Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பதவி சுகம் அனுபவித்தவர்களே கட்சி மாறுகிறார்கள்!"- ஜி.கே.வாசன் காட்டம்

 

96-சட்டமன்றத் தேர்தலில், மூப்பனார் உருவாக்கிய, ‘தமிழ் மாநிலக் காங்கிரஸ்’ கட்சி, தமிழகத்தில் பெரும் பிரளயத்தை உருவாக்கியது. ஆனால், அவருடைய மகன் ஜி.கே.வாசன் உருவாக்கிய, ‘தமிழ் மாநிலக் காங்கிரஸ்’ கட்சி, 2016-ம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தல் பிரளயத்தில், தன் அடையாளத்தையே தேடும் அளவில் தோல்வியடைந்து நிற்கிறது. ஒவ்வொரு நாளும் அக் கட்சியின் முன்னணித் தலைவர்கள், மாற்றுக் கட்சி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், காவிரி விவகாரம்,  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமனம், உள்ளாட்சித் தேர்தல்.... என பல கேள்விகளை ஜி.கே.வாசன் முன்வைத்தோம்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகம்-தமிழக அரசுகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?

காவிரிப் பிரச்னை அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் அரசியல் பிரச்னை அல்ல. இரு மாநிலங்கள் தொடர்பான உரிமை, உணர்வு, உறவு தொடர்புடைய நிர்வாகப் பிரச்னை. அதில் இரண்டு அரசுகளும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கவனமாக, நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். இதைக் கையாள்வதில், கர்நாடக மாநிலத்திற்கே அதிக பொறுப்பும், அதிகாரமும் உள்ளது.-தண்ணீர் கொடுக்க வேண்டியவர்கள் அவர்கள். பெற்றுக் கொள்ளும் இடத்தில்தான் தமிழகம் இருக்கிறது.-ஆனால், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடுநிலையோடு செயல்படுவது கிடையாது. அவர்கள் அரசியல் செய்வதற்காகவே தண்ணீரைத் தேக்கி வைக்கின்றனர். மழை பெய்தாலும் சரி, மழை இல்லை என்றாலும் சரி, தண்ணீரைத் தேக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதை ஒரு வியூகமாக அவர்கள் வைத்துள்ளனர். தவறான வியூகம் அது. அதை முதலில், அவர்கள் எண்ணத்தில் இருந்து அழிக்க வேண்டும். தமிழக விவசாயி... கர்நாடக விவசாயி என்று பிரித்துப் பார்க்காமல், இருவரும் ஒரே விவசாய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சேர்த்துப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், காவிரிப் பிரச்னைக்காக மட்டுமே கர்நாடகத்தை அணுகுவேன் என்ற அணுகுமுறை உள்ளது. அது தவறான ஒன்று. பொதுவாகவே, அந்த மாநிலத்துடன் தொடர் நல்லுறவை தமிழக ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கர்நாடகத்தோடு மட்டுமல்ல, ஆந்திர, கேரள மாநிலங்களுடனான அணுகுமுறைக்கும் இது பொருந்தும். ஏனென்றால், எல்லா மாநிலங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றனர்; தமிழகத்தில் அந்த மாநில மக்கள் வாழ்கின்றனர். எனவே, மாநிலங்களுக்கு இடையில் நல்லுறவை வளர்ப்பதுதான் இதற்கு முதல் தீர்வு. ஆனால், மக்கள் எதிர்பார்க்கிற அதுபோன்ற நல்லுறவு தமிழக அரசுக்கு மற்ற மாநிலங்களுடன் இல்லை. அதுதான், இப்போது பற்றி எரியும் பிரச்னைகளுக்கு முதல் காரணம்.

காவிரி பிரச்னையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காட்டிய மௌனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழக முதல்வரைப் பொறுத்தவரை நீதிமன்ற நடவடிக்கைகள், கடிதம் எழுதுவது என்று நிறுத்திக் கொண்டார். இவை ஆட்சியில் இருப்பவர்களின் கடமைகள். ஆனால், அதைத் தாண்டிய ஆக்கப்பூர்வமான நடைமுறைகள் பல இருக்கின்றன. சாதாரண நேரங்களில், வெளி மாநிலங்களோடு நல்லுறவைப் பேணுதல் என்பதுபோல, இக்கட்டான நேரத்தில் சில அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நம் மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டு, அவற்றில் இருக்கும் நல்ல விஷயங்களை, ஒத்தக் கருத்தாக்கி, அதற்கு வலு சேர்த்து, பிரதமரைச் சந்தித்து அதை வலியுறுத்தி இருக்க வேண்டும். அதை எதிர்பார்த்த அளவிற்கு தமிழக முதலமைச்சர் நிறைவேற்றவில்லை.


சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள த.மா.கா, மக்கள் நலக்கூட்டணியோடு சேர்ந்ததன் பின்னணி என்ன?

த.மா.கா தொண்டர்கள், மாவட்டத் தலைவர்கள், மூத்த தலைவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாங்கள் சில வியூகங்களை வகுத்து, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தோம். எங்கள் இயக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க, மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்ல கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னோம். ஊழல் இல்லாத தமிழகம், மது இல்லாத தமிழகம்,  வெளிப்படையான நிர்வாகம் என்ற கோஷங்களை முன்வைத்து மக்களைச் சந்தித்தோம். ஆனால், அரசியலைப் பொறுத்தவரை, ஒரு கட்சியின் வியூகம், எல்லாத் தேர்தல்களிலும் 100 சதவீதம் வெற்றி பெறாது; பலன் கொடுக்காது. அதை நாங்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உணர்ந்துகொண்டோம்.


உள்ளாட்சித் தேர்தலை மக்கள் நலக்கூட்டணியோடு இணைந்து த.மா.கா சந்திக்க  வாய்ப்பு உள்ளதா?

மக்களின் விருப்பம் என்ன என்பதை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படையாக காட்டிவிட்டதே! அதையும் நாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் அல்லவா! எனவே, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா, அல்லது வேறு கூட்டணியை தேர்வு செய்வதா, தொண்டர்களின் விருப்பம் என்ன? என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அதுபற்றி விவாதிக்க, வரும் 20-ம் தேதி பார்வையாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளோம். அதன்பிறகுதான், உள்ளாட்சித் தேர்தல் வியூகம் பற்றி முடிவெடுப்போம்.

 

த.மா.கா-வில் இருந்து அண்மையில் விலகிய சாருபாலா தொண்டைமான், “வாசன் நல்லவர். ஆனால், அரசியலில் அவர் வல்லவர் இல்லை” என்று உங்களை விமர்சனம் செய்துள்ளாரே? 

அரசியலைப் பொறுத்தவரை, தமிழகத்தில் மட்டுமல்ல... இந்திய அரசியலையே எடுத்துப் பார்த்தாலும், பிராந்தியக் கட்சிகளும் சரி... தேசியக் கட்சிகளும் சரி... வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறியே சந்தித்துள்ளன. ஒரு கட்சியின் தலைவர்கள், எவ்வளவு  நல்லவர்களாக, வல்லவர்களாக இருந்தாலும், அந்தக் கட்சி எல்லா நேரங்களிலும் வெல்வது கிடையாது. அநேகமாக இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் தோல்வி  நேர்ந்துள்ளது. அதுபோன்ற சமயங்களில், வெற்றி-தோல்விகளை ஏற்றுக் கொண்டு, எடுக்கப்பட்ட முடிவுகளில் இருக்கும் தவறுகளை திருத்திக்கொண்டு, மக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஒரு நல்ல நிலையை கட்சிக்கு கொண்டு வருவதுதான் தலைவர்களின் கடமை. அது புரியாமல் இன்று என்னை அவர்கள் விமர்சிக்கிறார்கள்.


உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், உங்கள் கட்சியில் இருந்து முன்னணித் தலைவர்கள் வரிசையாக வெளியேறி உள்ளனர். இது கட்சிக்கு பெரும் பின்னடைவுதானே?

ஒரு இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்திற்கு மாற வேண்டும் என்பது, அவரவர் தனிப்பட்ட விருப்பம், சுயநலம் சார்ந்தது. பதவியில் இல்லாதவர்களைவிட, ஏற்கனவே பதவியில் இருந்து, அதன் சுகத்தை அனுபவித்தவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதன்அடிப்படையில் அவர்கள் மாறுகிறார்கள். எங்கள் கட்சியில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சிகளிலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒருவர் தான் சார்ந்த இயக்கத்தில் இருந்து, தன்னை அடையாளம் காட்டிய கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உழைப்பால் தியாகத்தால் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால், தனிப்பட்ட சிலரின் விலகல் என்பது இயக்கத்தைப் பாதிக்காது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து, நீங்கள் தனிக்கட்சி நடத்துகிறீர்கள். உங்களுக்கும் இந்த இலக்கணம் பொருந்தும்தானே?

நான் காங்கிரஸில் இருந்து வெளியே வந்தது எதற்கு என்பதை, அப்போதே தெளிவுபடுத்திவிட்டேன். நான் கட்சியின் தோல்விக்காக வெளியில் வரவில்லை. கூட்டணி சரியாக அமைக்கவில்லை என்று கூறி அங்கிருந்து வெளியேறவில்லை. 50 ஆண்டுகளாக தமிழகத்தில் தேசியக் கட்சிகள் விழிபிதுங்கி நிற்கின்றன; பெருந்தலைவர் ஆட்சியை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அகில இந்தியத் தலைமையின் அணுகுமுறையில் மாறுதல் தேவை என்று வலியுறுத்தினோம். தமிழகத்தை அகில இந்தியத் தலைமை கையாள்வதில் சில நடவடிக்கைகளை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதை விளக்கிச் சொன்னோம். அதை அவர்கள் ஏற்காத நிலையில், நாங்கள் வலியுறுத்திய நோக்கத்தை நிறைவேற்ற, தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கி உள்ளோம்.


காமராஜர் ஆட்சியை த.மா.கா ஏற்படுத்தும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதே நேரத்தில், நீங்கள் விரைவில் த.மா.கா-வை கலைத்துவிட்டு, மீண்டும் காங்கிரஸில் அல்லது பாரதிய ஜனதாவில் இணையப்போவதாக ஒரு பேச்சு இருக்கிறதே?

அடிப்படையில் தவறான கேள்வி இது. முகாந்திரம் இல்லாத தகவல் நீங்கள் சொல்வது. தமாகா வளரும்;செழிக்கும்; உயரும்; பெருந்தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும். அதில் நான் கவனமாக இருக்கிறேன்.


அப்படியானால், காங்கிரஸ் கட்சியோடு தா.ம.கா எதிர்காலத்தில் கூட்டணி அமைக்காதா?

தேர்தல் நேரத்து கூட்டணிகள் என்பது, அது அந்தந்த நேரம் சூழலைப் பொறுத்தது. ஆனால், எந்தக் கூட்டணி அமைந்தாலும், எந்தக் கட்சியோடு கூட்டணி சேர்ந்தாலும், த.மா.கா தனித்துவத்துடன் செயல்படும்.

பிரதமர் மோடி-மத்திய அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசிடம், நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன; இன்னும் இருக்கின்றன. ஆனால், அவற்றில் எதையும் சரியாக பூர்த்தி செய்யவில்லை. எதிர்பார்த்த பல விஷயங்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அரசு  ஈடு கொடுக்கவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார். இது அந்தக் கட்சிக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருமா?

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தலைவர் இருக்கிறார்கள். அதுபோல், திருநாவுக்கரசர் வந்துள்ளார். அதைப் பற்றி வேறு என்ன சொல்ல?

 

 


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்தபோது, அவரைத் தனியாகப் போய்ச் சந்தித்தீர்கள். என்ன காரணம்?

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எப்போது சென்னைக்கு வந்தாலும்,  நான் மரியாதை நிமித்தமாக சந்திப்பேன். அதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளேன். அதன் அடிப்படையில், இந்தமுறை அவர் சென்னை வந்தபோதும் சந்தித்தேன். அந்தநேரம், காவிரி விவகாரம் பூதாகரமாகி இருந்ததால், அதுபற்றி அவரிடம் எடுத்துச் சொன்னேன். அதோடு, தமிழகத்தில் குடிநீருக்காகவும் பாசன நீருக்காகவும் பொதுமக்களும் விவசாயிகளும் படும் சிரமங்கள் பற்றி எடுத்துரைத்தேன். அதற்கான வாய்ப்பாக இந்தமுறை சந்திப்பைப் பயன்படுத்தினேன்.


தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரைக் கவனித்தீர்களா? வெளியேற்றமும் வெளிநடப்பும் அன்றாட நிகழ்வாக இருந்தன. அதுபற்றி உங்கள் பார்வை என்ன?

சட்டமன்றம் என்பது மக்கள் மன்றமாக செயல்பட வேண்டும். மக்களின் பிரச்னைகளை எடுத்துக்கூறி, விவாதித்து, அதற்கு தீர்வு காண்பதன் மூலம், ஒரு நம்பிக்கையான நிலையை மக்களிடம் அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.  எதிர்கட்சிகளுக்கு முறையான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக இந்த அரசாங்கம் செயல்பட்டது. அது எனக்கு ஏற்புடையதல்ல.

தேர்தல் தோல்விக்குப் பிறகு, உங்கள் கட்சியின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஒத்துக் கொள்கிறீர்களா?

வெற்றி தோல்வி என்பவை எல்லா இயக்கத்துக்கும் ஜனநாயகத்தில் நேரக்கூடியவை. குறிப்பாக த.மா.காவில் உள்ள தலைவர்களும் தொண்டர்களும் 99 சதவிகிதம் இயக்க உணர்வோடு செயல்படுகிறார்கள். தேர்தலுக்கு முன்பைவிட தேர்தல் முடிவுகள் வெளிவந்தபிறகு, அதிக உத்வேகத்துடன் செயல்படுகிறார்கள். தொண்டர்களின் இந்த நம்பிக்கை இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. அந்த உத்வேகத்தோடு நான் இயக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.


நீங்களும் விஜயகாந்தும் வந்ததுதான் மக்கள் நலக்கூட்டணிக்கு ஒருவித சரிவைக் கொடுத்தது என்ற தொனியில் ம.ந.கூ தலைவர்களே இப்போது பேசுகிறார்கள்.  உங்களைப் பொறுத்தவரை, ம.ந.கூ-யோடு இணைந்தது தவறு என்று எப்போதாவது நினைத்தீர்களா?

இந்திய அரசியல் தன்மையில், எந்தக் கட்சியும் எந்தக் கட்சியோடு கூட்டணி சேர்ந்ததை தவறான முடிவு என்று சொல்லமுடியாது. சொல்லவும்கூடாது. காரணம், காலப்போக்கிலே அரசியல் சூழ்நிலைகள் மாறும். இன்று மற்றவரை தவறு என்று சொன்னவர், மீண்டும் அவரோடு இணையும் சூழல் உருவாகும். அப்படி பல சூழ்நிலைகள் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளன. அதை மனதில் வைத்துத்தான் அரசியல் தலைவர்கள் பேச வேண்டும். செயல்படவேண்டும். அதன் அடிப்படையில், மக்கள் நலக்கூட்டணியோடு இணைந்தது தவறான முடிவு என்று எப்போதும் நான் எண்ணவில்லை.

-ஜோ.ஸ்டாலின் | படங்கள் - சொ.பாலசுப்பிரமணியன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ