Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீற்றம் கொடுக்கும் சிறுவாணி... அச்சத்தை விதைக்கும் கேரளா...!

ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத கேரளா, மீண்டும் சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தியிருக்கிறது. சுற்றிலும் நதிநீர் சிக்கலில் சிக்கித்தவிக்கிறது தமிழகம். காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம் என கர்நாடகம் அடம்பிடித்துக்கொண்டிருக்க... சிறுவாணியின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என அடம்பிடித்து வருகிறது கேரளா. சிறுவாணியில் கேரளா அணை கட்ட முயல்வது இது முதல் முறையல்ல. மூன்றாவது முறை. ஒவ்வொரு முறையும் எதிர்ப்பின் காரணமாக அணை கட்டும் முடிவை கைவிடும் கேரளா. இந்த முறை சற்று தீவிரமாக செயல்பட்டு, அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் துறையின் ஆய்வுக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதியும் பெற்றுள்ளது.

சுவை மிகுந்த சிறுவாணி

ஆசியாவிலேயே சுவை மிகுந்த குடி நீர் என்றால் அது சிறுவாணி நீர் தான். கோயமுத்தூரின் பெருமைகளில் ஒன்றாக இன்றும் இருப்பது சிறுவாணி நீர் தான். இன்று சிறுவாணியின் பெருமை பேசும் கோயமுத்தூரில் 100 ஆண்டுக்கு முந்தைய நிலை தலைகீழ். இன்றைய தமிழகம், 100 ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் மாகாணமாக இருந்த போது, 'மிக மோசமான நீர் எதுவென்றால் அது கோயமுத்தூர் நீர் தான்' என சொல்லப்பட்டது. குடிநீருக்காக தீவிரமான போராட்டங்கள் எழுந்தது. இதையடுத்து தான் சிறுவாணி மலைப்பகுதியில் இருந்து அருவி நீரை கொண்டு வரலாம் என சொல்லப்பட... மனிதர்கள் நுழைய முடியாத அந்த அடர் வனத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர முடியாது. அதற்கான நிதியும் இல்லை என கைவிரிக்கப்பட்டது. பல ஆண்டு போராட்டங்களுக்கு பின்னர் 1929ம் ஆண்டு சிறுவாணி நீர் கோவை மக்களின் குடிநீரானது.


சாலை, மின்சாரம் இல்லாத அடர்ந்த காடு... தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத நிலை, கடுமையான நிதி பற்றாக்குறை, காட்டு விலங்குகளின் தொந்தரவு, அட்டைக்கடி, மலேரியா என பரவிய நோய்கள் என தொழிலாளர்கள் சந்தித்த பிரச்னைகள் என பல ஆண்டு போராட்டம் சிறுவாணிக்கு பின்னர் உண்டு. இப்போது அந்த சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதன் மூலம் புதிய சிக்கலை உருவாக்க முயல்கிறது கேரளா.

அச்சத்தை ஏற்படுத்தும் அணை கட்டும் முயற்சி

சிறுவாணி பவானி நதியின் கிளை நதி.சிறுவாணி நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகிலேயே சிறுவாணி அணை கட்டப்பட்டு, அதிலிருந்து கோவைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் உருவாகும் சிறுவாணி, கேரளாவில் 25 கி.மீ தூரம் பயணித்து, கேரளாவுக்குள்ளேயே கூடப்பட்டி எனுமிடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது. சிறுவாணி அணைக்கும், அது பவானி ஆற்றில் கலப்பதற்கும் இடையில் உள்ள அகழி ஊராட்சியில் உள்ள சித்தூரில் தான் அணை கட்ட திட்டமிடுகிறது கேரளா. கோவைக்கு மேற்கே 35 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடுக்குகளில் ஒன்றான ஆனைகட்டிக்கு அருகே உள்ள சித்தூர், வெங்கக்கடவில் அணைகட்ட கேரள அரசு முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு இந்த இடத்தில் அணை கட்ட 400 கோடி ரூபாயை ஒதுக்கியது கேரளா. அப்போது கொதித்தெழுந்த தமிழக மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். பின்னர் இது குறித்த பேச்சு மறைந்து போனது. ஆனால் அதை கைவிடாமல் இப்போது சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று, அணை கட்டும் திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது தமிழக மக்களின் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது கேரளா அரசு.

தூசு தட்டி எடுக்கப்பட்ட திட்டம்

உண்மையில் இந்த திட்டம் உருவானது 2012ல் அல்ல. 1970களின் இறுதியில் அதாவது 35 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதே அங்கு அணை கட்ட திட்டம் தீட்டியிருந்தது கேரளா. இதற்காக 2000 ஏக்கர் நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்ய உத்தேசித்து 480 ஏக்கர் நிலத்தை எடுத்து மலைவாழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறது. சித்தூர் பிராஜக்ட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டஇந்த திட்டத்தில் சில கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் கட்டப்பட்டு, அஸ்திவாரங்களும் அமைக்கப்பட்டன. ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் நிதியின்மை காரணமாக திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து 2002ம் ஆண்டு சிறுவானையை விட்டு, முக்காலி எனுமிடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளா அரசின் முயற்சி, தமிழக மக்களின் தொடர் போராட்டங்களையடுத்து தோல்வியில் முடிந்தது. சிறுவாணியின் குறுக்கே 35 ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கப்பட்டு கைவிடப்பட்ட திட்டம் தான், 2012ல் அட்டப்பாடி பள்ளத்தாக்கு பாசனத் திட்டம் என்றபெயரில் இப்போது தூசி தட்டி துவங்கப்பட்டு, தற்போது அணை கட்டும் ஆய்வுக்கு அனுமதி பெற்றது வரை நீண்டிருக்கிறது.

சித்தூர், வெங்கக்கடவில் 450 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட அணையும், அதனை  தாண்டி நான்கு கி.மீ இடைவெளிக்குள் பனிரெண்டுக்கும் மேற்பட்ட தடுப்பு அணைகளும் எழுப்பப்பட இருக்கின்றன என தகவல்கள் கூறுகின்றன. அப்படி சிறுவாணையின் குறுக்கே அணை கட்டப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திப்பார்கள். கேரளா அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, தொடர் போராட்டங்களை அரசியல் அமைப்புகளும், இயக்கங்களும் முன்னெடுத்துள்ளதால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

ரகசியமாய் இயங்கிய கேரளா

"இந்த அணை மட்டும் கட்டப்பட்டால், அதை தாண்டி சில கி.மீ தொலைவில் செல்லும் பவானி நதிக்கு செல்லும் முக்கிய ஆற்று நீர் சுத்தமாக தடைபட்டுவிடும். இதனால் 6 முதல் 7 டி.எம்.சி வரை இந்த பகுதிக்கு கிடைக்கும் நீர் குறையும். விவசாயம் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும். இங்கே அணை அமைந்தால் இந்த குடிநீர்த்திட்டமும் கேள்விக்குறியாகி விடும். தவிர புதிய அணை மற்றும் புதிய தடுப்பணைகளால் சிறுவாணி வழிப்பாதை மீண்டும் தடுக்கப்பட்டால் பவானி நதியின் நீராதாரம் குறைந்து பில்லூர் அணை நிலையும் சிக்கலாகிவிடும். இதே பவானி நதிக்கு மேலாக சுமார் பதினைந்து கி.மீ தொலைவில்தான் 2004ம் ஆண்டு முக்காலி என்ற இடத்தில் ஒரு பிரம்மாண்ட அணையும், தடுப்பணைகளும் கட்ட திட்டமிட்டது. அதுவும் நம் நீண்டகால எதிர்ப்பால், மத்திய அரசு சுற்றுச்சூழல் ஒப்புதல் கொடுக்கப்படாததால் கைவிடப்பட்டது. அது அமைந்திருந்தால் நிச்சயம் பவானி நதிநீர் பில்லூருக்கே எட்டாமல் போயிருக்கும்.

அதை விட பலமடங்கு பெரிய  அணையையே 2012ம் ஆண்டு கட்டும் முயற்சியை துவங்கியது. இதை எதிர்த்து பலமான போராட்டங்கள் நடந்ததால் கேரளா அரசு இந்த பிரச்னையில் மவுனம் சாதித்தது. ஆனால் ரகசியமாக மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெற அலுவலக ரீதியான நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்ட நிபுணர் மதிப்பீட்டுக்குழுவிடம் சுற்றுச்சூழல் ஆய்வுக்கான விண்ணப்பத்தை சமர்பித்து ரகசிய வேலைகளில் ஈடுபட்டது கேரளா.இதற்கான ஆலோசனைக்கூட்டம் நடந்த போது, தமிழகத்தின் எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவில் வருவதால் தமிழகத்தின் கருத்தை கேட்டறிய வேண்டும் என நிபுணர் குழு முடிவு செய்தது.

தமிழகத்துக்கு ஒரு நீதி... கேரளாவுக்கு ஒரு நீதியா?

மார்ச் 28, 29ம் தேதிகளில் இந்த கூட்டம் நடத்தப்பட்ட போதும், மே மாதம் 4ம் தேதி தான் தமிழக பொதுப்பணித்துறை செயலருக்கு கேரளா அரசின் நீர்வளத்துறையில் இருந்து கடிதம் எழுதப்பட்டது. தேர்தல் நேரம் என்பதால், இந்த விஷயத்தில் விவசாயிகள், சுற்றுச்சூழல் துறையின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் பதில் வரவில்லை என்பதற்காக கேரளாவுக்கு ஆதரவாக முடிவெடுத்து விடுவதா?.

காவிரி நதிநீர் பிரச்னையில் 10 ஆண்டுகளாய் கடிதம் எழுதியும், போராடியும் காவிரி மேலாண் வாரியம் அமைக்காமல் ஏமாற்றும் மத்திய அரசு, தேர்தல் நேரத்தில் கேரளா அனுப்பிய கடிதத்துக்கு இரு மாதம் பதில் வரவில்லை என்ற காரணத்தைக்கூறி சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி கொடுத்ததில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது. தமிழகத்துக்கு ஒரு நீதி. கேரளாவுக்கு ஒரு நீதியா? இந்த அணை கட்டப்பட்டால், கோடை காலங்களில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும். குடிநீருக்கு கோவை மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். தற்போது கூட கேரளா மாநிலம், அட்டப்பாடி பகுதியில் சிறுவாணி, பவானி ஆறுகளில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி கொண்டிருக்கிறார்கள். இதை தமிழக மக்கள் எதிர்ப்பதில்லை. ஆனால் புதிய அணை கட்டி தண்ணீர் தடுக்கப்படும் போது நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம். அதனால் அதை கடுமையாக எதிர்க்கிறோம்," என்றார்.

கேரளாவின் வாழ்வாதாரம் முடங்கும்

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகப்பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணனிடம் பேசினோம். "2012ல் இந்த பணியை துவங்கிய போதே இதை நாங்கள் வன்மையாக கண்டித்தோம். போராடினோம். இப்போது மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். கேரளாவின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து தான் செல்கின்றன. தமிழக மக்கள் ஒன்றுபட்டு போராடினால், கேரளா அரசு ஸ்தம்பிக்கும்," என்றார்.

சிறுவாணி அணை விவகாரத்தில் அடுத்தடுத்த போராட்டங்கள் நடக்கத்துவங்கியுள்ளன. விவசாயிகள் துவங்கி அரசியல் கட்சிகள் வரை அனைவரும் களத்தில் இறங்கி போராடத்துவங்கியுள்ளனர். இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுக்க கூடாது என திமுக தலைவர் கருணாநிதி முதல் அனைத்து கட்சித்தலைவர்களும் அறிக்கை கொடுத்து விட்டனர். அணை கட்ட அனுமதிக்க கூடாது என பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதிவிட்டார். வரும் 3ம் தேதி கோவையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். அடுத்து என்ன செய்வது என எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

ஒரு பக்கம் காவிரி... இன்னொரு பக்கம் சிறுவாணி.... பாவம் தமிழர்கள்...

- ச.ஜெ.ரவி, கே.பாலசுப்பிரமணி
படங்கள் : தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்