய்டு விட்டுவைக்கவில்லை.

பெரம்பூர், ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் பகுதிகளில் வசிப்பவர்களிடம் பேசினேன். "எந்த வீட்டிலயும் தண்ணீ ருசியாவே வர்றதில்லைப்பா. முதலில் எல்லாம் தண்ணீர் வந்தா, அது ரெண்டு நாளைக்கு கசப்பா இருக்கும், அந்த குளோரின் மருந்து நெடி அப்படியே இருக்கும். இப்ப அந்த வாசனையே கிடையாது. அது என்னமோ எந்த ருசியும் இல்லாம மண்ணு மாதிரி இருக்குது. சூடு பண்ணி குடிச்சா தப்பிச்சுக்கிட்டோம். இல்லைன்னா, அந்த தண்ணியைக் குடிச்ச அரைமணி நேரத்துலயே தலைக்கு பாரம் வந்து சேர்ந்திடும், தலைவலியில் படுக்க வெச்சு ஆளையே ஜூரத்துல கவுத்துடும்" என்கின்றனர்.

சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் முதன்மை நீர் ஆய்வாளர் சென்னை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம், இந்தத்  தகவலைக் கொண்டு சென்றேன். நாம் சொன்னதை உன்னிப்பாகக்  கேட்டுக் கொண்டவர்கள், ஒரே மாதிரியாக, "மேலதிகாரியிடம் பேசி விட்டு வருகிறேன்" என்று மட்டும் பதில் தந்தார்கள்.

பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி மட்டும், "குடிநீரில் இருக்கும் நோய்க் கிருமிகள் மூலம் பொதுமக்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில், வழக்கத்தைவிட அதிகமாக குளோரின் கலந்து விநியோகம் செய்ய சுகாதாரத்துறை கூறியுள்ளது. குடிநீரில் 0.5 பிபிஎம் (ppm) அளவுக்குதான் குளோரின் கலக்கப்படும். தற்போது 1 பிபிஎம் குளோரின் கலக்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், டேங்கர் லாரிகள் போன்றவற்றில் 2 பிபிஎம் குளோரின் கலக்கவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தக்  குடிநீர் பொதுமக்களைச் சென்றடையும்போது 1 பிபிஎம் அளவு இருப்பதை உறுதி செய்ய, ‘குளோரோ ஸ்கோப்’ கருவி மூலம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், இதைச் செயல்பாட்டில் வைத்துள்ளார்களா? என தெரியாது" என்று நழுவிக் கொண்டார்.

டெபுடி கலெக்டர் (நிர்வாகம்) ஜி.சம்பூர்ணம், எண்ணில் தொடர்பு கொண்டேன், மறுமுனையில் இருந்த குரல் "அவங்க முக்கியமான ஒரு மீட்டிங்ல இருக்காங்க. முடிஞ்சுடும், உங்ககிட்டே பேசுவாங்க" என்றது.

அடுத்ததாக, சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை உயரதிகாரிகளில் ஒருவரான எம்.முருகன், கருத்தைக் கேட்டேன். "போதிய மருத்துவர்களை நாங்கள் முன்னெச்சரிக்கையாக அலெர்ட் செய்து வைத்துள்ளோம். குளோரின் அளவை அவ்வப் போது சோதித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

நீங்கள் இது தொடர்பாக பிற தகவல்களைக் கேட்கவோ, புகார் தெரிவிக்கவோ மெட்ரோ வாட்டர் சைடில்தான் பேச வேண்டும்" என்றார். 'இது போன்ற புகார்கள் பொதுமக்களிடமிருந்து நேராக உங்களுக்குத்தான் வரும், யாரும் மெட்ரோ சைடில் போய்ச் சொல்லப் போவதில்லை, அந்தக் குறைகளை சென்னை மாநகராட்சி மூலமாக மெட்ரோவுக்கு தெரிவிக்கலாமே?' என்றேன். " ஆமாம் சார், நாங்க செய்து கொண்டுதான் இருக்கிறோம்" என்பதோடு அந்த உயரதிகாரி முடித்துக் கொண்டார்.

சென்னை மாநகராட்சியின் கமிஷனராக இருந்த விக்ரம்கபூர் தான், இப்போது குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர். அவரை லைனில் பிடித்தேன், ஆனால் தொலைத் தொடர்பில் ஏதோ சிக்கல் இருந்ததால் அவரால் நம்மிடம் சரியாகப் பேசி விளக்கம் அளிக்க முடியவில்லை. அதனால் சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா.துரைசாமியின் கவனத்துக்கு இதைக் கொண்டு போனேன். அவரோ, "மன்றங்களில் அமர்ந்து கொண்டு இந்த திமுகவினர் கூட இப்படித்தாங்க, எல்லாத்துக்கும் சென்னை மாநகராட்சிதான் காரணம்னு குற்றம் சொல்ல ஆரம்பிச்சுடறாங்க. அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. இதுக்குத் தனியாகவே மெட்ரோ வாட்டர் எம்.டி.ன்னு ஒரு அதிகாரியைப் போட்டிருக்காங்க, அவர்தான் இதற்கு பொறுப்பு. இது சென்னை மாநகராட்சியின் அதிகார வரையறைக்குள் வரவே வராது" என்றார்.


- ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close