Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போட்டி சட்டமன்றம் புதிதல்ல!-தி.மு.கவின் 'உள்ளே,வெளியே'.

மிழக அரசியல் அடுத்தகட்ட தகிப்புக்குச் சென்றிருக்கிறது. சட்டமன்ற நடவடிக்கைகளிலிருந்து ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 79 பேர் பேரவைக்கு வெளியே பழத்துக்காகக் கோபித்துக்கொண்டு மலையெறிய முருகனைப்போல், 'எனக்கென்று ஒரு பேரவை...' 'எனக்கு என்று ஒரு சபாநாயகர்' எனத் தனி ஆவர்த்தனம் நடத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர் .

தமிழக சட்டப்பேரவையில் கடந்த புதன்கிழமை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பேரவையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கிளம்பிச்சென்றதும் தொடர்ந்த விவாதத்தின்போது, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ-வான குணசேகரன் தன் உரையின்போது, '' 'நமக்கு நாமே' என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையைப் பிடிக்கமுடியாது" என்று குறிப்பிட, அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க, தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கைவைத்தனர்.

அதேநேரத்தில், மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு கருத்தைத் தெரிவித்தார். ஆனால், அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார். அதை எதிர்த்து தி.மு.க உறுப்பினர்கள் நீண்டநேரமாக குரல் கொடுத்ததால், அவர்களை அவையைவிட்டுக் கூண்டோடு வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி, தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

முரண்டுபிடித்த ஸ்டாலினை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே கொண்டுவந்தனர். அதன்பிறகு அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க உறுப்பினர்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க-வுடன் ஒட்டும் இல்லை... உறவும் இல்லை என முகம் திருப்பிக்கொண்டிருக்கும் ம.தி.மு.க உள்பட பல கட்சிகள் கருத்துத் தெரிவித்தன.
 
இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மறுதினம் சட்டப்பேரவைக்கு வந்தனர். அவர்களை, சபாநாயகர் உத்தரவைக் குறிப்பிட்டு அவைக்குள் அனுமதிக்க மறுத்தனர் காவலர்கள். ''தாங்கள் சட்டமன்றத்துக்குள் வரவில்லை. தங்கள் அலுவலகத்தில் இருந்துகொண்டு மக்கள் பணியாற்றப்போவதாக''த் தெரிவித்தும் கறார் காட்டி திருப்பியனுப்பினர் காவலர்கள். இதனால், அங்கு தி.மு.க உறுப்பினர்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவானது.

இந்தத் தள்ளுமுள்ளுக்கிடையில் தலைமைச்செயலகத்துக்குள் வந்தார் ஸ்டாலின். அதே கோரிக்கை... அதே பதில். எரிச்சலான ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் பேரவையின் 4-ம் எண் வாயில்முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தனை களேபரங்களுக்கு நடுவே, சட்டமன்றத்துக்குள் பாடப்பட்ட வாழ்த்துப் பாடலுக்கு மேஜையைத் தட்டிக்கொண்டிருந்தனர் அ.தி.மு.க உறுப்பினர்கள்.

இதனிடையே தொடர்ந்து நேற்றும் சட்டப்பேரவைக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் வந்தனர். ஆனால், இந்த முறை உள்ளே, வெளியே விளையாட வந்திருந்தனர். ஆம். சட்டமன்றத்துக்கு வெளியே ஒரு போட்டி சட்டமன்றத்தை நடத்திக்காட்டும் திட்டத்துடன் அவர்கள் வந்திருந்தனர். பேரவையின் 4-ம் எண் வாயில்முன் ஸ்டாலின் தலைமையில் போட்டி சட்டமன்றத்தை நடத்தினர் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்.

விறுவிறுப்பும் பதைபதைப்புமாகக் கழிந்த 60 நிமிடங்கள்!

தி.மு.க உறுப்பினர்கள் காலை சுமார் 10.15 மணிக்கு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு  வந்தபோதே அவர்கள் காரில் இருந்து  சேர்கள் மற்றும் மைக், பேட்டரி போன்ற பொருட்களை இறக்கினார்கள். நான்காம் வாயில் அருகே உள்ள மரத்தடியில் சேர்கள் வரிசையாகப் போடப்பட்டன. அதில், நடுவே இருந்த சேரில் துரைமுருகன் வந்து அமர, அவருக்கு அருகில் இருந்த சேரில் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார். தி.மு.க உறுப்பினர்களின் இந்த நடவடிக்கை, பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பயத்தை ஏற்படுத்த உடனடியாகத் தங்கள் மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் பத்திரிகையாளர்கள் அங்கே திரண்டனர்.

முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் எதிரில் நடந்த இந்தப் போட்டி சட்டமன்றக் கூட்டத்தில், எதிர்க் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினும், மாதிரி அவை முன்னவராக பொன்முடியும், அமைச்சராக எ.வ.வேலுவும் செயல்பட்டனர். சட்டமன்றத்தைப்போன்றே தி.மு.க உறுப்பினர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து அமர்ந்துகொள்ள, அ.தி.மு.க அமைச்சர்களைப்போலவே இந்தப் போட்டிக் கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பேசினர். ஆளும் கட்சி, எதிர்க் கட்சிபோல தி.மு.க-வினர் எதிரெதிரே அமர்ந்து போட்டிக் கூட்டத்தில் வாக்குவாதம் செய்ததை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தபடி கடந்துசென்றனர். தலைமைச் செயலக ஊழியர்கள், காவல் துறையினர், அ.தி.மு.க-வினர் எனப் பலரும் இந்தப் போட்டி சட்டமன்றக் கூட்டத்தை வேடிக்கை பார்த்தனர்.

ஒரு விவாதத்தின்போது(?) எதிர்க் கட்சி உறுப்பினராகச் செயல்பட்ட ஜெ.அன்பழகன், சபாநாயகராக இருந்த துரைமுருகனைப் பார்த்து, “மாண்புமிகு சபாநாயகர் அவர்களே... உங்கள் அரசின் அம்மா தொட்டில் குழந்தைத் திட்டத்தை, 'ஆயா தொட்டில் குழந்தைத் திட்டம்' என மாற்றத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கோரிக்கைவைக்க, அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது. 'பொசுக்' எனச் சிரித்த துரைமுருகன், “மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தேவையின்றி அம்மா அரசை குறை சொல்லக் கூடாது. இந்தப் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்” என்று  (தனபாலின் மேனரிஸத்தில் நடித்துக்கூறி) தடுத்தார். அதற்கு உறுப்பினர்கள் பலமாகச் சிரித்தனர். திருவள்ளுர் தொகுதி தி.மு.க உறுப்பினர் ராஜேந்திரன், “எனது தொகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகிவிட்டார். ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூற, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக செயல்பட்ட பொன்முடி, “நான் பேப்பர் படிக்கும் பழக்கம் இல்லை. அதனால்  எனக்கு இதுபற்றித் தெரியவில்லை. உறுப்பினர் கருத்தை அம்மாவின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்” என்று கூற போட்டி சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.

போட்டிப் பேரவைக் கூட்டத்தை நடத்தியபின், செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ''தி.மு.க உறுப்பினர்கள் அவைக்கு வரக் கூடாது என்று அவைத் தலைவர் உத்தரவு போட்டிருக்கும் நிலையில், அவைக்குச் சென்ற தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அவையில், இடைநீக்கம் செய்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு அவைத் தலைவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல், பிற கட்சித் தலைவர்களும் இடைநீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். எதிர்க் கட்சித் தலைவர் அறைக்குச் செல்ல முடியாத அளவுக்கு அறை எண் 4-ன் கதவு பூட்டப்பட்டுள்ளது. சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடியாகத்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், யார் தவறு செய்கிறார்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரியும்.

இப்போது நாங்கள் நடத்திய மாதிரி சட்டமன்றத்தை நீங்கள் பார்த்தீர்கள். பதிவும் செய்துகொண்டீர்கள். பொதுமக்களும் பேரவைக் கூட்டம் எப்படி நடக்கும் என்பதை அறிந்துகொள்ள முடியும். மாதிரி சட்டமன்றம் எப்படி நடக்கும் என்பதை எங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு ஒரு மணி நேரம் நடத்தியிருக்கிறோம். இதில் யாரையும் கிண்டலோ, கேலியோ செய்து யாரையும் விமர்சிக்கக் கூடாது என்ற அடிப்படையில், மக்கள் பிரச்னையை மட்டுமே பேச வேண்டும் என்று உறுப்பினர்கள் அனைவருக்கும் உத்தரவிட்டு(?) நடத்தியிருக்கிறோம். ஒரு சட்டமன்றம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடத்திக் காட்டியிருக்கிறோம். இந்த இடைநீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். மேலும் தொடர்ந்து என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்துத் தலைவருடன் கலந்து பேசி முடிவு எடுப்போம்" என்றார்.

தமிழகத்துக்குப் போட்டி சட்டமன்றம் புதிதா என்று களமிறங்கினோம். தமிழக அரசியல் இதற்குமுன் 3 முறை போட்டி சட்டமன்றத்தைச் சந்தித்துள்ளது. முதன்முறை கடந்த 1996 - 2001 காலகட்டத்தில் தி.மு.க ஆட்சியின்போது எதிர்க் கட்சியாக  இருந்த காங்கிரஸ் ஒரு பிரச்னை குறித்து வெளிநடப்பு செய்தது. அப்போது, சட்டசபை வளாகத்துக்கு வெளியே அன்றைக்கு எதிர்க் கட்சித் தலைவராக இருந்த சோ.பாலகிருஷ்ணன் சபாநாயகராக இருந்து போட்டி சட்டமன்றத்தை நடத்தினார்.

இரண்டாவது, 2011-ல் புதிய சட்டமன்றத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நிறுவியபோது அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு எதிராகப் போட்டி சட்டமன்றத்தை நிகழ்த்தியது.அப்போது சபாநாயகராக இருந்து அதை நடத்தியவர் ஜெயக்குமார். இதுவும் பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், இவையெல்லாம் சட்டமன்றத்துக்கு வெளியே நிகழ்ந்தவை. தமிழக அரசியலில் சட்டமன்றத்துக்கு உள்ளேயே நடந்த, போட்டி சட்டமன்ற நிகழ்வு ஒன்றும் தமிழக வரலாற்றில் பதிவானது உண்டு. அதன் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.

தி.மு.க-வின் தளகர்த்தர்களில் ஒருவரும் அண்ணாவின் சீடருமான மதியழகனைக்கொண்டு நடத்தப்பட்ட அந்தச் சம்பவம், தமிழக அரசியலின் சுவாரஸ்ய பக்கம். ‘தி.மு.க-வின் ஐம்பெருந்தலைவர்களில் ஒருவர்’ என அழைக்கப்பட்ட கே.ஏ.மதியழகன், 1972-ல் அப்போதைய தி.மு.க அரசின் சபாநாயகராக இருந்தார். தி.மு.க-வுடன் முரண்பட்டு கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர்., சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கருணாநிதிக்கு குடைச்சல் தந்துகொண்டிருந்த நேரம். அப்போது, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தி.மு.க அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருந்தன.

நவம்பர் 13-ம் தேதியன்று கூடவிருந்த தமிழக சட்டமன்றத்தில் மதியழகன் எப்படி நடந்துகொள்வாரோ என்று கவலைப்பட்டார் தி.மு.க தலைவரும் அன்றைய முதல்வருமான கருணாநிதி. காரணம், கட்சித் தாவல் தடைச் சட்டம் அமலில் வராத காலம் என்பதோடு, மதியழகனின் சகோதரரான கே.ஏ.கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆர் அணிக்குச் சென்றிருந்தார். கணியூர் சகோதரர்களின் பாசம் தனக்கு ஆபத்தாகிவிடும் என அஞ்சினார் கருணாநிதி.

பொதுவாகப் பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நம்பிக்கை இல்லாத் தீர்மானம், அவற்றில் ஒன்று என்றால் அதை முதலில் எடுத்துக்கொள்வதுதான் மரபு. ஏனென்றால், நம்பிக்கைத் தீர்மானத்தில் மெஜாரிட்டி இழந்தால் பிற தீர்மானங்கள் அர்த்தமில்லாமல் ஆகிவிடும் என்பது சட்டவிதி.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளும் கட்சியான தி.மு.க சபாநாயகர் மதியழகன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அளித்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு முன்பு அதற்குத் தேதியிட்டது (30-10-72). சாமர்த்தியமாகச் சட்டசபைச் செயலாளர் 7-11-72 அன்றுதான் அதைச் சபாநாயகரிடம் அளித்தார்.

பெரும் பரபரப்புக்கிடையில் நவம்பர் 13-ம் தேதி சட்டமன்றம் கூடியது. தன் மீதான தீர்மானம் முறைகேடாக அளிக்கப்பட்டதாகச் சபாநாயகர் மதியழகன் தெரிவித்தார். மற்றொரு எதிர்க் கட்சியினர், 'சட்டசபையைக் கலைத்துவிட்டுத் தேர்தலுக்கு நிற்கத் தயாரா' என்று முதல்வருக்குச் சவால்விட்டனர். 'அந்தச் சவாலை ஏற்கலாம்' என்று சபாநாயகரே யோசனை(?) கூறினார். அதற்கு மூன்று வார காலம் அவகாசம் அளித்து சபையை அவர் ஒத்திவைத்தார்.

விஷயம் விபரீதமானதை உணர்ந்த தி.மு.க தலைமை அன்று மாலையே தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியது. ‘சபாநாயகரின் மேல் தங்களுக்கு நம்பிக்கை இல்லை’ எனத் தீர்மானம் நிறைவேற்றி அதை ஒரு கடிதம் மூலம் ஆளுநருக்குத் தெரிவித்தது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லையென்று சபைக்கு வெளியில் கூட்டம் நடத்தி ஆளுநருக்கு மனுக் கொடுத்தது, சட்டமன்ற வரலாற்றில் அதுவரை நடக்காத விஷயம்.

சட்டமன்றம் சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டால், அதை மீண்டும் கூட்டுகிற அதிகாரம் சபாநாயகருக்கே உண்டு. 1972 டிசம்பர் இரண்டாம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தை ஆளுநர் கூட்டினார். சபாநாயகர் மதியழகன் உத்தரவுப்படி டிசம்பர் ஐந்தாம் தேதி சபைகூட வேண்டும். சட்டமன்றத்தில் சபாநாயகரின் பிடி நழுவிவிட்டதை உணர்த்தும்விதமாக, திட்டமிட்டு கருணாநிதி இப்படிச் செய்ததாகப் பேசப்பட்டது.

மதியழகனும் பிரச்னையை விடுவதாக இல்லை. “சட்டசபையைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் சபாநாயகருக்கே பூரண உரிமையுண்டு. தம் அதிகாரத்தைப் பறிக்கும்வகையில், கவர்னர் கூட்டத்தொடரையே ரத்துசெய்தது செல்லாது” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ரிட் மனு’ தாக்கல் செய்தார் மதியழகன். ஆனால், உயர் நீதிமன்றத்தின் முடிவு தெரிவதற்கு முன்பே, 1972 டிசம்பர் இரண்டாம் தேதி தமிழக சட்டமன்றம் ஆளுநரின் உத்தரவுப்படி கூடியது.

கூட்டத்துக்கு மதியழகனே தலைமை தாங்கினார். தி.மு.க அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த சபாநாயகர், தீர்மானத்தின் மீது பேசும்படி எம்.ஜி.ஆரை அழைத்தார். அவர் எழுந்து நின்றதும், அவரைப் பேசவிடாமல் தி.மு.க உறுப்பினர்கள் பலர் கூச்சலிட்டுத் தடுத்தனர்.

அப்போது அவை முன்னவரும் கல்வி அமைச்சருமான நாவலர் நெடுஞ்செழியன் எழுந்து நின்று, “சபாநாயகர் மீது கொடுக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத்தான் முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதற்கு சபாநாயகர் மதியழகன், “அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்கெனவே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது” என்று கூறி, தொடர்ந்து பேசுமாறு எம்.ஜி.ஆரிடம் கூறினார். அப்போது நாவலர் எழுந்து, ‘‘துணைச் சபாநாயகர் பெ.சீனிவாசன் தலைமை வகித்து சபையை நடத்த வேண்டும்” என்று ஒரு திடீர் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளும் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் அதற்கு ஆதரவுக்குரல் எழுந்தது. அடுத்த நொடி, துணை சபாநாயகர் பெ.சீனிவாசன் சபாநாயகர் இருக்கையை நோக்கிப்போனார். சபாநாயகர் மதியழகனோ, விடாப்பிடியாக தம் இருக்கையைவிட்டுச் சற்றும் அசையாமல் அமர்ந்திருந்தார். உடனே தி.மு.க உறுப்பினர் ஒருவர், ஒரு நாற்காலியைத் தூக்கிவந்து சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் வைத்தார். துணைச் சபாநாயகர் பெ.சீனிவாசன், அதில் அமர்ந்துகொண்டு அவர் ஒரு பக்கம் சபையை நடத்தத் தொடங்கினார்.

ஒரே நேரத்தில் இரட்டைச் சபாநாயகர்களைச் சட்டமன்றம் அன்று கண்டது. ஆளும் கட்சி சார்பில் பெ.சீனிவாசன்... எதிர்க் கட்சி சார்பில் மதியழகன். ஒரே நேரத்தில் இரண்டு பேரவைக் கூட்டங்கள் அரங்கேறின. அதனால், எழுந்த கூச்சல் குழப்பத்தில் சட்டமன்றம் அதகளப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் தி.மு.க அரசுக்கு எதிராகச் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் எம்.ஜி.ஆர் பேசினார். அவரது மைக் அணைக்கப்பட்டது. தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூக்குரலிட்டு அவரது குரல் எடுபடாமல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அத்தனையையும் மீறி அவர் பேசியபோதுதான் அந்த நிகழ்வு நடந்தேறியது. எங்கிருந்தோ வந்த ஒற்றைச் செருப்பு எம்.ஜி.ஆர் மீது விழுந்தது. இந்த அதிகபட்ச அநாகரிகத்தைக் கண்டு வெறுத்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., "தமிழ்நாடு சட்டமன்றம் செத்துவிட்டது. நான் மீண்டும் உள்ளே நுழையும்போது முதலமைச்சர் ஆகத்தான் வருவேன்" என்று சபதமிட்டு வெளியேறினார். (சொன்னபடி 1977 தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை வெற்றியோடு முதலமைச்சராகவே சட்டமன்றம் சென்றார் அவர்.)

பிற்பகலில் சபையை டிசம்பர் நான்காம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு வெளியேறினார் மதியழகன். அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திராக் கட்சி உறுப்பினர்களும் வெளியேறினார்கள். திடீர் சபாநாயகராகச் செயல்பட்ட பெ.சீனிவாசன் அவையைத் தொடர்ந்து நடத்தினார். பின்னாளில் மதியழகன் மேல் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம், மதியழகனின் பதவியை இழக்கச் செய்தது.

இருபெரும் கட்சிகளுக்கிடையே எழுந்த அதிகார மோதலில் ஜனநாயக மரபுகள் காற்றில் பறக்கவிடப்பட்ட இந்தச் சம்பவங்கள், இனி வருங்காலங்களில் தொடராமல்... ஜனநாயகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிமுறையாக இருக்கும்.

காலம் முழுக்க யாரை எதிர்த்துக் கட்சியை நடத்தினாரோ, அந்த காங்கிரஸார் கோலோச்சிய சட்டமன்றத்தில் தம் கண்ணியமான நடவடிக்கையால் பாராட்டப்பெற்றவர் அண்ணாதுரை. இத்தனைக்கும் அன்று அவரது கட்சி உறுப்பினர்கள் 15 பேர் மட்டுமே. பின்னாளில் பலம் பொருந்திய எண்ணிக்கையுடன் முதல்வர் பதவியை அலங்கரித்தபோதுகூட அந்தக் கண்ணியத்தைக் காத்துக்கொண்டவர். ‘‘மிஸ்டர் அண்ணாதுரை... உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன’’ என கருத்திருமகன் காட்டமாகச் சொன்னபோதுகூட, 'நான் என் காலடிகளை அளந்தே வைக்கிறேன்' எனக் கண்ணியம் காட்டியவர் அவர்.

அண்ணாவை இதயத்திலும், அவரது பெயரைக் கட்சியின் பெயரிலும் வைத்துக்கொண்டிருக்கிற இருபெரும் கட்சிகளும், அண்ணாவின் கண்ணியத்தை அவரது உடலோடு புதைத்துவிட்டு ஜனநாயகத்தை இப்படிக் கேலிக்கூத்தாக்குவது நியாயமா என்பதைச் சிந்திக்கவேண்டும்.

- எஸ்.கிருபாகரன், அ.சையது அபுதாஹிர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ