Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

A.N 32 விமானம் எங்கே? முடிவுக்கு வராத தேடல்....!


சென்னையில் இருந்து கடந்த ஜூலை 22-ம் தேதி போர்ட்பிளேயருக்கு சென்றபோது வழியில் மாயமான ஏஎன் 32 என்ற விமானப்படை விமானத்தில் பயணித்த 29-பேரும் உயிரிழந்திருக்கலாம் என விமானப்படை தெரிவித்திருக்கிறது. விமானம் காணமல் போய் 50 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில் விமானத்தை இயக்கிய பைலட் உள்ளிட்ட 6 ஊழியர்கள் மற்றும் பயணித்த 23 பேரின் குடும்பங்களுக்கும் விமானப்படையின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "கிடைத்திருக்கும் ஆதாரங்களை உன்னிப்பாக ஆராய்ந்ததில், காணாமல்போன விமானத்தில் பயணித்த உங்கள் மகள் அல்லது மகன் அல்லது உறவினர் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விமானத்தைத் தேடும் பணிகள் தொடருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கடந்த ஜூலை 22-ம் தேதி காலை 8.30 மணிக்கு  போர்ட் பிளேயர் கிளம்பிச் சென்ற விமானம், காலை 9 மணியைப் போல கட்டுப்பாட்டு அறையின் ரேடார் கருவியின் கண்காணிப்பில் இருந்து திடீர் என்று மாயமானது. சென்னைக்கு கிழக்கே 151 நாட்டிக்கல் மைல் தொலைவில் (300 கி.மீ) 23 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து திடீரென மாயம் ஆனதாக விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உட்பட 29 பேரின் உறவினர்கள் பதறித் துடித்தனர்.


தேடல் தொடங்கியது  
விமானம் மாயமான அடுத்த சில நிமிடங்களில் வங்க கடலில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடற்படை கப்பல்கள் மற்றும் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல்கள் உட்பட 13 கப்பல்கள் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டன. ஒரு நீர்மூழ்கி கப்பலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஆனால், தேடுதல் வேட்டையில் சிறிதளவு கூட முன்னேற்றம் இல்லை. இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிநவீன கேமரா வசதிகள் கொண்ட இந்தியப் புவியியல் ஆய்வு மையத்துக்குச் சொந்தமான சமுத்ரா ரத்னாகர் என்ற கப்பல் மற்றும் தேசிய கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்துக்குச் சொந்தமான சாகர் நிதி என்ற கப்பல் மூலமும் வங்கக்கடலில் மிக விரிவான அளவுக்குத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. எனினும் விமானம் குறித்து எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை.

வெளிநாடுகள் உதவியுடன் தேடல்  
இது தவிர, விமானத்தைத் தேடுவதற்காக அமெரிக்காவின் செயற்கோள் உதவி நாடப்பட்டது. அமெரிக்காவின் செயற்கோள் சிக்கனலிலும் விமானம் மாயமான தகவல் பதிவாகவில்லை. கடந்த ஆகஸ்ட் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ரஷ்யாவின் Igor Belousov என்ற கப்பல் மூலம் விசாகப்பட்டினம் கடல் அருகே தேடுதல் நடந்தது. இந்தக் கப்பலின் பக்கவாட்டில் உள்ள சொனார் ஸ்கேன் கருவி மூலம் விமானம் தேடப்பட்டது. ஆனால், காணாமல் போன விமானத்தில் இருந்து எந்த வித சிக்னல்களும் கிடைக்கவில்லை. இதுதவிர சோனோபீ என்ற கருவி மூலம் கடலுக்கு அடியில் விழுந்திருக்கும் விமானத்தில் இருந்து ஏதாவது சிக்னல் கிடைக்கிறதா என்றும் தேடப்பட்டது. ஆனால், எந்தவித சிக்னல்களும் கிடைக்கவில்லை.


தேடுதல் முயற்சிகள் ஏன் வீணாகின?
விமானத்தை ஓட்டிச் சென்ற பைலட் அதே பாதையில் 500 மணிநேரம் வரை விமானத்தை இயக்கி இருக்கிறார். எனவே விமானியின் தவறுதலால் விபத்து நடக்கவில்லை என்று விமானப்படை அதிகாரிகள் கூறினர். அதே நேரத்தில் விமானத்தை குறிப்பிட காலத்துக்கு ஒரு முறை பராமரிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு விமானத்திலும் விமானம் விபத்துக்கு உள்ளான பின்பும் தண்ணீருக்குள் இருந்து கூட சிக்கனல்களை அனுப்பக் கூடிய கருவிகளை இணைத்திருப்பார்கள். அந்த வகையில் அப்படி ஒரு கருவி ஏஎன் 32 விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கவில்லை. இதனால்தான் விமானம் கடலுக்குள் விழுந்த போதிலும் சிக்னல்கள் கிடைக்கவில்லை. தேடுதல் முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன.


தனியார் ஏஜென்சிகள் மூலம் ஆய்வு

விமானத்தை தேடும் பணிக்காக சில தனியார் விமானத் தொழில்நுட்ப ஏஜென்சிகளிடம் விமானப்படை சார்பாக உதவி கோரப்பட்டது. விமானப்படைக்கு உதவிய விமானவியல் ஆராய்ச்சியாளர் வசந்தராஜாவிடம் பேசினோம். "ரேடாரின் கட்டுப்பாட்டில் இருந்து 300 கி.மீ தூரத்தில் விமானம் காணாமல் போனது என்று விமானப்படையில் இருந்து எங்களுக்குத் தகவல் கொடுத்தனர். தாம்பரம் விமானப்படை முகாமில் இருந்த இன்னொரு ஏஎன் 32 விமானத்தைப் பார்வையிட்டோம். காணாமல் போன விமானத்தில் என்னென்ன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டோம். காணாமல் போன விமானத்தின் சர்வீஸ் ஷீட்டையும் ஆராய்ந்தோம். அதன்பின்னர் விமானம் போன பாதை, அப்போது நிலவிய தட்பவெட்ப சூழல் குறித்து ஆய்வு செய்தோம்.
விமானம் காணாமல் போகும்போது அடர்ந்த மேகத்துக்குள் பயணித்திருக்கிறது. மேகத்துக்குள் செல்லும்போது மின்னல் போன்ற ஒரு தாக்குதலால் விமானம் நிலை குலைந்துள்ளது. அப்போது விமானத்தில் உள்ள ஹைட்ராலிக் சிஸ்டம் செயல் இழந்துள்ளது. இதனால்தான் விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமானியால் விமானத்தில் உள்ள அவசரகாலப் பட்டனைக் கூட இயக்கமுடியாத சூழல் நிலவியிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். விமானம் ஆழ் கடலுக்குள் சேற்றுப்பகுதியில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. சிக்கனல் கிடைக்காத நிலையில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார்.   


-கே.பாலசுப்பிரமணி

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ