Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுவாதி - ராம்குமார்... கேள்விகள் ஆயிரம்... உண்மை என்ன?!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி, அதிகாலை 6.40 மணிக்கு, சுவாதி வெட்டிச் சிதைக்கப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் சடலம், தமிழகத்தை அதிரவைத்தது; அந்தக் காட்சிகள் எழுப்பிய ஓலக்குரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது. அன்று தொடங்கி, அடுத்துவந்த 4 நாட்களுக்கு, தமிழகத்தின் மில்லியன் டாலர் கேள்விகளாக இருந்தவை, கொலையாளி யார்... கொலையாளி எங்கே... எதற்காக இந்தப் படுகொலை என்பவைதான். ஒவ்வொரு நாளும் கேள்விகளின் அழுத்தம் தமிழகத்தை இறுக்கிக் கொண்டிருந்தபோது, நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ராம்குமாரை அடையாளம் காட்டியது போலீஸ். கைதுசெய்யப்போன அந்த நேரத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட ராம்குமார் தொடங்கி, ராயப்பேட்டை மருத்துவமனையில் சடலமாகக் கிடந்ததுவரை ராம்குமாரை ஆயிரம் ஆயிரம் கேள்விகள் சூழ்ந்திருந்தன.

யார் இந்த ராம்குமார்?

நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன்தான் ராம்குமார். பரமசிவம் தென்காசி பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர். ‘‘ராம்குமார் ப்ளஸ்-2 படித்துவிட்டு ஆலங்குளத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.இ., மெக்கானிக் படிப்பை படித்தவர் ராம்குமார். கல்லூரிக் காலத்தில், கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவரை, ராம்குமார் ஒருதலையாகக் காதலித்துள்ளார். இந்த காதல், படிப்பைக் காவு வாங்கியது. கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்திய ராம்குமார், ஊரில் சுற்றிக்கொண்டும் அவ்வப்போது ஆடு மேய்த்துக்கொண்டும் இருந்தார். அப்போது, ஊரில் இருந்த மற்றொரு பெண்ணுக்கும், ராம்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது பஞ்சாயத்தானது. கல்லூரிப் படிப்பும் கைகொடுக்கவில்லை. ஊருக்குள் நிலவரம் கலவரமாகிவிட்டது. வேறு வழியில்லாமல், சென்னைக்கு வண்டியேறினார் ராம்குமார்.’’ - இதை மீனாட்சிபுரம் மக்கள் உறுதி செய்துள்ளனர்.

சென்னை வந்த ராம்குமார், சூளைமேட்டில், மேன்ஷன் ஒன்றில் மூன்று மாதங்கள் தங்கி இருந்தார். அப்போது, முகநூல் மூலம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு தகவல் இருந்தது. அந்தப் பழக்கம்தான், ஒருதலைக் காதலானதாகவும், சுவாதி அதை ஏற்கவில்லை என்பதால், ராம்குமார் சுவாதியை கொலை செய்தார் என்றும் ஆரம்பத்தில் கதை சொன்னது போலீஸ். அதற்கு வலுச்சேர்க்கும்விதமாக, சுவாதி ராம்குமாரை, ‘தேவாங்கு’ என்று திட்டினார் எனக் கூடுதலாக மசாலா சேர்த்தனர். ஆனால், இவை எதற்கும் எந்த ஆதாரத்தையும் போலீஸ் காட்டவில்லை. ராம்குமார் - சுவாதி முகநூல் நட்புக்கும் ஆதாரங்கள் இல்லை. மேன்ஷனில் தங்கியிருந்த ராம்குமார் அறையிலும் உருப்படியாக எதுவும் சிக்கவில்லை. ராம்குமார் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்ததாகவும் ஒரு கதை கிளம்பியது. ஆனால், அது எந்தக் கடை... அங்கு விசாரணை நடைபெற்றதா... அங்கு ராம்குமாருடன் வேலை பார்த்தவர்கள் யார் என்பதற்கெல்லாம் இப்போதும் எந்தப் பதிலும் யாரிடமும் இல்லை. ஒருகட்டத்தில், ராம்குமாரின் தந்தை பரமசிவம், “அவன் எந்தக் கடையிலும் வேலை பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.

தற்கொலை முயற்சி!

சுவாதி கொலைக்குக் காரணமான குற்றவாளியைக் கைதுசெய்யச் சென்ற போலீஸ், இரண்டு நாட்கள்வரை ராம்குமாரை நோட்டமிட்டனர். ஜூலை 1-ம் தேதி இரவு, ஊரில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, ராம்குமார் வீட்டைச் சுற்றிவளைத்தது போலீஸ். ராம்குமாரை கைதுசெய்ய முயன்றபோது, அவர் தன் கையில்வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்ய முயன்றதாகச் சொல்லப்பட்டது. பின்னர் அவரை, நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். பின்பு, அங்கிருந்து ஜூலை 4-ம் தேதி பலத்த பாதுகாப்புடன் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டார். எழும்பூர் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் ராம்குமாருக்கு விதிக்கப்பட்டது. காயம் காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன்பின், புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் அப்போது ராம்குமாரின் தந்தை பரமசிவன், ‘‘உண்மையிலேயே என் மகன் தப்பு செஞ்சிருந்தா போலீஸைக் கண்டவுடன் எங்கேயாவது ஓடியிருப்பானே. அவன் ரொம்ப அமைதியான பையன். அவன் ஒரு கொலையைச் செஞ்சிருக்கானு போலீஸார் சொல்றதை நாங்க மட்டுமில்லை. இந்த ஊரே நம்பலை’’ என்றார்.

‘‘சி.பி.ஐ விசாரணை வேண்டும்!’’

இதற்கிடையில் ராம்குமார் வழக்கில், ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் அதிலிருந்து விலகினர். அந்தச் சமயத்தில், ராம்குமாருக்கு ஆதரவாகக் களம் இறங்கிய வழக்கறிஞர் ராம்ராஜ், ‘‘இந்தக் கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதற்குப் பின்னணியில் சில அமைப்புகள் உள்ளன. இந்த விவரம் சுவாதியின் குடும்பத்துக்கும், போலீஸுக்குமே மட்டுமே தெரியும். தமிழக போலீஸ் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. ஆகவே, சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்’’ என்றார்.  சுவாதியின் குடும்பத்தினர் எவரும் மீடியாவில் எதுவும் பேசாது மெளனம் காத்துவந்தனர். ஆனால், ஜூலை 12-ம் தேதி அடையாள அணிவகுப்பில் கலந்துகொண்ட சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், ராம்குமாரை அடையாளம் காட்டினார். இதற்கு மறுநாள், ராம்குமார் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டார். ஆனால், ஒவ்வொரு தடவையும் போலீஸாரே, மீடியாவிடம் ராம்குமாரைப் பற்றிய தகவல்களைச் சொல்லி வந்தனர். புழல் சிறையில் தங்கியிருந்த ராம்குமார், ‘‘யாரையும் சந்திக்க மறுக்கிறார். ஆனால் உடல்தகுதியுடன் இருக்கிறார்’’ என்று மீடியாவுக்கு போலீஸாரே விளக்கம் அளித்தனர். இந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

 

திடமான பயிற்சி!

‘‘ராம்குமார், தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உடையவராக இருந்திருந்தால்... அவரை, மனநல மருத்துவரிடம் அல்லவா அழைத்துச் சென்றிருக்க வேண்டும். தற்கொலை எண்ணம் வளராத அளவுக்கு அவருக்குத் திடமான, நம்பிக்கையான பயிற்சிகளை அளித்திருக்க வேண்டும். ஆனால், அவருடைய இரண்டு தற்கொலை விஷயங்களையும் பார்க்கும்போது அவர் அப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ராம்குமாருக்கு ஒருவேளை ஜாமீன் கிடைத்து, அவர் வெளியில் வந்தால் இந்த வழக்குச் சம்பந்தமான உண்மை விவரங்களை மீடியாவிடம் சொல்லிவிடலாம் என்று பயந்தே சிலர், அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுவாகப் பல்வேறு தரப்பினரால் கிளப்பப்படுகிறது. எது, எப்படியோ உண்மை போலீஸுக்கு மட்டுமே தெரியும்’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மொத்தத்தில் சுவாதி கொலை, அதில் குற்றவாளியாக்கப்பட்ட ராம்குமார், அவரின் சந்தேக மரணமும் எந்தக் கேள்விகளுக்கும் விடை சொல்லவில்லை. மாறாக, இன்னும் கூடுதலாகக் குழப்பங்களையும் சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் விட்டுச் சென்றுள்ளன.

- ஜெ.பிரகாஷ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close