Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காய்ச்சல் மட்டும் மர்மம் அல்ல.. உண்மையும் மர்மம்தான் !

நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தன.அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.எனவே தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருவள்ளூர் தி.மு.க எம். எல். ஏ ராஜேந்திரனின் கேள்விக்கு கம்பீரமாக சொன்ன பதில் ..இது தொடர்பாக மருத்துவ சங்க பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி மக்களிடம் பேசிய போது, தமிழக சுகாதாரத் துறையின் செயலற்ற நிலை என்று கொதிக்கிறார்கள்....

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 982 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறுகின்றனர். 10-க்கும் மேற்பட்டேடோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். ஆனால் அமைச்சரோ 4 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். இது குறித்த வெளிப்படைத்தன்மை வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்

உண்மையும் மர்மமாகவே உள்ளது!

"அரசுக்கு கெட்ட பெயர் வந்து விடும் என்பதாலேயே அமைச்சர் உண்மையான தகலை மறைக்கின்றனர்" என்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட மாநிலகுழு உறுப்பினர் பி சுந்தராஜ். "நோயாளிகளைப் பரிசோதிக்க எந்த வசதியும் இங்கு இல்லை. அப்படி இருக்கும்போது நான்கு பேர் என்று எப்படிச் சொல்லமுடியும். கிராமப் பகுதி என்றால் பெரிய பிரச்சனை ஏற்படும் என்பதால், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றி விடுகிறார்கள். இது தொடர்பாக தகவல்கள் கேட்டால், எந்த அரசு அதிகாரிகளும் முறையாக பதில்களைக் கூறுவதில்லை. அரசுக்குப் பொறுப்பு இருக்கவேண்டாமா? காய்ச்சல் மட்டும் மர்மம் அல்ல. இந்த ஆட்சியில் டெங்கு தொடர்பான உண்மைகளும் மர்மமாகவே உள்ளது. நிர்வாக பொறுப்புள்ள எந்த அரசும் இந்த பதிலை கூறாது

பாதுகாக்கப்பட்டக் குடிநீரைக் குடியுங்கள் என்று கூறுகிறார்கள்.. வெறும் அறிவிப்புகள் மட்டுமே இந்தப் பிரச்சனை தீர்த்துவிடுமா? பாதுகாக்கப்பட்ட குடிநீர் யார் கொடுக்க வேண்டும்? திருவள்ளுர் மாவட்டத்தில் சுகாதாரமற்ற பகுதிகள் குறித்து நாங்கள் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் தெரிவித்தோம். அந்த புகார் மீது எந்தத் தீர்வும் எட்டப்படவில்ல. இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். மாவட்டத்தின் சுகாதாரம் முற்றிலும் சீர்கேடு அடைந்துள்ளது" என்றும் கொதிக்கிறார் சுந்தரராஜ்.

மருத்துவ அகராதியில் இல்லாத வார்த்தை

சுகாதார சீர்கேட்டால் மக்கள் உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், போதிய மருத்துவர்களும், நோய்களைக் கண்டறியும் கருவிகளும் இல்லாத குறைபாடே தமிழக மக்களின் தலைவிதிக்கு காரணம்" என்கிறார் டாக்டர் ரவீந்திரநாத். "தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. தரமான மருந்துகள் இல்லை. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. 900 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாசாரம்தான் தமிழகத்தில் உள்ளது.

மர்ம காய்ச்சல் என்று சொல்வது முட்டாள் தனமான பதில் என்றுதான் சொல்ல வேண்டும். என்ன காய்ச்சல் என்பதைக் கூட கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தமிழக சுகாதராத்துறை உள்ளது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். அப்படி ஒரு வார்த்தை மருத்துவ அறிவியலில் உள்ளதா? அந்த மர்மத்தை ஏன் கண்டுபிடிக்கவில்லை? எல்லா காய்ச்சலுக்கும் பெயர் உள்ளது. நோய் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் எப்படி நோயைக் குணப்படுத்த முடியும். நோய் குறித்து வெளிப்படையாகப் பேசாமல் உயிரிழப்பை எப்படி தடுக்க முடியும் ? பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண முடியும்" என்கிறார் ரவீந்திரநாத்.

செத்தால்தான் பெட்டியை தூக்கிக்கொண்டு வருவீர்களா?

திருவள்ளூரில் உள்ள பெரிய எடப்பாளையம் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி கீதாவிடம் பேசினோம். "கடந்த 21-ம் தேதி பாதிக்கப்பட்ட காவேரி ராஜபுரம் கிராமத்துக்குச் சென்று பார்த்தபோது கிட்டத்தட்ட 110 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 7 பேர் டெங்குவால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு இருப்பதே பிரச்னைக்குக் காரணம். புகார் கொடுத்தால் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. யாராவது இறந்தால் மட்டுமே அந்த இடத்துக்கு மருத்துவர்கள் வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது வெறும் பூஜ்ஜியம்தான்" என்கிறார்.

உயிரிழப்புகள் தொடரும்நிலையில் அனைத்துத்தனியார் மருத்துவமனைகளிலும் சுகாதாரத் துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை சென்று உள்ளதாக கூறப்படுகிறது. அதில் "காய்ச்சல் தொடர்பாக எந்த ஒரு தகவலையும் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது" என்று கூறப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.


"பரவாயில்லைப்பா நமக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறதே" என தமிழகத்தில் டெங்குவை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் கூட இனி சொல்லக்கூடும்.

-கே.புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ