Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராம்குமாரின் மர்ம மரணமும், நீதிமன்றக் காவல் மரணங்களும்..!

‘ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்’ என்று அரசு சொல்லும் ஒற்றைவரிக்குள் பல்வேறு அடுக்குகளில் பல செய்திகள் ஒளிந்து இருக்கின்றன. அதில், உண்மையில் தற்கொலைதானா என்ற கேள்விக்கு அப்பால், இந்தியச் சிறைகள் பாதுகாப்பானதுதானா என்ற கேள்வியும் ஒன்று. ஆனால், அந்தக் கேள்விக்கான பதில், இந்திய ஜனநாயகத்தையும், இந்திய அரசியல் அமைப்பையும் பார்த்து, கள்ளப் புன்னகை வீசுகிறது. கிடைக்கும் புள்ளிவிவரங்கள் அனைத்தும், ‘பாதுகாப்பு’ என்ற பதம், சிறைக் கம்பிகளுக்குள் தற்கொலை செய்துவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்தவர்கள்!

செயற்பாட்டாளர்கள், அரசுசாரா அமைப்புகள் தரும் கணக்கை நாம் கருத்தில்கொள்ள வேண்டாம். அரசு தரும் கணக்கை மட்டும் கருத்தில்கொண்டாலே போதும். இந்தியச் சிறைகள் கைதிகளுக்கு எவ்வளவு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று தெரியும். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தனது இணையதளத்தில், ஆண்டுதோறும் போலீஸ் காவல் மற்றும் நீதிமன்றக் காவலில் இறந்தவர்களின் கணக்கை வெளியிடுகிறது. அவர்கள் தரும் தரவின்படி, 2001 - 2013 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 1,275 பேர் போலீஸ் காவலில் இறந்து இருக்கிறார்கள்.

நீதிமன்றக் காவலில் இறந்தவர்களின் கணக்கை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தக் கணக்கே ஆறுதல் அளிக்கும்படி இருக்கும். ஆம், 2001 - 2010 ஆண்டு காலகட்டங்களில் மட்டும், நீதிமன்றக் காவலில் இருந்த 12,727 பேர்  இறந்திருக்கிறார்கள். அதாவது, போலீல் கஸ்டடியில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட ஏறத்தாழ 10 மடங்கு அதிகம். தமிழகச் சிறைகளில் மட்டும் இந்த 10 ஆண்டு காலகட்டத்தில் 744 பேர் இறந்திருக்கிறார்கள். அதாவது, சராசரியாக மாதம் 6 பேர் இறந்து இருக்கிறார்கள்.

பெரும்பாலான மரணங்கள், சித்ரவதைகளாலும் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்காததாலும் நிகழ்ந்து இருக்கின்றன. இதில், ஜனநாயகத்தை அச்சுறுத்தும் இன்னொரு விஷயம், போலீஸ் காவலில் இறந்தவர்கள் சம்பந்தமான வழக்குகளில் 50 சதவிகிதம் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இதற்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும்..?

தவறு செய்தவர்கள்தானே... அதுவும், கொடூரமான முறையில் கொலை செய்தவர்களும் இருப்பார்கள்தானே...? அவர்கள் சிறையில் இறந்தால் என்ன... எதற்காக அதற்கு நாம் கவலைப்பட வேண்டும்? உண்மையில், அரசுக்குச் செலவு மிச்சம் என்று நாம் நினைப்போமானால், நாம் நம்மையும் அறியாமல் ஜனநாயகத்தை மெல்ல கொன்றுக் கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம். ஆம், நம்முடைய இந்த எண்ணம்தான் ஜனநாயகத்தைக் கொல்லும் புற்று.

இந்திய அரசியல் அமைப்பின் ஆர்ட்டிகள் 14, “இந்த அரசு அனைத்து மக்களுக்குமான சட்டரீதியான உரிமை மற்றும் பாதுகாப்பை இந்திய எல்லைக்குள் பாரபட்சமின்றி அமல்படுத்த கடமைபட்டுள்ளது” என்கிறது. இந்திய அரசின் எல்லைக்குள்தானே சிறைச்சாலைகளும் இருக்கின்றன... அதுபோல, ஆர்ட்டிகள் 22(1), கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகள் குறித்து உரக்கப் பேசுகிறது.

இந்திய ஜனநாயகம், இந்த அரசியலமைப்பின் மேல்தான் எழுப்பப்பட்டு இருக்கிறது. அந்த அரசியலமைப்பைச் சிதைக்கிறோம் என்றால், நாம் நம்மையும் அறியாமல் ஜனநாயகத்தைச் சிதைக்கிறோம் என்று அர்த்தம். நிச்சயம், ஜனநாயகத்தைச் சிதைத்துவிட்டு, நாம் மட்டும் நிம்மதியாக வாழ முடியுமா என்ன..?

அதுமட்டுமல்ல, நான்கு சுவர்களுக்குள் இருக்கும் கைதிகளுக்கே இந்த அரசால் உரிய பாதுகாப்பை வழங்க முடியவில்லை என்றால், நமக்கு மட்டும் எப்படிப் பாதுகாப்பை வழங்க முடியும்..? தவறு செய்தவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். அதில், யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், அந்தத் தண்டனை இந்திய அரசியல் அமைப்பின் வழி இருக்க வேண்டும். அந்த வழியிலான பயணம் மெதுவான ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால், அதுதான் அமைதியான சமூகத்துக்கு வழிவகை செய்யும். சட்டத்தின் ஆட்சிதான் நடக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது, கைதிகளின் நலனுக்கானது மட்டுமல்ல... அது, நம் நலனுக்குமானதுதான்.

- மு.நியாஸ் அகமது

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ