Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையை எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா? ‪#‎Chennai377‬ ‪#‎Madrasday‬

ஃப்ரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்ட் சென்னையில் கோட்டை கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்ட நாள், 1639, ஆகஸ்ட், 22. அந்த நாளைத்தான் சென்னை தினம் எனக் கொண்டாடுகிறோம். ஆனால், அந்த வெள்ளைக்காரன் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே சென்னை இருக்கத்தானே செய்தது என ஆங்காங்கே பொருமுகிறவர்கள் இருக்கிறார்கள்.   

அதுவும் இல்லை என்றால் சென்னையைக் கொண்டாட வாய்ப்பே ஏற்பட்டு இருக்காதே... இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை கதையாக அதைக் காரணமாக வைத்தாவது சென்னையைக் கொண்டாடலாமே என்கிற ஏக்கப் பெருமூச்சும் கேட்கிறது.

இருக்கட்டும். சென்னையை எப்படிக் கொண்டாடுவது எனப் பார்ப்போம்.

உண்மையில் சென்னையைக் கொண்டாடுவது கட்டடங்களைக் கொண்டாடுவது மட்டுமல்ல; முக்கியமாக அதன் மக்களைக் கொண்டாடுவது. சென்னையின் மக்கள் என்பவர் யார் என்பதுதான் அடுத்து எழும் கேள்வி.

சென்னை என்கிற இந்த பரந்த நிலப்பரப்பு, பல நூறு கிராமங்களை உள்ளடக்கியது. ஏரிக் கரைத் தெரு, லேக் ஏரியா, வில்லேஜ் ரோடு, குளக்கரைத் தெரு, வேளச்சேரி, முடிச்சூர், புலியூர், வேப்பேரி, சூளை, சூளை மேடு, பட்டினப் பாக்கம், மயிலாப்பூர்.... என ஊர், குளம், ஏரி என்ற பல்வேறு விகுதிகளோடு உள்ள பல பகுதிகளிலும் இன்று பெரிய பெரிய மால்களும் ஐ.டி. பார்க்குகளும், ரிஸார்ட்டுகளும் கேளிக்கைக் கூடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

கோயம்பேடு மார்க்கெட்டும் பேருந்து நிலையமும் உள்ள இடம் மிகப் பெரிய வயல் பரப்பாகவும் ஏரி குளங்களாகவும் இருந்தது. சொல்லப்போனால் என் கண் முன்னாலேயே மாறியது என்பதையும் பதிவுசெய்கிறேன்.

வடபழனியில் இருந்து அண்ணா நகர் திருமங்கலத்தை இணைக்கிற 100 அடி சாலை, சைக்கிள்களும் செல்ல முடியாத சிறிய கிராமச் சாலைகளாக இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். சென்னை வளர்கிறது என்றால் ஆறுகள், குளங்கள், ஏரிகள், வயல்கள் அகற்றப்பட்டன என்பதுதான் அர்த்தம்.

மத்திய சென்னை என்பது கூவம் ஆற்றங்கரை நாகரிகத்தின் அடையாளம். திருவேற்காடு தொடங்கி, அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர், பெரிய மேடு என்ற கிராமங்கள் கூவம் ஆற்றங்கரையில் இருந்த கிராமங்கள். கூவம் ஆற்றில் திவ்யமாகக் குளித்த கதைகளை பச்சையப்பன் கல்லூரி நிறுவனர் பச்சையப்ப முதலியார் நினைவுக் குறிப்புகளிலும் திரு.வி.கல்யாண சுந்தரனார் நினைவுக் குறிப்புகளிலும் பார்க்க முடிகிறது. அரும்பாக்கம் பகுதிகளில் மக்கள் அந்த ஆற்றில் குடிநீர் எடுப்பதையும் குளிப்பதையும் நானே பார்த்திருக்கிறேன். நகர் முழுதும் ஓடி உலாவந்த ஆற்றை நாற்றம் அடிக்கும் சாக்கடையாக மாற்றிவிட்டு, ‘கூவம்போல நாறுது’ என கூவத்தை 'ப்ராண்ட்' செய்வது எப்படி கொண்டாட்டமாக இருக்க முடியும்?

சென்னையின் மொழியைக் கிண்டல் செய்வதும் தொடர்கிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு ஒரு மொழி வழக்கு (ஸ்லாங்) இருக்கிறது. விழுப்புரத்தில் பேசுகிற மொழி வழக்கு, திருச்சியில் மாறுகிறது. திருச்சி மொழி வழக்கு மதுரையில் மாறுகிறது. மதுரை வழக்கு நெல்லையில் மாறுகிறது. நாகர்கோவிலில் வேறு வழக்கு மொழி, கொங்கு மண்டலத்தில் வேறு வழக்குமொழி. பல ஆயிரம் ஆண்டு பழமைகொண்ட ஒரு மொழியில்தான் இத்தனை வழக்குமொழிகள் இருக்க முடியும்.

அமெரிக்கன் இங்கிலீஷ், பிரிட்டிஷ் இங்கிலீஷ் என இரண்டு பிரிவைக்கூட எட்டாத மொழிகள்தான் உலகில் அதிகம். எப்படி பேசினாலும் தமிழுக்கு என ஒரு உரைநடை உண்டு. தமிழகம் முழுவதும் உள்ளவர் எழுதும்போது அப்படித்தான் எழுதுவர். பேசும்போது வழக்கு மொழியைப் பயன்படுத்துவர். இதுதான் மொழியின் பழமையை உணர்த்தும் பெருமை.

சென்னை வழக்கு மொழியும் அதில் ஒன்றுதான் என்பதை உணர வேண்டும். பல்வேறு மொழிக்கலப்பும் மதக்கலப்பும் அவசரமும் நிறைந்த ஒரு பெரு நகரத்தின் மொழியாக சென்னை நகரத்தின் மொழி தன்னைத்தானே வகுத்துக்கொண்டது. ‘நாஷ்டா துன்ட்யா?’, ‘நம்ம தோஸ்த்து நம்மளையே குஸ்டு அஸ்ட்டாம்பா’ என்பதும் இந்த மண்ணின் மைந்தர்கள் பேசும் வட்டார வழக்கு. அதை ஆய்வு செய்வதும் பெருமைப்படுத்துவதும்தான் சென்னையைக் கொண்டாடுவதின் ஒரு அங்கமாக இருக்க முடியும். ‘வாராய்ங்க, போராய்ங்க, அங்கிட்டு இங்கிட்டு’ என்பது போலத்தான் இதுவும் என்பதை மனம் ஏற்க வேண்டும்.

சென்னையின் பூர்வகுடிகளில் ஏழை மக்கள் பெரும்பாலும் தாங்கள் வாழ்ந்த கூவம் நதிக்கரை ஓரத்திலேயே பெரும்பாலும் ஒடுங்கிவிட்டனர். அவர்கள் மீன்பாடி வண்டிகள் வைத்து லோடு அடிக்கிறார்கள், ரிக்‌ஷா ஓட்டுகிறார்கள், வாழைப் பழம் கூவி விற்கிறார்கள். அவர்களைத்தான் பொது புத்தியில் 'டேன்ஞரான ஆட்கள்' எனச் சித்தரிக்கிறோம். அல்லது சிங்காரச் சென்னையில் அவர்கள் இருப்பது அசிங்கம் எனக் கருதி, செம்மஞ்சேரிக்கும் கண்ணகி நகருக்கும் துரத்துகிறோம்.

சென்னையின் பிரபலமான மக்கள் என ஒரு ஆயிரம் பேரைக் கணக்கெடுங்கள். சினிமா இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், அரசியல்வாதிகள், திரைப்படக் கவிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், தொலைக்காட்சி அதிபர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், பிசினஸ் மேன்கள் எல்லாரையுமே கணக்கெடுப்போம். 1000-ம் பேரில் 950 பேர் சென்னையைத் தவிர்த்த மற்ற மாவட்டங்களை, மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் கவனிக்கலாம்.

சென்னை போன்ற பெரு நகரத்தில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து உயர்ந்த மனிதர்களாக, செல்வந்தர்களாக மாறுவதை யாரும் குறை சொல்ல முடியாது. அதே போல், இப்படியான வேறு மாவட்ட வி.ஐ.பி-க்களால் செதுக்கப்பட்ட சென்னையை, குறை சொல்லும்போது மட்டும் 'மெட்ராஸ்காரன்' சிக்கிக்கொள்கிறான்.

‘இது ஊராய்யா? சே என்னால ஒரு நாள்கூட இங்க இருக்க முடியலை. எங்க ஊர் டீ போல வருமா?, எங்க ஊர் பரோட்டா போல வருமா?’ எனச் சொல்லிக்கொண்டே வாழ்நாளெல்லாம் இங்கேயே இருக்கிறார்கள். இதையும் இந்தச் சென்னை நாளை ஒட்டிச் சிந்தித்துப் பார்க்கலாம்.

சென்னையைப் பாதுகாப்பதும் சென்னை மொழியையும் மக்களையும் நேசிப்பதும்தான்  சென்னைக் கொண்டாட்டத்தின் அம்சமாக இருக்க வேண்டும்!

- தமிழ்மகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close