Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தேர்தல்... எம்.ஜி.ஆரின் ஆஸ்பத்திரி ராசி ஜெயலலிதாவுக்கு இருக்குமா?'

டுத்த பல நாட்கள் அல்லது சில மாதங்களுக்கு அரசியல் பரபரப்புகளுக்கு அடிபோட்டுள்ளது அப்பல்லோ மருத்துவமனை. தன் அரசியல் பயணத்தில் கடும் போராட்டங்களை சந்தித்துள்ள ஜெயலலிதா தற்போது அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் அரசியல் வரலாற்றில் அப்பல்லோவிற்கு தனிப்பட்ட சில பக்கங்கள் உண்டு. கடந்த 84 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ந்தேதி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் திடீர் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் அன்றைய இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதுவரை தனது உடல்நல பாதிப்பு குறித்து வெளியுலகத்திற்கு வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத எம்.ஜி.ஆரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது அந்த சம்பவம்தான். தமிழகம் அதிர்ந்து நின்றது. தமிழகத்தின் அத்தனை பிரபலங்களும் அப்பல்லோவில் குவிந்தனர். எம்.ஜி.ஆருக்கு என்ன ஆனது என தமிழக மக்கள், அவரது ரசிகர்கள், தொண்டர்கள் என ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றப்பட்டது .

அசம்பாவிதங்களை தவிர்க்க 'ஆஸ்துமா தொந்தரவினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், முதல்வர் சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக' அரசு தரப்பில் அறிக்கை விடப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையின் முதன்மை நிர்வாகி டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, "எம்.ஜி.ஆருக்கு சளிக் காய்ச்சல் இருந்தது. சிறிது ஆஸ்துமா தொந்தரவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை பொது மருத்துவமனையின் டாக்டர்கள் திருவேங்கடம், சேஷய்யா, அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, ராமலிங்கம், எம்.ஜி.ஆரின் தனி மருத்துவர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு எம்.ஜி.ஆரின் உடல் நிலையை கவனித்துக்கொண்டனர்.  முதல் அமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக அவ்வப்போது தெரிவிக்கப்பட்டது. சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்து கேள்விகள் எழுப்பின. சட்டசபை கூட்டத்தில் திமுகவினர், எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றி அரசு உண்மையை மறைப்பதாக குற்றஞ்சாட்டியது. இப்படி திமுக உள்ளிட்ட கட்சிகள் இதைஅரசியல் செய்வதற்கு பயன்படுத்திக்கொண்டன.

எதிர்கட்சிகள் இதை அரசியலாக்கிவருவதை தவிர்க்கும்பொருட்டு அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பிரதாப் சி.ரெட்டி, "எம்.ஜி.ஆருக்கு சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை ஏற்பட்டதால் டயாலிசிஸ் மூலம் வெளியேற்றினோம். எம்.ஜி.ஆருக்கு முழு ஓய்வு தேவை. ஓய்வுக்காகத்தான் எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பாரே தவிர சிகிச்சைக்காக அல்ல." என்று அவர் எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.

எம்.ஜி.ஆரின் உடல் நிலை தேறி வருவதாக நம்பப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 14ந்தேதி அந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. முன்தினம் இரவு எம்.ஜி.ஆருக்கு வலது பக்க கை, கால் அசைவு இல்லாதது கண்டறியப்பட்டது. உடனடியாக நரம்பியல் மருத்துவர் வரவழைக்கப்பட்டு எம்.ஜி.ஆரின் தலைப்பகுதி `எக்ஸ்ரே' எடுக்கப்பட்டது. அப்போது அவரது மூளையின் ஓரிடத்தில் கட்டி கண்டறியப்பட்டது. மற்றொரு இடத்தில் ரத்த உறைவு இருப்பதும் தெரியவந்தது.

ஆனால் ரத்தக் கசிவு எதுவும் இல்லை. மற்றபடி எம்.ஜி.ஆரின் உடலில் பிரச்னைகள் பெரிய அளவில் இல்லை என்பது தெரியவந்தது. அதே சமயம் மருத்துவ உலகில் அப்போது பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில் மூளையில் உள்ள கட்டியை சரிசெய்ய அமெரிக்காவில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அந்த வசதி உள்ளதை விசாரித்து அறிந்தனர். சிறுநீரக பாதிப்பும் இருந்ததால் அமெரிக்க மருத்துவமனை சரியான தேர்வு என மருத்துவர்கள் குழு முடிவெடுத்தது.

இதையடுத்து சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படும் தகவலை அரசு உறுதிப்படுத்தியது. எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனை செல்ல தனி விமானத்தை ஏற்பாடு செய்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. விமானத்தில் செல்லும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை ஒத்துழைக்குமா என்பதற்காக ஒரு டம்மி மூலம் விமானம் பரிசோதிக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் அப்பல்லோவே கதி என கிடந்தனர். திரை உலக பிரமுகர்கள், நாள்தோறும் மருத்துவமனைக்கு வந்து எம்.ஜி.ஆர் உடல்நிலையை கேட்டறிந்தனர்.

எம்.ஜி.ஆரின் உடல்நிலையால் தமிழகம் கொஞ்சம் சுணங்கித்தான் போயிருந்தது. எங்கு திரும்பினாலும் 'ஒளிவிளக்கு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன். இந்த ஓர் உயிரை நீ காப்பதற்கு உன்னிடம் கையேந்தினேன்' என்ற பாடலையே கேட்க முடிந்தது. தியேட்டர்களில் படம் துவங்குவதற்கு முன் அந்த பாடல் காட்சி திரையிடப்பட்டது, மக்களிடம் இன்னும் உருக்கத்தை ஏற்படுத்தியது.

தமிழக கோவில்களில் எம்.ஜி.ஆர். நலம் பெற வேண்டி பல்வேறு மக்களால் பூஜைகள் நடத்தப்பட்டன. சிவாஜி தன் ரசிகர்களுடன் தி.நகரில் உள்ள ஓர் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தார். எதிர்கட்சிகளின் வாயை அடைக்க எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய மருத்துவ அறிக்கை சட்டசபையில் தினமும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே எம்.ஜி.ஆர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் 16ந்தேதி இந்திராகாந்தி சென்னை வந்தார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆரிடம் நலம் விசாரித்த அவர், அப்போது, 'நீங்கள் நிரம்ப தைரியசாலி எனக் கேள்விப்பட்டுள்ளேன். எத்தனை பிரச்னைகளை சந்தித்தவர் நீங்கள். அதே மன தைரியத்துடனும், ஊக்கத்துடனும் விரைவில் குணம் அடைவீர்கள்' என்றார். எம்.ஜி.ஆர் புன்னகை புரிந்தார். நேரு குடும்பத்தின் அளவுகடந்த அன்பு கொண்ட எம்.ஜி.ஆருக்கு இந்திராவின் வருகை மகிழ்ச்சியளித்ததாக ஜானகி பின்னர் தெரிவித்தார்.  புறப்படும் சமயம், 'எம்.ஜி.ஆரின் சிகிச்சைக்காக மத்திய அரசு எல்லாவிதமான உதவிகளையும் செய்யும் என்று நம்பிக்கை அளித்துவிட்டு சென்றார்.

தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநில முதல்வர்கள் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வெளிமாநில பிரபலங்கள் எம்.ஜி.ஆரின் உடல்நலத்தை அக்கறையுடன் நேரிலும் தொலைபேசியிலும் விசாரித்த வண்ணம் இருந்தனர். எம்.ஜி.ஆரின் பரமவைரியாக சித்தரிக்கப்பட்டுவந்த கருணாநிதி தனது குங்குமம் இதழின் அட்டைப்படத்தில் எம்.ஜி.ஆர் புன்னகை புரியும் ஒரு படத்தை இடம்பெறவைத்து அழகிய தமிழில் கட்டுரை எழுதியிருந்தார்.
அக்டோபர் 17ந்தேதி நியூயார்க்கில் புரூக்லீன் என்ற இடத்தில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனை சிறுநீரகப் பிரிவு தலைவர்டாக்டர் பிரீட்மேன் தலைமையில் புகழ்பெற்ற மருத்துவக் குழு சென்னை வந்திறங்கியது. அவர்கள் எம்.ஜி.ஆர் உடல்நிலையை பரிசோதித்தனர்.

சில நாட்கள் சென்னையில் தங்கி சிகிச்சையளித்த அவர்களும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டுள்ள வாத நோயை குணப்படுத்தவும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காகவும் அமெரிக்காவிற்கு வர அழைப்பு விடுத்தனர். அதன்படி எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச்செல்லப்பட்டார்.  அங்கு படுத்தபடி ஆண்டிப்பட்டி தேர்தலில் வென்றதும் தமிழக அரசியல் வரலாற்றின் அழிக்கமுடியாத பக்கங்கள்.

ஆம், பாராளுமன்றத்தின் பதவிக்காலம், இன்னும் சில மாதங்கள் இருந்தநிலையில் பிரதமர் ராஜீவ் காந்தி, பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு திடீர் தேர்தல் நடத்த முடிவெடுத்தார். இ.காங்கிரசுடன், அ.தி.மு.க  உறவு கொண்ட இந்த தேர்தலில் தமிழக சட்டசபையை கலைத்துவிட்டு, பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் நடத்த தீரமானிக்கப்பட்டது. அமைச்சர்களின் பரிந்துரையை ஏற்று தமிழக சட்டசபையை 15.11.1984 அன்று கவர்னர் குரானா கலைத்து உத்தரவிட்டார்.

கருணாநிதியிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது இதற்கு. தெரிவித்தார். எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று வரும் வரையில் வேறு ஒருவரை தற்காலிக முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கலாம் என அவர் கருத்து தெரிவித்தார் அவர்.

 


தி.மு.க. கூட்டணியில் இ.கம்யூனிஸ்டு, வ.கம்யூனிஸ்டு, ஜனதா, முஸ்லிம் லீக், நெடுமாறன் தலைமையிலான தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் கட்சிஉள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. அமெரிக்காவில் சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆரிடம் தேர்தல் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. எம்.ஜி.ஆர் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்கான வேட்பு மனுவில் எம்.ஜி.ஆர் கையெழுத்திடவில்லை என சலகலப்பு ஏற்படுத்தினார் கருணாநிதி. தலைவலியானது தேர்தல் ஆணையத்திற்கு. 'வேட்பாளர் அவசியம் கருதி தனது சத்தியபிரமாணத்தை அவர் தங்கியிருக்கும் நாட்டின் தூதரிடம் கொடுக்கலாம் என்ற தேர்தல் விதியை தேடிப்பிடித்து சொன்னது அது.

 

 

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் அருண் பட்வர்தன், எம்.ஜி.ஆருக்கு சத்தியபிரமாணம் செய்து வைத்தார்.
எம்.ஜி.ஆரை எதிர்கட்சிகள் அத்துடன் விடவில்லை. 'அமெரிக்காவில் இருப்பது எம்.ஜி.ஆரே அல்ல' என்றது ஒருநாள். 'எம்.ஜி.ஆர் ஐஸ் பெட்டியில் இருக்கிறார்' என்றது இன்னொருநாள். எதுவும் எடுபடாதபோது, 'திமுகவிற்கு வாக்களியுங்கள் அவர் குணமடைந்து வந்ததும் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்கிறேன்' என சட்டத்தில் இல்லாத ஒன்றைப் பேசினார் கருணாநிதி. இதனிடையே எம்.ஜி.ஆருக்கு இரண்டு வாரத்தில் மாற்று சிறுநீரக ஆபரேஷன் நடைபெற்றது.

அந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. எம்.ஜி.ஆர் மீண்டும் முதல்வரானார். அப்பல்லோவில் இருந்து அரைகுறை சுயநினைவுடன் அமெரிக்கா பயணம் ஆன முதல்வர் எம்.ஜி.ஆர்  தமிழகத்தில் ஒரு தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மீண்டும் தமிழக முதல்வராகவே  சென்னை திரும்பினார். ஆம் அவரை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்ந்தெடுத்தனர்.

தன் உடல்நலக்குறைவிற்குப்பின் எம்.ஜி.ஆர் சந்தித்த தேர்தலில் அமோக வெற்றியடைந்தார்.  குருவாக எம்.ஜி.ஆரை குறிப்பிடும் ஜெயலலிதாவும் தன் உடல்நலம் பாதித்துள்ள இந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்நோக்கியுள்ளார்.

அரசியல் குருவின் ராசி 'அம்மா' சிஷ்யைக்கு இருக்குமா?!

- எஸ்.கிருபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ