Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை பெருவெள்ளமும் கர்நாடகா அணை வெள்ளமும் உணர்த்தும் உண்மைகள்!

டந்த டிசம்பர் மாதம். பெருமழை பெய்துகொண்டிருக்கிறது. பூந்தமல்லி டோல்கேட் அருகே நின்றுகொண்டிருக்கிறோம். சென்னையில் உள்ள நண்பர்களுக்குப் பேசி நிலைமையை விசாரிக்கலாம் என்றால், யாருக்கும் அழைப்பு போகவில்லை. அடுத்து, என்ன செய்யலாம் என்று செயற்பாட்டாளர் பாலசுப்பிரமணியுடன்  விவாதித்துக் கொண்டிருந்தபோது, எங்களை நோக்கி 40 வயது மதிக்கத்தக்க ஓர் எளிய மனிதர் வந்தார். அவருக்கு அவ்வளவாக தமிழ் வரவில்லை... ஆங்கிலமும் தெரியவில்லை. உடைந்த தமிழில் அவர் பேசியதிலிருந்து, அவர் கர்நாடகா மாண்டியா பகுதியிலிருந்து வந்தவர் என்பதை அறிய முடிந்தது. தன் சொந்த செலவிலும், நண்பர்களிடமிருந்து திரட்டிய நிதியிலிருந்தும் நிவாராணப் பொருட்களைக் கொண்டு வந்திருந்தார். அவருக்கு சென்னையில் பெரிதாக எந்தத் தொடர்பும் இல்லை. யாரிடம் இந்த நிவாரணப் பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்றும் தெரியவில்லை. எங்கள் உதவியை நாடினார். இருக்கிற தொடர்புகளை வைத்து, ஒருங்கிணைத்து அவரை வடசென்னை பகுதிக்கு அனுப்பினோம். அப்போது அந்தப் பகுதிக்குள் செல்வது சுலபமானதாகவும் இருக்கவில்லை... ஆனால், அவர்களுக்குத்தான் உதவி தேவைப்பட்டது. இதைச் சொன்னோம். அவர் ஆபத்துகளை பொருட்படுத்தவில்லை.

“நிஜவாகலு அவரின சஹாய பேக்கந்தரே அவர்ஹத்தரா தானே ஹோக பேக்கு... (உண்மையில் அவர்களுக்குத்தான் உதவி தேவைப்படுகிறது என்றால், அவர்களிடம்தானே செல்ல வேண்டும்)” என்று சொல்லிவிட்டு அபாயங்களைப் பொருட்படுத்தாமல் சென்றார். அவர் பெயர் சார்வேந்திரா. இதன் பொருள் ‘எங்கும் நிறைந்திருப்பவர்’ என்பதாகும். ஆம், அப்போது அத்தகைய மனிதர்கள்தான் எங்கும் நிறைந்திருந்தார்கள். ஒருவர், 6 லாரிகளில் பால் பாக்கெட்டுகளை அனுப்பினார். இன்னொருவர், 3,000 போர்வைகள் அனுப்பினார். மற்றொருவர், ஏறத்தாழ 10,000 சப்பாதிகள் அனுப்பினார். அன்பும், அக்கறையும் எங்கும் நிறைந்திருந்தது. எந்த வேற்றுமையும் இல்லாமல் மக்களை ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். ஆனால், நாளைய வரலாற்றுப் பக்கங்களில், இது எதுவும் முதன்மையாக இருக்கப்போவதில்லை. சில வெறியர்கள் தமிழர்களைத் தாக்கியதும், பல பேருந்துகளைக் கொளுத்தியதும், ராமேஸ்வரத்தில் ஒரு கன்னடர் தாக்கப்பட்டதும்தான் இருக்கப்போகிறது.

 

 

தண்ணீரல்ல... அதிகாரம்!

ஒருவர், வாகனத்தை அடித்து... நொறுக்கி அதன் மேல் ஏறி நின்று தமிழர்களுக்கு எதிராகக் கோஷமிடுகிறார். இன்னொருவர், சர்வசாதாரணமாக ஒரு வாகனத்திலிருந்து இறங்கி, தமிழ்நாடு பதிவுபெற்ற வாகனங்களைக் கொளுத்திவிட்டுச் செல்கிறார். இவை அனைத்தையும் பார்த்தபடி, கண்களில் மிரட்சியுடன் கடந்துசெல்கிறார்கள் பள்ளிக் குழந்தைகள். தாக்குவதை, நொறுக்குவதைவிட, பிள்ளைகளின் மனதில் இனம்புரியாத அச்சத்தை விதைப்பது எவ்வளவு பெரிய வன்முறை..?

 

 

இன்று கொளுத்துபவர்கள், தாக்குபவர்கள், நொறுக்குபவர்கள் யாரும் விவசாயிகள் அல்ல... உண்மையில் எந்த விவசாயிக்கும் வன்முறை தெரியாது. அவன், என்றுமே வன்முறைதான் தீர்வென்றும் நம்பியதில்லை. அவனது வழிமுறைகள் எப்போதும் சாத்வீகமானது. அவனுக்குத் தெரிந்த உச்சபட்ச வன்முறை தன்னை மாய்த்துக்கொள்வது மட்டும்தான். அவனுடன் நிச்சயம் ஒரு நீண்ட உரையடாலை நிகழ்த்தி, நம் தரப்பு நியாயத்தையும், நம் தேவைகளையும் சொல்லிப் புரியவைத்து காவிரியுடன் சேர்த்து அவன் மனதையும் வென்றெடுத்துவிட முடியும். ஆனால், இப்போது கலவரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அனைவரும் வழமையான சீழ்பிடித்த மனம்கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் அவனால் மூளைச்சலவை செய்யப்பட்ட படைகள். அவர்கள் யாருக்கும் காவிரி முதன்மை அல்ல... அவர்கள் அனைவரும் ஒரு பிரச்னைக்காகக் காத்திருந்தார்கள். அதன்மூலம் ஒரு கலவரத்தைத் தூண்டி, தங்களை நிலை நிறுத்திக்கொள்ளத் துடித்தார்கள். அவர்களுக்குக் காவிரி தேவையில்லை... விவசாயி நலன் முக்கியமல்ல... அவர்கள் அடைய விரும்புவது தண்ணீரையும் அல்ல. தண்ணீர், விவசாயி நலன்தான் முக்கியமென்றால் அவர்கள் எப்போதோ வீதிக்கு வந்து அரசுகளின் தவறான கொள்கைக்கு எதிராகப் போராடி இருப்பார்கள். அவர்கள் விரும்புவது அதிகாரத்தை. மக்கள் ஒற்றுமையாக இருந்தால், அந்த அதிகாரத்தை அவர்கள் அடைய முடியாது. மக்களுக்குள் ஒரு நெருப்பை மூட்டினால்தான், தங்கள் விருப்பத்தை அடைய முடியும். அந்த நெருப்பை மூட்ட, இன்று அவர்கள் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள்.

 

அன்பை மட்டுமே விரும்புகிறார்கள்!

எங்கும் வன்முறை நிலவிக்கொண்டிருக்கிறது. அதிகாரவெறியர்கள் தமிழ்மொழி பேசுபவர்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெங்களூருவில் வசிக்கும் தமிழரான ராமநாதன், எப்படி வீட்டுக்குச் செல்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு கன்னடர் ராமநாதனை தன் வாகனத்தில் அழைத்துச் சென்று, வீட்டில் இறக்கிவிட்டு இருக்கிறார். இதுகுறித்த பதிவை ராமநாதன் தன் ட்விட்டர் கணக்கில் போட்டதும், அது கர்நாடகா அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. ஒவ்வொரு கன்னடரும், அந்தப் பதிவைப் பெருமையாகப் பகிர்கிறார். நடக்கிற வன்முறைக்குத் தங்கள் அடியாழத்திலிருந்து மன்னிப்புக் கேட்கிறார்கள். ‘நாங்கள் அன்பை மட்டுமே விரும்புகிறோம்’ என்று உருக்கமாக அவருக்குப் பதில் அனுப்புகிறார்கள். உண்மையில் இதுதான் மனித இயல்பு. இங்கு அனைவரின் ஆன்மாவும் பரிசுத்தமானதுதான். காலையில் எழும்போதே, இன்று இந்தப் பிரச்னைக்காக யாரையாவது அடிக்க வேண்டும்... எதையாவது கொளுத்த வேண்டும் என்று முடிவு செய்து யாரும் எழுவதில்லை. அனைவரும் அன்பை மட்டும்தான் விரும்புகிறோம். ஆனால், அரசியல் இந்த அன்பை விரும்புவதில்லை. அவர்கள் விரும்புவதெல்லாம் வெறுப்பு... வெறுப்பு... வெறுப்பை மட்டும்தான்.

இப்போதும் அமைதி காப்போம்!

நாம் எப்போதும் அமைதியைத்தான் விரும்பி இருக்கிறோம். நம் தரப்பிலிருந்தும் சில குழுக்கள் வன்முறையில் இறங்கி இருந்தாலும், இங்கிருந்து எப்போதும் பெரும் வன்முறைகள் வெடித்ததில்லை. இந்த அமைதி நமக்குப் பெரும் வெற்றிகளை உடனடியாகத் தராமல் இருந்திருக்கலாம். ஆனால், அமைதியும், அறமும்தான் இறுதியில் வெல்லும். காந்தி இவ்வாறாகக் கூறுகிறார், “நான் நம்பிக்கை இழக்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன்... வரலாற்று நெடுகிலும், அன்பும் உண்மையும் மட்டும்தான் வென்று இருக்கிறது. கொடுங்கோலர்கள், கொலைகாரர்கள் சில காலங்களுக்கு இருப்பார்கள். வெல்ல முடியாதவர்களைப்போல் ஒரு தோற்றத்தைத் தருவார்கள். ஆனால், இறுதியில் அவர்கள் தோற்பார்கள். எப்போதும் இதை நினைத்துக்கொள்ளுங்கள்.” நாம் அதிகம் இழந்து இருக்கிறோம். நம் தரப்புக்குத்தான் வலிகள் அதிகம். மறுப்பதற்கில்லை. ஆனால், நிச்சயம் இறுதியில் இந்த அதிகாரவெறியர்கள் வெல்ல மாட்டார்கள்.

அங்கு உள்ள எளிய விவசாயிடம், அன்பை விரும்பும் மக்களிடம் உரையாடலை நிகழ்த்தினால், அவர்கள், “நிஜவாகலு அவரின சஹாய பேக்கந்தரே அவர்ஹத்தரா தானே ஹோக பேக்கு” என்று சார்வேந்திராபோல், காவிரி விஷயத்திலும் சொல்ல வாய்ப்பிருக்கிறது. நாமும் எதிர்தரப்பு வெறியர்கள்போல் நடந்துகொள்வோமாயின், சார்வேந்திராக்களையும் இழந்துவிடுவோம்.

- மு.நியாஸ் அகமது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ