Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் சங்கத்தில் நடந்ததென்ன...சரத், ராதாரவி, வாகை சந்திரசேகர் பட்... படார்.. பதில்கள்

டிகர் சங்க விவகாரம் விறுவிறுப்பான க்ளைமேக்ஸை எட்டியுள்ளது. சங்கப்பணத்தில் முறைகேடு செய்ததாக கூறி அதன் முந்தைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி பொருளாளர் சந்திரசேகர் ஆகியோரை கட்டம் கட்டியிருக்கிறது.

இதில் ராதாரவி தனது சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளார். இதனிடையே விஷால் தரப்பினர் சரத்குமார் தரப்பு மீது வீசிய முறைகேடுப்புகார்கள் பூமராங் போல விஷால் தரப்பினர் வசமே திரும்பியுள்ளது. விஷால்&கோ.,வின் மீது பிரச்னைகளை அடுக்கிவருகிறார் நடிகர் வாராகி என்பவர்.

பலகோடி ரூபாய் முறைகேட்டை நிகழ்த்தியதாக தங்கள் மீது கூறப்பட்டப் புகார்களுக்கு சரத், ராதாரவி மற்றும் சந்திரசேகர் ஆகிய மூவரும் என்னதான் பதில் வைத்திருக்கிறார்கள் என அவர்களிடமே கேட்டோம். நடிகர் சங்கத்தின் சீனியர்களான தங்கள் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்தும் கேட்டோம். மூவரிடமும் ஒரே கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர்கள் தந்த பதில்...


சரத்குமார்...


”150 கோடி என்பதில் துவங்கி 100, 60 என படிப்படியாக குறைத்து இப்போது 1. 60 கோடியில் வந்து நிற்கிறார்கள். கணக்குகளை சிறப்பு தணிக்கை செய்து முறைகேடுகளை கண்டறிந்ததாக சொல்பவர்கள் மாற்றி மாற்றி இப்படி சொல்வதிலிருந்தே அவர்கள் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது. அவர்கள் எத்தனை கோடிகள் முறைகேடு என்று சொன்னாலும் நீதிமன்றம் ஒன்று இருக்கிறது என்பதை அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.  நாங்கள் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை. நீதிமன்றத்தில் எனது பக்க நியாயத்தை ஆதாரத்துடன் முன்வைத்து நான் குற்றமற்றவன் என்பதை நீரூபிப்பேன். எந்த மாதிரியான ஆதாரங்கள் என்பதை சொல்லி நீதிமன்ற மதிப்புக்கு ஆளாக விரும்பவில்லை.


இவர்களது நோக்கம் என் பெயரை கெடுப்பது. முந்தைய தலைமுறையின் மூத்த கலைஞர்களின் உழைப்பால் உருவான இடத்தில் சங்க கட்டடம் உருவாக்கி நலிந்த கலைஞர்களுக்கு பயனளிக்கும்படியான திட்டங்களை தீட்டினேன். அதை கொச்சைப்படுத்தியதோடு பல ஆண்டுகள் நான் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயரையும் கெடுக்க முனைகிறார்கள். முறையாக  அனைத்து ஆவணங்களையும் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். கணக்கு வழக்கில் முரண் தெரிந்தால், என்னை நேரில் அழைத்து விளக்கம் கேட்டிருக்கலாமே. சந்தேகங்களை தீர்த்துவைத்திருப்பேன். அதுதானே ஜனநாயக முறை. குற்றவாளியைக் கூட கூண்டில் நிற்கவைத்து குற்றத்தை நீ செய்தாயா என கேட்டு தீர விசாரித்தபிறகே தண்டனை தருகிறார்கள். ஆனால், என் விஷயத்தில் இவர்களாகவே குற்றச்சாட்டுகளை சொல்லி என் கருத்தை கேட்காமலேயே 'இவன் குற்றவாளி' என தீர்ப்பு எழுதிவிட்டார்கள். என் மீதான எல்லா நடவடிக்கைகளையும் மீடியாவிடம் முதலில் சொல்வதிலிருந்தே இவர்கள் நோக்கம் என்னை அசிங்கப்படுத்துவது என்பதை புரிந்துகொள்ளமுடியும். மேலும் இதெல்லாம் ஜனநாயக முறையா? நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். ஒன்றை மட்டும் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ஒற்றுமையினால் மட்டுமே எதையும் சாதிக்கமுடியும். இப்படி கலைஞர்களுக்குள் பிளவை உருவாக்கி அதை வளர்த்துவிட்டால் பின்னாளில் அதன் பலனை அனுபவித்தே தீரவேண்டும். நடிகர் சங்கத்தின் மீதான அக்கறையில் இதை சொல்கிறேன்.”


சஸ்பெண்ட் ஆனது பற்றி?

”வழக்கம்போல் சஸ்பெண்ட் விவகாரத்தையும் அவர்கள் மீடியாவிடம்தான் முதலில் சொன்னார்கள். அதன்பிறகு 3 நாட்கள் கழித்தே எனக்கு கடிதம் வந்தது. நடிகர் சங்கத்திற்காக நான் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். என் திரை வாழ்க்கையைக்கூட இரண்டாம்பட்சமாக வைத்து சங்கத்திற்காக பாடுபட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை சங்கத்திலிருந்து யாரும் நீக்கிவிடமுடியாது.
சங்க விதிப்படி வருகிற செப்டம்பர் 30 ந்தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவேண்டும். அந்த கூட்டத்தில் நான் கலந்துகொண்டு பேசினால் எங்கே தங்களது குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் உள்நோக்கத்துடன் என்னை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லவிருக்கிறேன்.”

 

நடிகர் சந்திரசேகர்...”முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். முறைகேடு நடந்ததாக விஷால் தரப்பு சொல்வது ட்ரஸ்ட் விவகாரத்தில்தான். ட்ரஸ்ட் விவகாரங்களை கவனித்தவர்கள் ராதாரவியும் சரத்குமாரும் தான். கையெழுத்திடும் அதிகாரமும் அவர்களிடம் மட்டுமே இருந்தது. ட்ரஸ்ட் கமிட்டியில் சங்கத்தின் ஒவ்வொரு அணி சார்பாகவும் ஒருவர் இருக்கவேண்டும் என்ற சங்க விதிப்படி என்னை ஒப்புக்காகவே இறுதி நேரத்தில் இதில் சேர்த்தார்கள். 2 வருடங்கள் கூட முழுமையாக அந்த பொறுப்பில் நான் இல்லை. சரத்குமார், ராதாரவி என்ற பிரபலமானவர்களின் மீது குற்றஞ்சாட்டும்போது இன்னொரு பிரபலத்தையும் சேர்த்துவிட்டால் குற்றச்சாட்டுகளுக்கு மீடியாக்களில் கவனம் கிடைக்கும் என்பதால் என்னையும் சேர்த்திருக்கிறார்கள். 

2006 லிருந்து முறைகேடு நடந்ததாக சொல்கிறார்கள். நான் பொறுப்புக்கு வந்ததே 2009ல்தான். பொருளாளர் என்ற முறையில் நான் சங்க அலுவலக ஊழியர்கள் சம்பளம், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான செலவு உள்ளிட்ட சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை மட்டுமே பார்த்துவந்தேன். அதிகபட்சம் மாதம் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்துக்கு தான் இதற்கெல்லாம் செலவாகும்.
பல ஆண்டு காலம் நான் சங்கத்தில் பணியாற்றியதால் ராதாரவியின் வற்புறுத்தலில்தான் நான் பொருளாளராக ஒப்புக்கொண்டேன். ஆனால் தலைவர் சரத்குமாரின் அரசியல் நடவடிக்கைகள் எனது கட்சித் தலைமையை எரிச்சலுக்குள்ளாக்கியதால் தொடர்ந்து சங்கத்தில் பொருளாளராக இருப்பது சங்கடத்தை தரும் என்பதால் ராஜினாமா செய்யப்போவதாக நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். பொதுவாக ஒரு சங்கத்தில் ஹானரரி போஸ்டிங் எனப்படும் சில பொறுப்புகளை நினைத்தபோது ராஜினாமா செய்துவிடமுடியாது. இதனால் புதிய நிர்வாகம் வரும்போது கணக்குவழக்குகளை ஒப்படைத்துவிட்டு விலக முடிவெடுத்து பெயரளவிலேயே கடைசி 2 ஆண்டுகள் பணியாற்றினேன்.

உண்ணாவிரதத்துக்கு 11 லட்சமா என்று கேட்கிறார்கள். அத்தனை பிரபல நடிகர்கள், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் என திரண்டனர். அன்று சாப்பாடு செலவு மட்டும்தான் இல்லை. மற்றபடி உச்ச நடிகர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான கேரவேன், ஸாமினா பந்தல் மற்ற சில செலவுகளுக்கு ஆன செலவு அது. நாசர் ஒன்றை சொல்கிறார். அடுத்து அதே விவகாரத்தில் விஷால் இன்னொரு தகவலை சொல்கிறார். மாற்றி மாற்றிப் பேசுவதிலிருந்தே அவர்கள் சொல்வதில் உண்மையில்லை என்பது தெரிகிறது.


தவறு நடந்திருப்பதாக தெரியவந்திருந்தால் சம்பந்தப்பட்டவரிடம் முதலில் விளக்கத்தை கேட்டிருக்கவேண்டும். அதில் திருப்தியில்லாதபோதுதான் சட்டப்படியான அடுத்த நடவடிக்கைக்கு செல்லவேண்டும். ஆனால் எங்கள் மூவர் விஷயத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றே முடிவெடுத்தனர். எடுத்த எடுப்பில் காவல்நிலையத்தில் புகார், நீதிமன்றத்தில் வழக்கு என தலைகீழாகவே நடந்துகொண்டனர். நாங்கள் ஆளுக்கொரு கட்சியில் இருந்தாலும் சங்கத்தில் அரசியல் செய்ததில்லை. கட்சி சார்பான நடவடிக்கைகளை சங்கத்திற்குள் கொண்டு வந்ததில்லை. ஆனால் எல்லா கட்சியினரும் உள்ள நடிகர் சங்கத்தில் விஷால் அரசியல் செய்கிறார். 
சங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையும் தான்தோன்றித்தனமாக யாரும் செய்துவிடமுடியாது. வரவு செலவு கணக்குகள் தலைவர், செயலாளர், மேலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் கையெழுத்திடப்பட்டு இறுதியாக ஆடிட்டிங் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட கணக்கில் எப்படி முறைகேடு நடக்கும்? இத்தனையையும் மீறி என்னைச் சீண்டிப்பார்க்க நினைத்தால் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறேன்.”


சஸ்பெண்ட் பற்றி?
”சங்க உறுப்பினர் ஒருவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை முதலில் அவருக்கு தெரிவிப்பதுதான் சட்டப்படியான நடைமுறை. முதலில் பத்திரிகைகளை அழைத்து சொல்லிவிட்டு பின்புதான் எங்களுக்கு கடிதம் தயாரிக்கிறார்கள். இது சட்டவிரோதம். குற்றச்சாட்டிற்கு துளியும் தொடர்பில்லாத என்னை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இதை நான் சட்டரீதியாக சந்திப்பேன். என் சஸ்பென்ஷனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்.”

 

நடிகர் ராதாரவி

 

”பத்து பைசாவும் முறைகேடு நடக்கலை. அவங்க சொல்றதெல்லாம் மாயையான குற்றச்சாட்டுகள். 100 கோடின்னான்...அப்புறம் 200 கோடின்னான்... இப்போ நீதிமன்றத்துல ஒன்றரை கோடின்னு சொல்லியிருக்காங்கங்கன்னு கேள்விப்பட்டேன். ஏதோ இடம் வாங்கினதுல மோசடி பண்ணியிருக்கிறதா இப்போ சொல்றாங்க. இப்படி வாய்க்கு வந்ததை உளறிக்கிட்டிருக்காங்க. எதுவும் அவங்களால நிரூபிக்கமுடியாது. சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாக அக்ரீமெண்ட் இல்லை. இடமும்  இல்லைன்னு குதிச்சாங்களே. இப்போ எந்த இடத்தில் கட்டிடம் எழுப்பறாங்க?

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கு பற்றி பொது இடத்தில் பேசுறதே சட்டப்படி தவறு. இவங்க தினம் ஒன்றை சொல்லிக்கிட்டு இருக்காங்க. இதுவே நீதிமன்ற அவமதிப்பு போலத்தான். மைக்கை நீட்டிட்டாங்கன்னா என்ன வேணும்னாலும் சொல்லிவிட முடியுமா... நீதிமன்றத்தில் ஆதாரம் கேட்கும்போது அவங்க குட்டு வெளிப்பட்டும். தவறு நடக்கலைங்கறதுக்கான ஆதாரங்கள் எங்ககிட்ட இருக்கு.  அதை நீதிமன்றத்தில் தந்து நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்.
10 வருடமாக முயற்சி பண்ணி எங்க பேரை டேமேஜ் கெடுத்தாங்க. ஒரே வருடத்தில இப்போ அவங்க மேலவே ஊழல் புகார் வந்திருக்கு. சொன்னவர் எங்க ஆளா இருந்தால் துாண்டிவிடறோம்னு சொல்லலாம். ஆனா தேர்தல்ல அவங்ககூட தோளோட தோல்நின்ன வாராகி என்பவர் சொல்லியிருக்காரு. அதுக்கு என்ன பதில் சொல்லப்போறாங்க?

நட்சத்திர கிரிக்கெட்டிலும், ஸ்டார் நைட் நடத்தினது இன்னும் என்னன்னமோ விஷயங்கள்ல அவங்க காசு பார்த்திருக்கிறதா ஆதாரத்தோட சொல்றார் அவர். எங்களை கேள்வி கேட்கிறதை விட்டுட்டு முதல்ல வாராகியின் கேள்விகளுக்கு அவங்க பதில் சொல்லட்டும். வழக்கமாக செப்டம்பர் 30 அன்று சங்க பொதுக்குழு கூட்டணும். அப்படி கூட்டினால் நாங்க கலந்துகிட்டு கேள்வி கேட்போம். எங்களுக்கு ஆதரவான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் என்கிற அச்சத்துல இந்த முறை பொதுக்குழுவை கூட்டலை.

ட்ரஸ்ட் விவகாரங்களில் ராதாரவி மட்டுமே பொறுப்பல்ல. பல பேர் அதில் இருக்காங்க. நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள் உள்பட அனைவருக்கும் சம பொறுப்பு உண்டு. எங்களை அவமதிக்க தேடித்தேடி குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். எதையும் அவர்களால் நிரூபிக்க முடியாது என்பதுதான் நிஜம். இருந்தாலும் பெயரை கெடுக்கிறதுதான் அவங்க நோக்கம்ங்கறதால் தொடர்ந்து சொல்லிக்கிட்டிருக்காங்க. நீதிமன்றம் எங்களுக்கு நியாயம் வழங்கும். நாங்கள் பொறுப்பு வகித்த 9 வருடங்களில் சங்க நடவடிக்கை ஒவ்வொன்றையும் பொதுக்குழுவில் வைத்து ஒப்புதலுடன்தான் செய்தோம். அதற்கான ஆவணங்களையும் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். அதற்கான கடித ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எங்கள் மீது பழிபோட வசதியாக கொடுத்த ஆவணங்களில் நடுவில் சில மாதங்களுக்கானதை திட்டமிட்டு அழித்துவிட்டிருக்கிறார்கள். என்னென்ன ஆவணங்கள் இல்லை என்பதைக் கேட்டு நாங்கள் கேட்டு எழுதிய கடிதத்துக்கு இன்றுவரை பதில் இல்லை. எங்கள் மீதான நடவடிக்கைகளில் நிறைய சந்தேகத்திற்குரிய கேள்விகள் இருக்கிறது. விஷால் நாசர் கார்த்தி இதற்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

ராதாரவி யார் என்பது இந்த உலகத்த்துக்கே தெரியும். ஏதோ நேற்றுதான் புதுசா சினிமாவுக்கு வந்தவன் போலவும், நடிகர் சங்கத்திலிருந்து காசு எடுத்துத்தான் அரிசி பருப்பு வாங்கி வயிற்றை கழுவுகிறான் என்பது போல அற்பமான புகார்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது.ஒரு இடத்தை விற்கும்போது அதன் அன்றைய மதிப்பில்தான் விற்கமுடியும். 10 வருடங்கள் கழித்து அதன் விலை என்னவாக இருக்கும் என கணித்துப்பார்த்து அந்த விலையிலா விற்கமுடியும். இந்த அடிப்படை விஷயம்கூட தெரியாமல் ராதாரவி நட்டம் ஏற்படுத்திவிட்டான் என்றால் அவர்களை என்னசொல்வது. எங்கள் பிரச்னையை விட அவர்கள் பிரச்னை இப்போது முற்றிவிட்டது. அந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லிவிட்டு பிறகு எங்கள் பிரச்னையை கவனிக்கட்டும்.”


சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து ?

”30 வருடங்கள் இந்த சங்கத்திற்காக உழைத்தவன் நான். என்னை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. நீக்கவும் முடியாது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வேன். எங்களை சஸ்பெண்ட் செய்ததும் கூட சீனியர்களையே சஸ்பெண்ட் செய்துவிட்டோம் எனச் சொல்லிக்கொள்ளும் அற்ப சந்தோஷத்திற்க்காகத்தான். பொதுக்குழு நடந்தால் எங்களுக்கு ஆதரவான குரல் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதும் அவர்களின் நோக்கம். அதனால் திட்டமிட்டு சஸ்பெண்ட் செய்திருக்கின்றனர். நாங்கள் நிச்சயம் இந்த சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்.”

அனுமார் வால் போல நீண்டு கொண்டு போகும் பிரச்னைக்கு எப்போதுதான் முடிவு கிடைக்குமோ?

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close