Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மற்றதை விடுங்கள்... பெங்களூருடமிருந்து கற்க நமக்கு ஒரு பாடம் இருக்கிறது..!

யிரம் முரண்கள் இருக்கலாம். ஆனால், நமக்கு கர்நாடகாவிலிருந்து கற்க ஓர் அழுத்தமான பாடம் இருக்கிறது. ஆம், அது நாம் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்க்கத் தேவையான பாடம்; இன்னொரு பெருமழையிலிருந்து தப்பிக்க நாம் பின்பற்ற வேண்டிய பாடம்; இனி ஒருபோதும் மழையால், வெள்ளத்தால் தத்தளிக்காமல் இருக்க நாம் இறுக தழுவிக்கொள்ள வேண்டிய பாடம். சரி பீடிகைகள் போதும். அது என்ன பாடம் என்று நாம் தெரிந்துகொள்வதற்கு முன், சில மாதங்களுக்கு முன் பெங்களூரு இந்திய அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கையைப் பார்ப்போம்.

இதுதான் அந்த அறிக்கை..?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது சென்னை பெருமழைக்கு பின்,  பெங்களூரு இந்திய அறிவியல் மையத்தின் பேராசிரியர் டி.வி.ராமச்சந்திரா, ‘நீர்நிலைகள் - பெங்களூருவின் பொக்கிஷம்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை,  வளர்ச்சி என்று நாம் பிதற்றிக்கொள்ளும் ஐ.டி காரிடார்கள், பெரும் கட்டடங்கள், வணிக வளாகங்கள், எப்படி எந்த அறமும் இல்லாமல் நீர்நிலைகளின் ஆன்மாவை சிதைத்து இருக்கிறது என்று புள்ளிவிவரங்களுடன் விளக்கியது.

அந்த அறிக்கையின்படி, கோரமங்களா - சல்லகட்டா பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் மோசமாகச் சிதைந்து இருக்கின்றன. புள்ளிவிவரக் கணக்குடன் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் பகுதியில் உள்ள 105 நீர்நிலைகளில் 98 சதவிகித நீர்நிலைகள் சட்டவிரோதமான கட்டடங்களால் நிரம்பிவழிகின்றன; 90 சதவிகித நீர்நிலைகள் கழிவுநீர் தேக்கத் தொட்டிகளாக மாறிவிட்டன; 38 சதவிகிதம் பகுதிகளை, குடிசைகள் ஆக்கிரமித்து இருக்கின்றன.

 

நீர்நிலைகள் பொதுவாக குப்பைத்தொட்டிகளாகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் என்பதையெல்லாம் கடந்து, அரசு தன் மாநகராட்சி குப்பையைக் கொட்ட இந்த நீர்நிலைகளைத்தான் பயன்படுத்துகின்றன. மாநகராட்சியின் கழிவுநீரும் எந்தச் சுத்திகரிப்பும் செய்யப்படாமல் இதே நீர்நிலைகளில்தான் விடப்படுகின்றன. பெங்களூருவின் நீர்நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக... மன்னிக்கவும். மொத்தமாக மரணித்துக் கொண்டிருக்கின்றன என்று அந்த புள்ளிவிவரங்கள், அதன் நிலை குறித்து தெரிந்துகொள்ள வெளிச்சம் பாய்ச்சியது.

 

தமிழகத்தின் நிலையும் இதுதான்!

“இதையா நாம் அவர்களிடமிருந்து கற்க வேண்டுமென்று முதல் பத்தியில் ஒரு நீண்ட பீடிகை போட்டீர்கள்...” என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். இல்லை. இதை, அவர்கள் நமக்குச் சொல்லித் தர வேண்டியது இல்லை. இதை நாம் அவர்களைவிட வெகுச்சிறப்பாக, நல்ல திட்டமிடலுடன் செய்துகொண்டிருக்கிறோம்.

 

பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகளைக் குப்பைமேடுகளாகவும், கான்கிரீட் காடுகளாகவும் வெற்றிகரமாக மாற்றிவிட்டோம்; ‘கூவம்’ என்ற பெயர்ச்சொல்லை ‘துர்நாற்றம்’ என்ற பொருள் தரும் சொல்லாக மாற்றிவிட்டோம்; ஓர் ஆற்றைத் தூர்த்து, விமான ஓடுதளம் அமைத்துவிட்டோம். சென்னையில் கொசஸ்தலை என்ற ஆறு இருப்பதே சென்ற ஆண்டு மழை வெள்ளத்துக்குப் பின்புதான் நமக்குத் தெரியும். ஆறு, ஏரிகளை ஆக்கிரமிப்பதில் நாம் அவர்களைவிட முன்னோடியாகவே இருக்கிறோம். சென்னையில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஏரிகளைத் தூர்த்துக் கட்டப்பட்டதுதான்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் நாம் இந்த ஆக்கிரமிப்பைச் செய்யவில்லை. தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலை. மதுரையில் உள்ள பெரும்பாலான அரசுக் கட்டடங்கள் அனைத்தும் ஊரணிகளைத் தூர்த்துக் கட்டப்பட்டவை. ஈரோடு பெரும்பள்ளம் அணை கால்வாயில் மட்டும் ஏறத்தாழ 500 ஆக்கிரமிப்புகள் உள்ளன என்று அரசே ஒப்புக்கொண்டுள்ளது. நீர்நிலைகளின் ஆன்மாவைச் சிதைப்பதில் நாம் ‘முன்னத்திஏர்’.

எதைத்தான் அவர்களிடமிருந்து கற்க வேண்டும்?

 

அண்மையில் பெங்களூருவில் ஒரு வெள்ளம் வந்தது அல்லவா..? அந்தச் சமயத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருக்கும் கட்டடங்கள் குறித்து ஒரு ‘ப்ருஹாத் பெங்களூரு மஹனகாரா பலிக்கே’ (மாநகராட்சி) ஆய்வை நடத்தியது. அதில், வெள்ளநீர் வடிகாலில் மட்டும் ஏறத்தாழ 1,000 ஆக்கிரமிப்புகள் உள்ளன எனக் கண்டறியப்பட்டது. அதனுடன் மட்டும் மாநகராட்சி நிறுத்தவில்லை, ஏறத்தாழ 30 கட்டடங்களை இடித்துத் தள்ளியது. ஆக்கிரமிக்கப்பட்ட பல ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றியது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. அதை, அகற்றுவதுடன் மட்டும் நிற்கவில்லை. அதற்கு அனுமதி கொடுத்த பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிந்துள்ளது.

இது நிச்சயம் நாம் அவர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம். ஆனால், இதே விஷயத்தில் நாம் அவர்களிடமிருந்து கற்கக் கூடாத பாடமும் இருக்கிறது. ஆம், பெரும் வணிக வளாகங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், வழக்கம்போல் அதிகாரவர்க்கம் அவர்களுக்குச் சலுகைகள் வழங்கி வருவதாக சொல்கிறார்கள் அம்மக்கள். ‘‘எளிய மக்களின் வீடுகளை எந்த முன்அறிவிப்பும் இல்லாமல், ஆக்கிரமிப்பு என்று இடித்துத் தள்ளுகிறார்கள். ஆனால், பெரும் வணிக வளாகங்களுக்கு மட்டும் சலுகை வழங்குகிறார்கள்” என்கிறார்கள் பெங்களூரு மக்கள்.

சரி, நாம் விஷயத்துக்கு வருவோம். சென்னைப் பெருமழைக்குப் பிறகு நாம் இங்கு நீர்நிலைகள், வெள்ள நீர் வடிகால்களில் இருந்த எத்தனை ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கிறோம்..?

 

இங்கு எல்லா விஷயங்களிலும் கறுப்பும், வெள்ளையும் கலந்தே இருக்கிறது. நாம் அவர்களிடமிருந்து நல்லதை மட்டும் பெற்றுக்கொள்வோம். அதாவது, எந்த பாரபட்சமும் இல்லாமல், நியாயமாக அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்துவோம். அதே நேரம், ஏழை எளிய மக்களை அப்புறப்படுத்தும்போது, அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதிசெய்வோம்.

எந்த ஒரு மாநகரம் கட்டமைக்கப்படும்போதும், நிச்சயம் நாம் அறிந்தோ, அறியாமலோ சில தவறுகள் நிகழ்ந்து இருக்கும். இயற்கை சுரண்டப்பட்டு இருக்கும். அதன் விளைவுகளை அறியாமல் இயற்கையைச் சீண்டி இருப்போம். ஆனால், அதனை அறிந்த பின்னர், அதிலிருந்து சில படிப்பினைகளைப் பெற்று, நாம் நம் பிழைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

இதைச் செய்ய மறுப்போமானால்... அந்த வேலையை இன்னொரு மழை செய்யும்!

- மு.நியாஸ் அகமது

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close