Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காற்றாலை மின் உற்பத்தியில் புதிய உச்சம் தொட்டது தமிழகம்...!


நெல்லை: நாட்டின் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தின் மின் தேவையில் கணிசமான அளவுக்கு காற்றாலை மூலமாக மின்சாரம் உற்பத்தியாவதால் மின்வாரிய அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் காற்றாலை மின்சாரம் என்பது பிரபலமாகி வருகிறது. காற்று அதிகம் வீசக்கூடிய நாடுகள் காற்றாலை மூலமாக அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது பற்றி ஆலோசித்து வருகிறது. காற்றாலை மூலமாக மின் உற்பத்தி செய்யப்படும்போது சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. அத்துடன், நிலக்கரி உள்ளிட்ட எரிபொருளுக்கு செலவு செய்வது போன்று இந்த மின்சக்திக்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் இந்த மின்சக்திக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
காற்றின் வேகத்தில் டர்பன்களை சுழலச் செய்து அதன் மூலமாக ஜெனரேட்டரில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சுலபமானது மட்டுமல்லாமல் சிக்கனமாதும் கூட என்பதால் இந்த மின் உற்பத்திக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு 1980களில் ஏற்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் அரசே இந்த துறையில் ஈடுபட்டது. பின்னர், தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி கொடுக்கப்படதால் தற்போது அதிகமான நிறுவனங்கள் இந்த துறையில் முதலீடு செய்து வருகின்றன.

பயன் மட்டுமே... பாதிப்பில்லை...!

தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் இந்த துறையில் ஆர்வம் செலுத்த தொடங்கி உள்ளன. அதனால், இந்திய மின்சார உற்பத்தியில் காற்றாலைகளின் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தின் பங்கு என்பது 15 சதவிகிதத்தை எட்டி உள்ளது. இதனை படிப்படியாக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
காற்றாலைகள் பெரும்பாலும் கிராமப் பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலுமே அமைக்கப்படுகின்றன. நகரங்களில் வானுயர கட்டடங்கள் இருப்பதால் காற்றின் வேகம் தடுக்கப்படுகிறது. அதனால் காற்றாலை மின் உற்பத்திக்கு கிராமப் பகுதிகளே உகந்த இடமாக தேர்வு செய்யப்படுகிறது. அதன் காராணமாக கிராமப் பகுதிகள் வளர்ச்சி அடைகின்றன. அத்துடன், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. காற்றாலை அமைக்கப்படும் நிலத்தில் கூட விவசாயம் செய்து கொள்ள முடியும் என்பதால் இந்த திட்டத்தால் பயன்கள் மட்டுமே கிடைக்கும். யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது.

தமிழகம் தான் முன்னோடி:

தமிழகத்தின் தினசரி மின் தேவை என்பது 15,000 மெகாவாட் என்கிற நிலையில் உள்ளது. இதற்காக அனல் மின் நிலையம், புனல் மின்நிலையம், அணு மின் நிலையம் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், நமது தேவையை விடவும் சுமார் 2000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டு நமது தேவை சரிசெய்யப்பட்டு வருகிறது.

இதனைச் சரிக்கட்டும் விதமாக காற்றலை மின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், நெல்லை, தூத்துக்குடி, குமரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் காற்றலை மின் உற்பத்தி நடைபெறுகிறது. நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகில் தமிழக அரசின் சார்பாக காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடக்கிறது.
தமிழகம் முழுவதும் 7456 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய அளவுக்கு சுமார் 12,000 காற்றாலைகள் நிறுவப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் அந்த சம்யத்தில் மின்சார உற்பத்தி அதிகமாக உள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக, நாடு முழுவதிலும் காற்றாலை மூலமாக கிடைக்கும் மின்சாரத்தில் 30 சதவிகிதம் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் அளவுக்கு தமிழகம் இந்த துறையில் முன்னோடியாக திகழ்கிறது.

புதிய உச்சத்தை தொட்டது:

காற்றாலை நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு சோதனையான காலம். எதிர்பார்த்த அளவுக்கு கடந்த வருடம் காற்று வீசாததால் மின் உற்பத்தி மிக குறைவாகவே இருந்தது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே காற்று வீசத்தொடங்கியதால் சராசரியாக 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தியானது. கடந்த இரு மாதங்களாக காற்றின் வேகம் அதிகரித்ததால் 3000 முதல் 3500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகி சாதனை படைத்தது. கடைசி 10 நாட்களில் அதிகபட்சமாக 4000 மெகாவாட் அளவை எட்டி புதிய சாதனையை எட்டியுள்ளது. இதனால் காற்றாலை நிறுவனத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

காற்றாலை மூலமாக கிடைக்கும் மின்சாரத்தை தமிழக அரசு யூனிட்டுக்கு ரூ.3.50க்கு கொள்முதல் செய்கிறது. அதேவேளை, தமிழகத்தின் கூடுதல் தேவைக்கான மின்சாரம் யூனிட்டுக்கு 7 முதல் 14 ரூபாய் கொடுத்து வாங்குகிறது. கூடுதல் தேவைக்காக பெறப்படும் மின்சாரத்துக்கான தொகையை உடனுக்குடன் வழங்கும் மின்சார வாரியம், உள்ளூரில் காற்றாலை நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் மின்சாரத்துக்கு மட்டும் பாக்கி வைத்து விடுகிறது. காற்றாலை நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் பணம் பாக்கி இருப்பதால் பல நிறுவனங்கள் தவித்து வருகின்றன.

அரசின் பாராமுகம்:

அத்துடன், வெளியிடங்களில் இருந்து கூடுதல் தொகை கொடுத்து மின்சாரத்தை வாங்கும் தமிழக மின்வாரியம், உள்ளூரில் இருந்து குறைந்த விலைக்கு கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை வாங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. தேவையான அளவுக்கு மின் பாதை அமைக்கப்படாததால் காற்று அதிகமாக வீசும் காலத்தில் கூட நிறைய காற்றாலைகள் இயக்கப்படாமல் இருக்கும் சூழலும் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் காற்றலை மின்சாரத்தை முழுமையாக கொள்முதல் செய்தால் நமது தேவைக்கு போக உபரியாகவும் இருக்கும். அந்த உவரி மின்சாரத்தை பக்கத்தில் இருக்கும் மாநிலங்களுக்கு விறபனை செய்து லாபமும் பெற முடியும் என்கிறார்கள், காற்றாலை நிறுவனத்தினர். 

இன்றைய நிலவரம்:

இந்த மாதத்துடன் காற்று சீசன் முடிவடைகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காற்றின் வேகம் குறையத் தொடங்கும். இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கணிசமான அளவுக்கு இருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. தமிழகத்தில் இன்று காற்றாலை மூலமாக 3859 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. கர்நாடகாவில் 577 மெகாவாட், ஆந்திராவில் 413 மெகா வாட், கேரளாவில் 18 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய தொகுப்பில் இணைக்கப்பட்டு உள்ளது.

-பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்   

எடிட்டர் சாய்ஸ்

MUST READ