Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரியில் தண்ணீர் திறப்பு... என்ன நினைக்கிறார்கள் தமிழக விவசாயிகள்?

னிதாபிமான அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து காவிரியில் இருந்து நேற்று தண்ணீரை திறந்து விட்டுள்ளது கர்நாடகம். அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்திய பின்னர், நீதிமன்ற தீர்ப்பை மீற முடியாது என்பதால் தண்ணீர் திறக்கிறோம். இங்கு போதிய மழை இல்லாததால் இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி மறு சீராய்வு மனு போடுவோம்," என அறிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. மறுபுறம் தமிழக அரசு மேற்கொண்ட சட்டரீதியிலான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என ஒரு தரப்பினர் வரவேற்கவும் துவங்கியுள்ளனர்.

காவிரி நதிநீர் பிரச்னை, தண்ணீர் திறப்பு குறித்தெல்லாம் விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்? டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள், காவிரி நதிநீர் உரிமைப் போராளிகள் சிலரிடம் இது தொடர்பாக பேசினோம்.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் : உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இது சட்டத்தின் வழிப்பட்ட தீர்ப்பல்ல. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின்  அடிப்படையில் தீர்ப்பு சொல்லாமல், குத்துமதிப்பாக, பஞ்சாயத்து  செய்வது போல் இத்தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது. கர்நாடகாவின் பொல்லாப்புக்கு ஆளாகக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல். நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு உடனடியாக மத்திய அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பிப்ரவரி மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் இருந்து 90 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்கு முறைக்குழு அமைத்து  அத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என அத்தீர்ப்பிலேயே சொல்லப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதுகுறித்து கேள்வி கேட்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும்.

நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் இருந்ததற்கு மத்திய அரசை உச்சநீதி மன்றம் கடுமையாக கண்டித்திருக்க வேண்டும். வருகிற 16ம் தேதி இந்த  வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது தமிழக அரசு இதனை வலியுறுத்த வேண்டும். கர்நாடகாவில் போதிய மழை இல்லை என அம்மாநில முதல்வர்  சொல்கிறார்.    காவிரியின் மொத்த நீரில் 55 சதவீதம் கர்நாடகாவுக்கு, 45 சதவீதம் தமிழ்நாட்டிற்கு என்ற  அடிப்படையில் நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக அணைகளில் 60 டிஎம்சி தண்ணீர் உள்ளது. பற்றாக்குறைகால பகிர்வு திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 24 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்க வேண்டும். அதுதான் சட்டத்தின் வழிப்பட்ட தீர்ப்பாக இருக்கும். கர்நாடக அணைகளின் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்துதான் உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லியிருக்க வேண்டும்.கர்நாடகாவின் நீலிக்கண்ணீரை கண்டு மனம் உருகி, தமிழ்நாட்டிற்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர்  தந்தால் போதும் என்ற ரீதியில் உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பு தான் என்றாலும் கூட, இதையாவது  செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.

காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம் : 1934-70 ஆம் ஆண்டு வரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சராசரியாக 378 டி.எம்.சி தண்ணீர் கிடைத்து வந்தது. நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் வெறும்  192 டி.எம்.சி மட்டுமே தமிழ்நாட்டிற்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே மிக குறைவு. இதையும் கூட கர்நாடகம் தர மறுப்பது  இந்திய கூட்டாட்சிக்கு தத்துவத்திற்கு எதிரானது.  ஒவ்வொரு ஆண்டும் தமிழக விவசாயிகள் காவிரி நீருக்காக உச்சநீதிமன்றத்தில் மன்றாடி காவடி தூக்க வேண்டிய அவலநிலை நீடித்துக்  கொண்டே இருக்கிறது.

இது இங்குள்ள விவசாயிகளை வேதனையில் ஆழ்த்துகிறது. காவிரி பாசனப்பகுதிகள் வறண்டு கொண்டே வருகிறது. நிலத்தடியில் உள்ள மேல்நிலை நீர் ஊற்றுகளும் வறண்டு போய்விட்டன. 200, 300 அடிக்கு மேல் போர்வெல் போட்டாலும் கூட விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர்  கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் கூட உப்பு தன்மை அதிகமாக உள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள்தான் குறுவை, சம்பா சாகுபடிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய காலகட்டம்.

இதன் பிறகு கர்நாடகம் வெள்ள நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிடுவதால் எந்த பலனும் இல்லை. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். மத்திய அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்து காவிரி பிரச்னையில் கர்நாடகாவை கட்டுப்பட வைக்க வேண்டும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக காவிரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வந்த தமிழ்நாட்டு விவசாயிகள் தற்போது செய்வதறியாது கண்கலங்கி நிற்கிறோம்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் : இது வரவேற்கத்தக்க தீர்ப்புதான் என்றாலும் கூட, முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. 13 டி.எம்.சி. தண்ணீர் சம்பா சாகுபடிக்கு போதாது. உச்சநீதிமன்றம் என்பது ஓர் உயரிய சட்டப்பூர்வமான அமைப்பு. அது சட்டப்படிதான் தீர்ப்பு வழங்க வேண்டும். கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவை தண்ணீரை தர சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் கர்நாடகாவில் தற்போதுள்ள தண்ணீரில் சதவீத அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருக்க வேண்டும். போகிற போக்கில்
ஓர் தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காவிரி தண்ணீர் வருமா வராதா என்ற தவிப்போடு விவசாயிகள் காத்திருக வேண்டிய சூழல் இருப்பதால் விவசாயம் செய்யும் ஆர்வம் விவசாயிகளுக்கு குறைந்து கொண்டே வருகிறது. இப்பிரச்னையில் மத்திய அரசுதான் பிரதான குற்றவாளி. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை மத்திய அரசுதான் செயல்படுத்தியிக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜா சிதம்பரம் : தமிழ்நாட்டை ஒரு வடிகாலாகவே கர்நாடகம் கருதுகிறது. அங்குள்ள அணைகளில் தண்ணீர் நிரம்பி உடைப்பெடுக்கும் சூழல் உருவாகும் போது மட்டுமே தண்ணீர் திறந்து விடுகிறார்கள். மத்திய அரசுதான் நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ், பாஜக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒருதலைபட்சமாகவே நடந்து கொள்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. கடந்த முறை கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா காவிரி பிரச்னைக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது கர்நாடாகவில் காங்கிரஸ் ஆட்சி. ஆனாலும் மத்திய அரசில் பொறுப்புகள் வகிக்கும் கர்நாடக பாஜகவினர் ஒன்றுபட்டு செயல்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் காவிரி பிரச்னையில் நேர்மையாக நடந்து கொள்வதில்லை. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தனது பதவியை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். வாழப்பாடி ராமமூர்த்தி மத்திய அமைச்சராக இருந்தபோது காவிரி பிரச்னைக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் தலைவர் ஈரோடு தெய்வசிகாமணி : ‘’அரசியல் ஆதாயம் கருதி தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசு மதிக்க தவறி விட்டது. நடுவர் மன்ற சொன்ன தீர்ப்பை அமல்படுத்தாமல் கிடப்பில் போடுவதென்பது, அரசியல் சாசன சட்டத்தை மீறும் செயல். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகம் இதனை மதிக்கவே இல்லை. மத்திய அரசும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள 13 டி.எம்.சி தண்ணீரானது நடவுப்பணிகளுக்கு மட்டுமே போதுமானது. பயிரை வளர்த்தெடுக்க இது போதாது. விவசாயத்தையே முழுமையாக நம்பி இருக்கும் காவிரி டெல்டா மக்களின் வயிற்றில் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு அடிக்கும் பாவம் அவர்களை சும்மா விடாது.. நீதிமன்றத்திலும் நீதி கிடைக்கவில்லை. இங்கு சட்டத்தின் ஆட்சி நடைப்பெறவில்லை’’ என்றார்.

-கு. ராமகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ