Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது...கலையும் தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவு

ருத்துவ கல்வியில் தேசிய பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் தமிழக மாணவர்களை பெரும் துயரத்திற்கு தள்ளியுள்ளது. அவசரம் அவசரமாக நீதிமன்ற உத்தரவால் நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு தமிழகத்தில் மருத்துவக்கனவோடு படித்துவரும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி  இடங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசு நடத்தும் ‘தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு’ ( Ntional Eligibility cum Entrance Test- NEET) அடிப்படையில் மட்டுமே அமைத்திட இந்திய மருத்துவக் கழகமும், மற்றும் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை எடுத்த முயற்சி எடுத்துவந்தது. இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக எண்பதுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரிகள், ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட கல்லூரிகளுக்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை சேர்ந்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த  2013 ம் ஆண்டு 'நீட்' (NEET - National Eligibility Entrance Test) என்னும் ஒரே நுழைவுத் தேர்வை  கொண்டுவருவதாக மத்திய அரசு அறிவித்தது. இது மாநில அரசின் கல்விக்கொள்கையில் தலையிடுவதாகும் எனக் கூறி அதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட  பல மாநில அரசுகள், மற்றும் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதையடுத்து தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்விற்கு  தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வை ‘இந்த ஆண்டே  நடத்திட கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் அதிரடியாக ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இது தமிழக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு மத்திய அரசு தனது ‘‘தேசிய தகுதி காண் மற்றும் நுழைவுத் தேர்வை’ப் புகுத்துவது மாநில அரசுகளின் உரிமைக்களுக்கு மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டுக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கொதித்தனர். இது சமூக நீதிக்கு எதிரானது.இட ஒதுக்கீட்டு உரிமைகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எழுந்த எதிர்ப்புக்கு எந்த பலனுமில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவின்படி முதல்கட்ட நீட் தேர்வை கடந்த மே மாதம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தியது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் ஆறு லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.

நீட் தேர்வு குறித்த தெளிவற்ற  நிலையால் பலரும் இந்த தேர்வை எழுதவில்லை. அகில இந்திய அளவில் 15 சதவீத இடத்திற்கென அறிவிக்கப்பட்டு நடந்த இந்த முதற்கட்டத் தேர்வில் சுயநிதி கல்லுாரிகளில்  சேர திட்டமிட்டிருந்தவர்களும் புறக்கணித்தனர். இதனிடையே நுழைவுத் தேர்வு திணிப்பு பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, " இந்த விவகாரத்தில் சுமூக தீர்வை எட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்"  என உறுதியளித்தார். ஆனால் மத்திய அரசின் அறிவிப்பு காற்றோடு போனது. இதையடுத்து, விடுபட்டவர்களுக்காக ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர். கடந்த 16-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.
 
ஆனால் இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. காரணம் 90 சதவீத கேள்விகள் சி.பி.எஸ்.இ மற்றும் மத்திய அரசு பாட திட்டத்திலிருந்து கேட்கப்பட்டிருந்ததே. கல்வியாளர்கள் அச்சப்பட்டது போன்றே தமிழக மாணவர்களில் கணிசமான பேரின் மருத்துவக்கனவை 'நீட்' தகர்த்திருக்கிறது. பிளஸ்- டு வில் 1150 ஐ தாண்டி மதிப்பெண் பெற்றவர்களும் நீட் தேர்வில் தகுதி இழந்து ஒரு வருடத்தை வீணாக்கிக்கொண்டு வீட்டில் முடங்கிக்கிடக்கின்றனர். மகனின் மருத்துவக்கனவு தகர்ந்துபோனதில் பெற்றோர்களும் முடிவு தெரிந்தநாளிலிருந்து கண்ணீர் விட்டபடி இருக்கின்றனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த சுரேஸ் என்ற மாணவர் 1117 எடுத்திருந்தும் நீட் அவருக்கு சாதகமாக இல்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியிருக்கிறார் அவரது தந்தை.

“என் மகன் பத்தாம் வகுப்பு மாநில பாடத்திட்டத்தில் படித்து 484 மதிப்பெண் பெற்றான். கணிதம் மற்றும் அறிவியலில் சென்டம் எடுத்தான். அதே வேகத்தோடு மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்து பிளஸ் டு விலும் 1117 மதிப்பெண் எடுத்தான். எப்படியும் மகனை மருத்துவராக்கிவிடலாம் என உறுதியாக இருந்தேன்.

தேர்வு எழுதிய சமயம் நீட் தேர்வு நடைமுறையில் இல்லாததால் எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் அவன் செல்லவில்லை. ஆனால் தேர்விற்குப்பின் நீட் தேர்வு கட்டாயமான சூழலில் அவசரம் அவசரமாக படித்து தயாரானான். ஆனாலும் தேர்வில் பெரும்பாலும் மத்திய பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. மாநில மொழி பாடத்திட்டத்தில் இருந்து வெகு குறைவாகவே கேள்விகள் கேட்கப்பட்டதால் அவன் தகுதி பெறவில்லை. மருத்துவம் கிடைத்துவிடும் என்ற அதீத நம்பிக்கையில் வேறு படிப்புகள் எதற்கும் விண்ணப்பிக்கவில்லை அவன். திட்டமிடாத அதேசமயம் அரசின் அரசின் குழப்பமான கல்விக்கொள்கையால் இப்போது என் மகன் வீட்டில் அடைந்துகிடக்கிறான்.
 
நாடு முழுவதும் பொதுவான பாடத்திட்டமோ, நிரந்தரமான கல்விக்கொள்கையோ நடைமுறையில் இல்லாத நிலையில் நுழைவுத்தேர்வை மட்டும் அரசு பொதுவான முறையில் நடத்துவது எந்தவிதத்தில் நியாயம்?... என் மகனைப்போன்று ஸ்டேட் போர்டில் படித்து ஆயிரக்கணக்கான  மாணவர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்த சமயம் எழுந்த சர்ச்சைகளுக்கு ஒரு தீர்வாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி நட்டா, மாநில அரசு விரும்பினால் ஸ்டேட் போர்டில் படிக்கும் மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கலாம் என கூறியிருந்தார்.

அமைச்சரின் அறிவுரையை இந்த நேரத்தில் தமிழக அரசு செயல்படுத்தினால் என் மகனைப்போன்ற எத்தனையோ மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்கலாம். இதுதொடர்பாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்றார் இளங்கோவன் விரக்தியான குரலில்.

மத்திய அரசின் நீட் தேர்வு முறைக்கு ஆரம்ப காலங்களில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது  சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம். இதன் பொதுச் செயலாளர் டாக்டர். ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

“நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் 3 ல் ஒரு பங்கினர்தான் இந்த வருடம் தேர்வாகியுள்ளனர். கல்வித்தரம்,பாடத்திட்டம், கற்பிக்கும் முறை இவற்றில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் உள்ளன. இன்றும் மாநில பாடத்திட்டம் என்பது மனப்பாட முறைதான். மத்திய பாடத்திட்டம் தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தும் முறை. இதனடிப்படையில் பார்த்தால் தேசிய அளவில் பொது தகுதித் தேர்வு என்பது மாற்றுத்திறனாளிக்கும் இயல்பான மனிதனுக்கும் ஒரே விதபோட்டி என்பதுபோலத்தான்.

இன்றும் தமிழக பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அப்டேட்டடு ஆசிரியர்கள் இல்லை. இவைகளை களையாமல் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார்படுத்தமுடியும். இவற்றை களைந்து மத்திய அரசுக்கு இணையான தகுதிகளோடு மாநில மொழி பாடத்திட்டத்தை உயர்த்தியபின்தான் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும்.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைமுறையை மாநில அரசுகளே அமைத்துக்கொள்ள வேண்டும். இதில் மத்திய அரசும் ,இந்திய மருத்துவக் கவுன்சிலும், உச்ச நீதிமன்றமும் தலையிடக்கூடாது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லுாரிகளில் 85 சதவீத இடங்கள் அரசுக்குரியவை. மீதமுள்ளவை அகில இந்திய கோட்டாவில் நிரப்பப்படுகிறது. தனியார் மருத்துவக்கல்லுாரிகளில் 65 சதவீத இடங்கள் அரசுக்கானவை. மீதமுள்ள 35 சதவீத இடங்களை அவர்கள் நிரப்பிக்கொள்கிறார்கள். மாநில அரசின் இந்த உரிமையை மத்திய அரசு தட்டிப்பறிக்க நினைக்கிறது. நுழைவுத்தேர்வை ஒரு தகுதித் தேர்வாக மாற்றிவிடக்கூடாது. நுழைவுத் தேர்வை ஒரு போட்டித் தேர்வாக (Entrance Test) மட்டுமே நடத்த வேண்டும்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு மாநில அரசுகள் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும், தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கும், மத்திய அரசு  ஒரே நுழைவுத்தேர்வை நடத்தி ,ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை  நடத்திடும் வகையில் மத்திய அரசின் உரிமையில் மாநில அரசு தலையிடமுடியாதவகையில் சட்டமியற்றப்படவேண்டும். இல்லையென்றால்  எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் என்பது எட்டாக்கனியாக போய்விடும்” என எச்சரிக்கை மணி அடித்தார்.

இளங்கோவனின் வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். “ நீட் தேர்வினை நடத்தியதே சட்டப்படிதவறு. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தேசிய தகுதி காண் நுழைவுத்தேர்வு தேவையா வேண்டாமா என்ற வழக்கின் மறு ஆய்வு மனு நிலுவையில் உள்ள நிலையில் இடைக்கால உத்தரவின் மூலம் நீட் தேர்வை அமல்படுத்தியிருக்கக் கூடாது. இது இயற்கை நீதிக்கு முரணானது. நீட் தேர்வு 90 சதவீத கேள்விகள் மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. மாநில பாடத்திட்டத்திலிருந்து மிக சொற்பமாகவே கேட்கப்படுகிறது. கேள்வித்தாளும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

இதனால் மாநில கல்வி பாடத்தில் படிக்கிற, கிராமப்புற, ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள். மேலும் நீட் தேர்வுக்கு நமது மாணவர்கள் ஓரிரு மாதங்களில் தயாராகவேண்டியிருக்கிறது. ஆனால் சிபிஎஸ்இ படிப்பவர்கள் இரு ஆண்டுகள் அதில் பயிற்சி பெறுகிறார்கள். இதுவே அடிப்படை முரண். 2 மாதங்கள் படித்தவன் இரண்டு வருடம் படித்தவனுடன் போட்டியிடமுடியுமா...

நாடு முழுக்க பொதுவான பாடதிட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டு பின்னர்தான் மத்திய அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கவேண்டும். வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறோம். வழக்கில் ஒரு நல்ல முடிவு கிடைக்கப்பெறலாம் என்று நம்புகிறேன்” என்றார்.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று 50 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பிய அண்ணாவின் குரல் இன்றும் பொருந்திப்போவது ஆச்சர்யம்தான்!

தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து என்ன முடிவெடுக்கப்போகிறார் முதல்வர் ஜெயலலிதா?!

- எஸ்.கிருபாகரன்

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ