Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கலவரம் கிளப்பும் ரயில் டிக்கெட் விலை நிலவரம்! உங்கள் கருத்து என்ன?

ழைகள் மஹாராஜாக்களாக உணர்வது எப்போதும் ரயில் பயணங்களில் மட்டும்தான். வழிநெடுக கைகாட்டும் குழந்தைகள், நமக்கு வழிவிட கிராஸிங்கில் காத்திருக்கும் வாகனங்கள் என ரயில் பயணம் தரும் அனுபவமே அலாதியானது. பார்க்க, பயணிக்க சலிக்காத அனுபவம். அதுவும், அரசு சொல்லும் வறுமை கணக்குக்கோட்டை ஒட்டி வாழும் பெரும்பாலான மக்களின் கனவுகளில் ஒன்று, வாழ்வில் ஒரு முறையேனும் ரயிலில் ஏசி கோச்சில் போய்விட வேண்டும் என்பதுதான். இந்தியாவில் எத்தனையோ மக்களின் கனவுகள் ஜனிக்கும் முன்பே மரணித்துவிடுகின்றன. அதுபோல், எளிய மக்களின் இந்த எளிய கனவும் மரணிப்பதற்கான சாத்தியம் அதிகம்.

ஆம், ஏசி கோச் ரயில் பயணங்கள் இனி ஒருபோதும் எளிய மனிதர்களுக்கானதாக இருக்கப்போவதில்லை. சொல்லப்போனால், இனி அது விமானக் கட்டணங்களைவிட அதிகம் ஆவதற்கும் சாத்தியம் அதிகம். மிகையாகச் சொல்லவில்லை, ரயில்வே அமைச்சகம் ராஜ்தானி, சதாப்தி, டுரண்டோ ரயில் கட்டணங்களை நிர்ணயிப்பதில் புதிய முறையைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி ஏசி II, ஏசி III கம்பார்ட்மென்டுகளின் ரயில் கட்டணம் அதிகபட்சமாக 50 சதவிகிதம்வரை உயர வாய்ப்புள்ளது.

இதுதான் அந்தப் புதிய முறை:

நீங்கள் ஓலா, உபேர் வாகனங்களில் பயணித்து இருக்கிறீர்களா..? பீக் ஹவர் பயணங்களுக்கு சர்ஜார்ஜ் (Surcharge) என்று நிர்ணயம் செய்வார்கள். அந்தக் கட்டணம், சாதாரண நேர பயணக் கட்டணங்களைவிட இரண்டு மடங்கு வரை அதிகம் இருக்கும். அந்த முறையைத்தான் ரயில் கட்டணம் நிர்ணயிப்பதில், ரயில்வே அமைச்சகமும் சுவீகரித்துள்ளது.

அதாவது இந்தப் புதிய முறையின்படி, ராஜ்தானி, சதாப்தி, டுரண்டோ ரயில்களின் கம்பார்ட்மென்டுகளில், 10 சதவிகித டிக்கெட்கள் விற்க... விற்க..., ரயில் கட்டணம் 10 சதவிகிதம் வரை ஏறிக்கொண்டே இருக்கும். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், 100 இருக்கைகள் இருக்கிறது என்று வையுங்கள். அதற்குப் பொதுவான கட்டணம் 500 என்றால்... முதல் 10 இருக்கைகளுக்குத்தான் ரூபாய் 500 இருக்கும். 11-வது இருக்கையிலிருந்து அதன் கட்டணம் 10 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 550 ஆகும். அதிகபட்சமாக அதன் கட்டணம் 50 சதவிகிதம் வரை உயரும். அதாவது, கடைசியாக மிஞ்சி இருக்கும் 10 இருக்கைகளின் விலை ரூபாய் 750.

இந்தியா முழுவதும், பல்வேறு வழித்தடங்களில் 54 டுரண்டோ ரயில்களும், 42 ராஜ்தானி ரயில்களும், 46 சதாப்தி ரயில்களும் ஓடுகின்றன. இந்தப் புதிய முறை டுரண்டோவின் ஏசி-யில்லாத கம்பார்ட்மென்ட் (2S, SL) பயணங்களுக்கும் பொருந்தும்.

எப்போதிலிருந்து இது நடைமுறைக்கு வரும்?

செப்டம்பர் 9-ம் தேதியிலிருந்து. அதாவது நாளையிலிருந்து. முன்பே நீங்கள் டிக்கெட்களைப் பதிவு செய்திருந்தால், உங்களுக்குக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாளையிலிருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களுக்குத்தான் இந்தப் புதிய விதி பொருந்தும்.

இந்த புதியமுறை குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்டில் பதியவும் மற்றும் கீழ் ட்விட்டர் கருத்துக்கணிப்பில் உங்கள் வாக்கை பதியவும்.

 


- மு.நியாஸ் அகமது

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ