Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அவதூறு வழக்கு' எனும் அராஜக ஆயுதம்!

காவல்துறை... கண்ணீர்ப் புகை... லத்தி சார்ஜ்... துப்பாக்கிச் சூடு... இவைதான்  ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் மிரட்டல் ஆயுதங்களாக  பெரும்பாலும் அறியப்படுகின்றன. இந்த ஆயுதங்களின் வரிசைப் பட்டியலில் ‘அவதூறு வழக்கு’ என்றொரு நூதன ஆயுதத்தையும் இன்றைய ஆட்சியாளர்கள் சேர்த்துள்ளனர்.

ஜனநாயகத்தின் ‘வாட்ச் டாக்’ என்று வர்ணிக்கப்படும், எதிர்க்கட்சிகளையும் ஊடகங்களையும் அச்சுறுத்த தமிழக ஆட்சியாளர்களின் முதல் ஆயுதமாக, ‘அவதூறு வழக்கு’ மாறிவிட்டது. கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பாரம்பரியம் இங்கு வழக்கத்தில் இருந்தாலும், ஜெயலலிதா ஆட்சியில் தீவிரம் பெற்றதுபோல், வேறு எந்த ஆட்சியிலும் அவதூறு வழக்குத் தாக்குதல் தீவிரமாக இருந்ததில்லை. 2011 - 2016 வரையிலான 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் 213 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதை உச்சநீதிமன்றத்தில் பெருமையாகச் சொல்லி இருக்கிறது தமிழக அரசு.

யார் மீது எத்தனை வழக்குகள்?

தி.மு.க தலைவர் கருணாநிதி உட்பட தி.மு.க-வினர் மீது 85 வழக்குகள்; விஜயகாந்த் உள்ளிட்ட தே.மு.தி.க-வினர் மீது 48 வழக்குகள்; 'ஆனந்த விகடன்' உள்ளிட்ட பத்திரிகைகள் மீது 55 வழக்குகள்; பா.ம.க மீது 9 வழக்குகள்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது 7 வழக்குகள்; பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது 5 வழக்குகள்; ம.தி.மு.க., சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர்கள் மீது 4 வழக்குகள் என மொத்தம் 213 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

ஜனநாயகமல்ல... சர்வாதிகாரம்!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த அவதூறு வழக்குகள், ஜெயலலிதா என்ற தனிநபர் குறித்துப் பேசியதற்கோ - எழுதியதற்கோ அல்ல; ஜெயலலிதா என்ற தனிநபர் வாழ்க்கை குறித்து விமர்சித்ததற்காகப் போடப்பட்ட வழக்குகளும் அல்ல; மாறாக, தமிழக முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதாவின் செயல்பாடு, அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடு, இவர்கள் நடத்திய ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், அந்தத் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, மக்கள் மன்றத்தில் பேசியதற்காகவும், பத்திரிகைகளில் எழுதியதற்காகவும் போடப்பட்ட வழக்குகள்.

இந்த வழக்குகளின் உண்மையான நோக்கம், மறைமுக அச்சுறுத்தலே. ஆட்சியாளர்கள் சொல்வதுதான் திட்டம்; ஆட்சியாளர்கள் செய்வதுதான் சட்டம்; அதைக் குறை சொல்லவோ, எதிர்க்கவோ யாருக்கும் உரிமை இல்லை; அதைச் செய்ய யாரும் துணியக் கூடாது என்பதை உணர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம். சுற்றிவளைக்காமல் சொன்னால், ‘சர்வாதிகார ஆட்சி’ என்பதே பொருள்.

உச்சக்கட்ட அராஜகம்!

ஒரு பத்திரிகை, செய்திக் கட்டுரையாக அல்லது தலையங்கம் வெளியிட்டு சுயமாக அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்கு, அவதூறு வழக்குத் தாக்கல் செய்வதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் ஒருவர் அரசாங்கத்தை விமர்சனம் செய்து பேசியதை, செய்தியாக பத்திரிகைகள் வெளியிடும்போது, அதற்கும் அவதூறு வழக்குத் தாக்கல் செய்யும் சர்வாதிகாரம் தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. அ.தி.மு.க தலைமையில் அமைந்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசாங்கம்தான், இந்தப் புதிய அச்சுறுத்தல் கலாசாரத்தைக் கண்டுபிடித்துள்ளது.  

இந்தப் புதிய அச்சுறுத்தலுக்கு முதல் பலியானது, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ். 2011-ம் ஆண்டு, 'நக்கீரன்' பத்திரிகை, ஜெயலலிதாவின் உணவுப்பழக்கம் குறித்து ஒரு செய்தி வெளியிட்டது. அதற்காக, 'நக்கீரன்' மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது. அத்துடன், சென்னை, ஜானி ஜான்கான் சாலையில் இருந்த அதன் அலுவலகமும், அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களைத் தொகுத்து, மறுநாள் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. அப்படிச் செய்தி வெளியிட்டதற்காக, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது.

சென்னையில் பரவிவந்த காலரா நோய், அதைத் தடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சியைக் கண்டித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் கலந்துகொண்டு பேசிய அவர், ''மாநிலத்தின் தலைநகரில் காலரா பரவிவரும்போது, ஒரு முதலமைச்சரால் எப்படி நிம்மதியாகக் கொடநாட்டில் ஓய்வெடுக்க முடிகிறது?'' எனக் கேள்வி எழுப்பினார். அதற்காக, தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மீது ஓர் அவதூறு வழக்குப் போடப்பட்டது. அத்துடன், மு.க.ஸ்டாலினின் பேச்சை வெளியிட்ட, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 'தினகரன்’ நாளிதழ்கள் மீதும் அவதூறு வழக்குகள் போடப்பட்டன.

'ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்’ எனச் சொன்னதற்காக கருணாநிதி மீதும், அதைச் செய்தியாக வெளியிட்ட, 'முரசொலி' நாளேட்டின் மீதும் அவதூறு வழக்குகள் பாய்ந்தன. இதுபோன்ற ஓர் உச்சகட்ட அராஜகம், தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் கிடையாது.  

விகடன் மீது வரிசையாய் பாய்ந்த வழக்குகள்!

தமிழகத்தில் அ.தி.மு.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, 'ஆனந்த விகடன்' இதழில், 'மந்திரி தந்திரி’ என்ற கட்டுரைத் தொடர் வெளியானது.( முந்தைய தி.மு.க. ஆட்சியின் போதும் 2006-2011 இதேபோன்று அன்றைய அமைச்சர்கள் குறித்து ஆனந்தவிகடன் தொடர்ந்து எழுதியது) இந்தக் கட்டுரைகள் தமிழக மக்களிடையே பரபரப்பாக வாசிக்கப்பட்டன. ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் தலைமை நிர்வாகியாக இருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து, 'என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பில், 2015 நவம்பர் 25-ம் தேதியிட்ட 'ஆனந்த விகடன்' இதழில் கட்டுரை வெளியானது. ‘மந்திரி - தந்திரி’ தொடராக 30 வாரங்கள் வெளியாகின.

ஒவ்வொரு வாரமும் வெளியான கட்டுரைக்கும், ஒரு வழக்கு என்ற அடிப்படையில் வரிசையாக 30 வழக்குகளைத் தமிழக அரசு தாக்கல் செய்தது. அத்துடன், 'ஜூனியர் விகடனி'ல் வந்த பல அட்டைப்பட கட்டுரைகளுக்கும் அவதூறு வழக்குகள் பாய்ந்துள்ளன. இவற்றோடு, 'ஆனந்த விகடன்', அரசாங்கத்தை விமர்சித்துக் கட்டுரை வெளியிடும் போதெல்லாம், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான 'நமது எம்.ஜி.ஆர்’, 'ஆனந்த விகடனை' மிகக் கடுமையாகவும் கொச்சையாகவும் விமர்சித்துக் கட்டுரை வெளியிடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டது.

தமிழக அரசு வழக்கறிஞர்கள் தபால்காரர்களா?

தமிழக அரசு, 'அரசு வழக்கறிஞர்களைத் தபால்காரர்களைப்போல் பயன்படுத்துகிறதா' என்று உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் கேள்வி எழுப்பியதோ? ஆனால், உண்மையில் இங்கு நிலவரம் அதுதான். தமிழகத்தில், அரசு வழக்கறிஞர்கள், தபால்காரர் களைப்போலத்தான் பயன்படுத்தப்படுகின்றனர். அதனால்தான், அவதூறு வழக்குப் போடுவதற்கும் அதைக் கண்காணிப்பதற்கும் தனியாக வழக்கறிஞர்களை நியமித்துள்ளது தமிழக அரசு. இவர்கள் எப்படிச் செயல்படுகின்றனர் என்றால்... எதிர்க் கட்சித் தலைவர்களின் அறிக்கைகள், அவர்களுடைய பத்திரிகை - தொலைக்காட்சிப் பேட்டிகள், பத்திரிகைகளில் வரும் விமர்சனக் கட்டுரைகள், தலையங்கங்களைத் தமிழக அரசின் சட்டத் துறை பிரித்தெடுக்கிறது.
 

அதில், தமிழக அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி எதிர்மறை யான விமர்சனம் என எதை எல்லாம் கருதுகிறார்களோ, அதை எல்லாம், அரசுக் குற்றவியல் தலைமை வழக்குரைஞருக்கு அனுப்பிவைக்கின்றனர். அவர், எதில் அவதூறு வழக்குத் தொடுக்க முகாந்திரம் உள்ளது என ‘நோட்’ போட்டு சட்டத் துறைக்கு அனுப்புகிறார். அது தலைமைச் செயலாளருக்குப் போகிறது. அதன் பிறகு, அவதூறு வழக்குத் தொடுக்க அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அந்த அரசாணையை அடிப்படையாகவைத்து, கடந்த ஆட்சியில் சென்னை மாநகரக் குற்றவியல் அரசு வழக்குரைஞராக இருந்த ஜெகன், நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்கிறார். அதன்பிறகு, அந்த வழக்குகளைத் தொடர்ந்து நடத்தவும் கண்காணிக்கவும் என, அதற்கும் தனியாக அசோகன் என்கிற ஒரு வழக்குரைஞர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும்!

அவதூறு வழக்குகளைக் காட்டி அச்சுறுத்துவதில் ஜெயலலிதாவுக்கு எந்தவகையிலும் சளைத்தவர் அல்ல கருணாநிதி. அவரது ஆட்சியிலும் இதே அராஜகம் பலமுறை நடந்தது. கடந்த முறை தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, எதிர்க் கட்சித் தலைவர்கள், பத்திரிகைகள் மீது 50 அவதூறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. குறிப்பாக, இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், கருணாநிதியின் அரசாங்கத்தைத் தமிழ் உணர்வாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அந்த நேரத்தில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இயக்குநர் பாரதிராஜா, சீமான், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் மீதும், 'ஜூனியர் விகடன்' பத்திரிகை மீதும் அவதூறு வழக்குகள் போடப்பட்டன.

 

2011-ம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததுமே, அவதூறு வழக்குகள் போடும் வேலை தொடங்கிவிட்டது. இதுவரை 213 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீதும், 'ஆனந்த விகடன்', 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்', 'தி இந்து', 'டைம்ஸ் ஆஃப் இந்தியா', 'இந்தியா டுடே' உள்ளிட்ட பத்திரிகைகள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

’’இது மிகமிக மோசமான சர்வாதிகார ஆவணம்!”

தமிழகத்தில் நிலவும் இந்த அசாதாரணச் சூழல்பற்றி அவதூறு வழக்குகளைச் சந்தித்துவரும் மூத்த பத்திரிகையாளர் மணியிடம் கருத்துக் கேட்டபோது, ‘‘ஓர் அரசாங்கம் தன் கொள்கைகளை விமர்சித்த பத்திரிகைகள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது, 5 ஆண்டுகளில் 213 வழக்குகளைப் போட்டுள்ள சர்வாதிகாரம், தமிழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது. இது சாதாரண சர்வாதிகாரப்போக்கு இல்லை. மிகமிக மோசமான சர்வாதிகார ஆணவம் என்று சொல்லலாம். 

ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்வதும், அதை ஆட்சியாளர்கள் பரிசீலனைக்கு உட்படுத்துவதும், அதற்குப் பதில் சொல்வதும் அவர்கள் கடமை. உலகம் ஏற்றுக்கொண்ட நடைமுறை அது. ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் மட்டும்தான், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்க எடுக்கக்கோரி அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன. இத்தனை வழக்குகள் பாய்ந்தும்கூட அவற்றுக்கு எதிராக இங்கு ஊடகங்கள் ஒன்று திரளாததுதான் இந்த ஆட்சியாளர்களின் வெற்றி; அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்'' என்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்களும் அறிவுரைகளும்!

தமிழக அரசின் அவதூறு வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை பிரபலம். ஒவ்வொருமுறையும் இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்றபோது, அது கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், 'தன் மீது தமிழக அரசு போட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தை நாடினார். அதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி.பன்ட் ஆகியோர், ''ஆட்சி, அரசின் நிர்வாகம், அரசின் கொள்கைகள் பற்றிய விமர்சனங்களை தனிநபர் மீதான அவதூறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் போக்கை தமிழக அரசு முதலில் கைவிட வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500-ம் பிரிவுகள் விமர்சனங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அதைத் தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்'' என்று அறிவுரை கூறினர்.

அதுபோல, மற்றொரு முறை இதே வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாகப்பன் அமர்வு, “எதிர்க் கட்சித் தலைவர்கள், ஆட்சியாளர்களையும் அரசாங்கத்தையும் சாதாரணமாக விமர்சிப்பதற்கெல்லாம், அவதூறு வழக்குத் தொடர்வதா?... வழக்குத் தொடர்வதற்கு முன், பேச்சில் அவதூறு உள்ளதா என்பதை ஆராய வேண்டாமா? ...அரசு வக்கீல்களைத் தமிழக அரசு போஸ்ட்மேன்போலப் பயன்படுத்துகிறதா? ஓர் அரசியல் எதிராளி மீது அவதூறு வழக்குகளைத் தொடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்டும் வகையில் அனுமதி வழங்க ஒரு முதல்வர் தன்னுடைய அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்த முடியுமா'' எனக் கேட்டு கண்டனம் தெரிவித்தனர். நீதிபதி மிஸ்ரா மேலும் கூறியபோது, ''ஜனநாயகத்தில் ஓர் அரசியல் எதிரிக்கு, சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதைப்போல நடைபெறும் ஆட்சியை விமர்சனம் செய்வதற்கான உரிமை உண்டு'' என்றும் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குத்தான் இதை உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது என்பதையாவது அவர் புரிந்துகொண்டால் சரி.

- ஜோ.ஸ்டாலின்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ