Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எங்களை மன்னிக்காதே நவீனா..! - ஒரு மரணம் உணர்த்தும் உண்மை

ப்போது எல்லோராலும் விவாதிக்கப்பட்டது. கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. ஊரே பரபரப்பாக இருந்தது. சாதிக் கலவரம் ஏதாவது ஏற்பட்டுவிடுமோ என்றும் மக்கள் அச்சப்பட்டார்கள். நல்ல வேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

இந்த அனைத்து பரபரப்பிற்கும் காரணம், 'தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் கை கால், சாதி இந்துக்களால் (Caste Hindus) வெட்டப்பட்டது' என்று பரவிய செய்திதான்.  செந்தில் மீது அப்போது அனைவருக்கும் ஒரு பரிதாபம் ஏற்பட்டது. அவருக்கு நீதி வேண்டுமென்று செயற்பட்டாளர்கள் களத்தில் இறங்கினார்கள்; தொடர்ந்து போராடவும் செய்தார்கள்.  ஆனால், அப்போது கொஞ்சம் நிதானித்து, தீர விசாரித்து இந்த பிரச்னையை அணுகி இருந்தால், இன்று ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும். ஆம், அரிதாரமற்ற வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நீதியின் பக்கம் இருக்கிறோம் என்று,  உண்மையை தீர விசாரிக்காமல் செயல்பட்டவர்களால்தான் இன்று நவீனா ’கொல்லப்பட்டு’ இருக்கிறாள். நிச்சயம் அவள் மரணத்திற்கு செந்தில் மட்டும்தான் காரணம் என்று நாம் தப்பிவிட முடியாது.

யார் இந்த செந்தில்...?

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் பிற்பகுதி. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செந்தில், பாண்டிச்சேரி ஜிப்மர்  மருத்துவமனையில் கை, கால் அற்ற நிலையில் அனுமதிக்கப்படுகிறார். இந்தச் செய்தி பாண்டிச்சேரியில் உள்ள ஒரு அரசியல் பிரமுகருக்கு தெரியவருகிறது. அந்தப் பிரமுகர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட கட்சியில் அண்மையில்தான் இணைந்து இருந்தார். தனக்கான அடையாளங்களுக்காக போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு இந்தச் சம்பவம் தெரியவந்ததும், இதை வைத்து தன் காய் நகர்த்தலை துவங்குகிறார்.  செந்திலைச் சந்திக்கிறார். செந்திலும், “நான் ஒரு  பெண்ணை காதலித்தேன். அந்த பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள்தான் என் கை, காலை வெட்டிவிட்டார்கள்...” என்கிறார்.

இதை வைத்து வெகு தீவிரமாக தன் அரசியல் நகர்வுகளை அந்தப் புள்ளி நகர்த்துகிறார். இந்த செய்தி ஊடகங்களை எட்டுகிறது. இன்னொரு ஆணவக் கொலைக்கு முயற்சியா என்று செய்திகள் வெளியாகின்றன. அப்போது, செந்திலின் நிலையைப் பார்த்தவர்கள், அதுதான் உண்மை என்றும் நம்பினார்கள்.  

பின் செயற்பாட்டாளர்கள் அ. மார்க்ஸ், கோ. சுகுமாறன் தலைமையிலான உண்மை அறியும் குழு,  செந்திலைச் சந்தித்தது. செந்திலை மட்டும் அல்ல, முதன்முறையாக செந்தில் யார் தன்னைச் சிதைத்தவர்கள் என்று குற்றம் சுமத்தினாரோ, அவர்களையும் சந்தித்தது.  இந்தப் புள்ளியில்தான் உண்மைகள் வெளியே வர துவங்கின.  செந்திலை யாரும் தாக்கவில்லை என்று அ. மார்க்ஸ் குழு மிக தெளிவாக அறிக்கை வெளியிட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக அப்போது மார்க்ஸையும் விமர்சித்தார்கள். அவருக்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டார்கள். ஆனால், மார்க்ஸ் மிக உறுதியாக இருந்தார்.

அதன் பின்னர்தான், செந்தில் குறித்த செய்திகள் ஒவ்வொன்றாக வெளியே வரத் துவங்கின. செந்தில் ஏற்கெனவே, கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதற்காக, நீதிமன்றத்தால் தண்டனைக்கு உள்ளானவர். இப்போதும் ஜாமீனில்தான் இருக்கிறார் என்ற செய்தி வெளியே வந்தது. அடுத்து வந்த மருத்துவ அறிக்கை, செந்திலுக்கு ஏற்பட்ட காயங்கள் நிச்சயம் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதால் ஏற்பட்டது அல்ல. அது ரயில் ஏறியதால் ஏற்பட்ட விபத்து என்று குறிப்பிட்டது.  பின் காவல்துறையும், இந்தக் கோணத்தில் தீவிரமாக விசாரித்ததில் அது ரயில் விபத்தினால் ஏற்பட்ட காயங்கள்தான் என்று தெரியவந்தது.

அதன்பின், அந்த சமயத்தில் செந்திலுக்காக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்ட சில கட்சிகள் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தன.  

நவீனா காப்பற்றப்பட்டு இருப்பாள்!

செந்திலுக்காக செயற்பாட்டளர்கள், கட்சிகள் உணர்ச்சிவசப்பட்டதற்கும், இன்று நவீனா இறந்ததற்கும் என்ன தொடர்பு...? நெருங்கிய தொடர்பு இருக்கிறது. செந்தில்,  தான் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், அதனால்தான், தன்னைத் தாக்கினார்கள் என்றும் சொன்னார் அல்லாவா...? அந்த பெண்தான் நவீனா.  அப்போது பள்ளிப் படிப்பையே முடிக்காத அந்தப் பெண்ணை, ஒரு தலையாகக் காதலித்திருக்கிறார் (இதை காதல் என்றே குறிப்பிடக் கூடாது!). நவீனா மறுத்தும், அவரை விடுவதாக இல்லை. பின் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து இருக்கிறார். ஒரு கட்டத்தில், தனது ஊனம் காரணமாகத்தான் தன் காதலை நவீனா ஏற்க மறுக்கக் காரணம் என்று தாழ்மை உணர்ச்சியில் உழன்ற செந்தில், ஜுலை 30 ம் தேதி, தன் மீது தீ வைத்துக் கொண்டு, நவீனா மீது பாய்ந்து இருக்கிறார். செந்தில் சம்பவ இடத்திலேயே இறக்க, நேற்று நவீனா இறந்து இருக்கிறாள்.

சாதி, மதங்களற்றது  உண்மை!

நியாயமாக அன்று செந்திலுக்காகப் போராடியவர்கள் அனைவரும், உணர்ச்சிவசப்படாமல் இந்தப் பிரச்னையை ஆராய்ந்து, செந்திலுக்கு அறிவுரை கூறி இருந்தால், நிச்சயம் இன்று செந்திலும், உயிரோடு இருந்திருப்பார். நவீனாவும், அவள் விரும்பியது போல் செவிலியர் ஆகி இருப்பாள். ஆனால், அப்போது யாருக்கும் இந்த உண்மைகளைக் கண்டறிய நேரம் இருக்கவில்லை. உண்மையைக் கண்டறிந்து சொன்னவரையும் நம்பத் தயாராக இல்லை.  

நாம் அனைவரும் நியாயத்தைதான் நேசிக்கிறோம், நீதியின் பக்கம்தான் இருக்க விரும்புகிறோம். ஆனால், எது நீதி, உண்மை என்பதை அறிய, நம் முன்முடிவுகள் அனுமதிக்க மறுக்கின்றன. உணர்ச்சிவசப்பட்டு ஒன்றை அணுகுகிறோம். அந்தப் பண்புதான் இன்று இருவரின் உயிரை காவுவாங்கி இருக்கிறது.  பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்தான் நாம் நிற்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முன்முடிவுகளோடு அல்லாமல், உண்மையாக அவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று ஆராய்ந்த பின் செய்தல் நலம். ஏனெனில் உண்மைக்கு சாதி, மதம் இல்லை! 

- மு. நியாஸ் அகமது

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ