Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களின் பாதுகாப்புக்கும் திட்டமிடுங்களேன்...!

டந்த முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்தை நிர்ணயிக்கும் மல்யுத்த போட்டி. கடைசி 15 நொடிகள். கடும் போராட்டதுக்குப் பிறகு எதிராளியைப் புரட்டிப்போடுகிறார் சாக்ஷி. இப்போது சாக்ஷியின் பிடியில் எதிராளி. ஆட்டம் தலைகீழாக மாறியது. வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றிவிட்டார். அடுத்த நொடி, ஒட்டுமொத்த தேசத்தாலும் கொண்டாடப்படுகிறார். அதே ஒரு சில நொடிகளில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அன்றாடம் தான் பயணிக்கும் ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் சராசரி பெண் சுவாதி. திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டு ஓடி மறைகிறார். ஆம், சாக்ஷியின் வெற்றியைத் தீர்மானித்த அதே ஒரு சில நொடிகளில்தான் ஸ்வாதியின் இறப்பும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாக்ஷியின் 12 ஆண்டு கால உழைப்புக்கு மகுடம் சூடி அழகு பார்த்த இதே சமூகம்தான், எதிர்கால கனவுகளைச் சுமந்து, ரத்த வெள்ளத்தில் உயிர் பறிக்கப்பட்டு தரையில் கிடந்த சுவாதியின் உடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

சுவாதி கொலை ஏற்படுத்திய அதிர்வலைகள் நீர்த்துப்போகும் முன்னரே அடுத்தடுத்து இரண்டு கொலைகள். சோனாலி மற்றும் பிரான்சினா. பட்டப்பகலில் நடந்த சுவாதி கொலையைத் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை என்பதற்கு சான்றுதான் இரண்டு அப்பாவி பெண்களின் மரணம்.

சோனாலி மரணத்துக்குக் காரணம்!

சமீபத்திய இந்தக் கொலைகளில், சட்டம், காவல் துறை மற்றும் அரசு இவற்றைத் தாண்டிச் சுற்றியுள்ள சமூகத்தின் பங்களிப்பு எத்தகையது? கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான சோனாலி, தந்தையை இழந்தவர். ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்தவாறு தன் மகளைப் படிக்கவைத்திருக்கிறார் சோனாலியின் தாய். தன்னைப் பின்தொடரும் இளைஞரின் காதல் தொந்தரவைப்பற்றிச் சொன்னால் படிக்கவைக்காமல் நிறுத்திவிடுவார்களோ என அஞ்சி வீட்டில் சொல்லாமல் தவித்து வந்தாராம் சோனாலி. இதுபற்றிக் கல்லூரி நிர்வாகத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் கொடுத்துள்ளார். காதலித்த நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும் அந்த நபர், அத்துமீறி வகுப்பறைக்குள் நுழைந்து மற்ற மாணவர்கள், பேராசிரியர் முன்னிலையில் கட்டையால் தாக்கிக் கொலை செய்யும் அளவுக்கு விபரீதம் நடந்துவிட்டது. கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து சோனாலியின் உறவினர்கள் இழப்பீடு கேட்டும், நியாயம் கேட்டும் போராடி வருகின்றனர். ஆக, சோனாலியின் மரணத்துக்குக் காரணம் கொலை செய்த நபரின் கொடூர புத்தியும், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமும், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களும்தான்.


பாதுக்காப்பற்ற, காதல் பற்றிய புரிதல் இல்லாத, ஆணாதிக்க வட்டத்துக்குள் மாட்டிக்கொண்ட சராசரிப் பெண்களான சுவாதி, சோனாலி மற்றும் பிரான்சினாவின் வாழ்க்கைப் பயணம், தொடங்கும் முன்பே முடிந்துவிட்டது. ஒப்பற்ற மூன்று பெண் சக்திகளை அடையாளம் காட்டியிருப்பது பெருமிதம் என்றாலும் சுவாதி, சோனாலி என அடுக்கடுக்காய் அப்பாவிப் பெண்களின் வாழ்வை வேரோடு அழித்தது சமூகத்தின் பேரவலம்.

தமிழக அரசு மெத்தனம்!

ஒலிம்பிக் முடிந்து ஒரு சில நாட்களிலேயே சாக்ஷி, பி.வி.சிந்து, திபா கர்மாகர் ஆகிய மூவருக்கும் பி.எம்.டபிள்யூ கார், அரசு வேலை, பணம் என பரிசுகள் குவிந்துவிட்டன... கூடவே விருதுகளும்! மூன்று பெண்கள் சாதிக்க ஏதுவாக இருந்த இதே இந்திய மண், வேறு மூன்று பெண்களின் எதிர்காலத்தை சிதைத்து, அவர்கள் உயிரைக் காவு வாங்கவும் ஏதுவாக இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் கோட்டைவிட்ட மத்திய அரசு, பதக்கங்கள் பெறவேண்டும் என்பதில் கோட்டை விடவில்லை. இந்த முறை ஒலிம்பிக்கில் தவறவிட்ட பதக்கங்களை, அடுத்த ஒலிம்பிக்கில் அள்ளிக் குவிக்க மத்திய அரசு முழு வீச்சில் நடவடிக்கைக் குழுவை உருவாக்கி இருக்கிறது. ஒலிம்பிக் மெடல் இந்தியாவின் பெருமை என்றாலும், அதில் காட்டும் வேகம், பெண்கள் பாதுகாப்பிலும் ஆண்களுக்கு உளவியல் ரீதியான விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதிலும் ஏன் செலுத்தவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. இதில் தமிழக அரசும் மெத்தனம் காட்டி வருவது மேலும் வருத்தத்தைக் கூட்டுகிறது. 

-அஸ்வினி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ