Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காணாமல் போன காவிரிப் போராட்டம்!' - கண்ணீரோடு காத்திருக்கும் விவசாயிகள்

'கர்நாடகாவில் நட்பது காவிரிப் பிரச்னை அல்ல; காங்கிரஸ் பிரச்னை' - பா.ஜ.க.

'காவிரிப் பிரச்னையில் மோடி நல்லதொரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்' - காங்கிரஸ் 

- இப்படி ஒருவரை மாற்றி ஒருவர் சுட்டுவிரல் நீட்டிக் கொண்டிருக்க... கர்நாடகத்தைப் பொருத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், 'தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம்' என்பதில் மட்டும் உறுதியோடு இருக்கிறார்கள்.

காவிரி ஆற்றில், அடுத்தடுத்து அணைகளையும் தடுப்பணைகளையும் கட்டி முப்போகம் விளைந்த தமிழக டெல்டாப் பகுதி வேளாண்மையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது கர்நாடகம். இதுகுறித்து கர்நாடகாவோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் எதுவும் உரிய பலனைத் தராததால் உச்சநீதி மன்றத்தின் கதவைத் தட்டியது தமிழ்நாடு. அதனை ஏற்று, 1990-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆண்டுக்கு 419 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் 1991-ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

இந்த இடைக்கால உத்தரவை அமல்படுத்துவதற்காக 1998-ம் ஆண்டில் மத்திய அரசு காவிரி நதிநீர் ஆணையத்தை அமைத்தது. ஆனால், இந்த அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்று கூறி காவிரி நீரைத் திறந்துவிட தொடர்ந்து மறுத்துவந்தது. இந்த நிலையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. சராசரியாக, ஒரு ஆண்டில் தமிழகத்துக்கு கர்நாடகா 205 டி.எம்.சி நீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பையும் கர்நாடகா அமல்படுத்தாததோடு, தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தது.

இதற்கிடையில், தமிழக அரசின் தொடர் போராட்டத்தால் 2007-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, 2013-ம் ஆண்டு அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. ஆனாலும் தண்ணீர் தரமுடியாது என்பதில் கர்நாடக அரசு வழக்கம்போல் உறுதியாக இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்துக்குரிய தண்ணீரை இந்த ஆண்டு திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தைக் கடந்த மாதம் அணுகியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'வினாடிக்கு 15,000 கன அடி நீர் வீதம் 10 நாட்களுக்கு தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என செப்டம்பர் 5-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகமோ வேண்டா வெறுப்பாக  வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் 20-ம்தேதி வரை மொத்தம் 8 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்து விட்டது.

இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கன்னட அமைப்புகள்  வன்முறையில் இறங்கின. கர்நாடகாவில் உள்ள தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். இப்படி ஒரே நாளில் பஸ், லாரி என்று 65 வாகனங்களை தீ வைத்து சாம்பலாக்கினர். இதன் எதிரொலியாக தமிழகத்திலும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சென்னையில், கர்நாடக வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றின் மீது கல் வீசப்பட்டது. 16-ம் தேதி தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், கர்நாடக வன்முறைகளைக் கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க., பா.ஜ.க-வைத் தவிர அனைத்துக் கட்சிகளும் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு அளித்தன. பொதுமக்களின் ஆதரவோடு பந்த் வெற்றிகரமாக நடந்தது.

இந்நிலையில், கடந்த 20-ம்தேதி, வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் 21-ம் தேதி முதல் 7 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் 20-ம் தேதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல், 23-ம் தேதி சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டினார் அம்மாநில முதல்வரான சித்தராமையா. அதில், ''தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க முடியாது; உச்சநீதிமன்றத்தை  எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க முடியாது.’' என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.மேலும், 'கர்நாடகாவில் இருக்கும் நான்கு அணைகளிலும் சேர்த்து 27 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அந்த தண்ணீர் கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு மட்டுமே உள்ளது' என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, சித்தராமைய்யா சட்டமன்றத்தில் பேச, அதை ஆமோதித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மேஜையைத் தட்டினார்கள். இந்தச் சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் சரியின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  காவிரிப்போராட்டமும் காணாமல் போய்விட்டது.  இந்த சூழ்நிலையில், ''கர்நாடகாவின் அதிகாரப்போக்குக்கு, அணைபோட யாரும் இல்லை. தமிழகத்தில், ஒட்டு மொத்த நிர்வாகமும் முடங்கிப்போயுள்ளது" என்று தமிழக விவசாயிகள் ஏக்கத்துடன் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசும் காவிரி  நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் ரங்கநாதன், “ கர்நாடகப் பிரச்னை இந்திய அரசியலமைப்பில் சட்டமோதலை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என ஏற்கெனவே தீர்மானம் போட்டு முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில், மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடகாவுக்கும், கேரளாவுக்கும் இதுதான் வேலையாக இருக்கிறது. இந்தப் பிரச்சனையில் அரசியல் செய்யாமல், மக்களின் வாழ்வாதாரமாக இதனைப் பார்க்கவேண்டும். உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு மேட்டூர் அணையில் 45 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இது ஒரு மாத விவாசாயத்துக்குப் போதுமானது. தொடர்ந்து வடகிழக்குப் பருவமழை வந்தால்தான், சம்பா சாகுபடி செய்யமுடியும். இல்லை என்றால் இப்போது உள்ள தண்ணீரை வைத்து சம்பா சாகுபடி செய்யமுடியாது. எனவே விவசாயம் செய்ய வேண்டுமா, கூடாதா என்பதை மத்திய-மாநில  அரசுகள்தான் எங்களுக்குத் தெளிவாக அறிவிக்கவேண்டும். அதே நேரத்தில் மத்திய அரசு உடனே ஒரு குழு அமைத்து காவிரி ஆற்றின் அணைகளைப் பார்வையிட்டு, தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்று ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிடவேண்டும்” என்றார்.

காவிரித்  தண்ணீர் கடைமடைக்கு  வந்து சேருமா? எனக் கண்ணீரோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

-எஸ்.முத்துகிருஷ்ணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close