Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு மருத்துவமனைகள் எப்படி இயங்குகின்றன? முதல்வரின் கவனத்துக்கு ஒரு லைவ் ரிப்போர்ட்..!

டல்நலக்குறைவு காரணமாக ஏழாவது நாளாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. நாட்டின் பிரதமர் மோடி துவங்கி கருணாநிதி வரை, ஜெயலலிதா நலம்பெற வாழ்த்துகளை தெரிவித்து விட்டார்கள். கூட்டுப்பிரார்த்தனை செய்து, கையில் சூடம் ஏந்தி, சிறப்பு பூஜைகள் செய்து... ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என வேண்டி வருகிறார்கள் அதிமுகவினர். 'ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையில் இருந்து அரசு பணிகளை கவனித்து வருகிறார்' என மருத்துவமனை தரப்பிலும், அதிமுக தரப்ப்பிலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

மறுபுறம் ஜெயலலிதா உடல்நலம் குறித்த வதந்திகள், சர்ச்சைகளும் கூட குறைவில்லை. இவை எல்லாவற்றையும் கடந்து இன்னுமொரு கேள்வி இப்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. "திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சட்டமன்ற கட்டடத்தை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றினார் ஜெயலலிதா. இங்கு இல்லாத வசதிகளே கிடையாது என்றும் அறிவித்தார். ஆனால் காய்ச்சல், நீர் சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா சகல வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனையை விட்டு, தனியார் மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்" என்பது தான் அந்த கேள்வி.

'முதல்வர் தனியார் மருத்துவமனையை நாடுகிறார் என்றால், மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்று தானே அர்த்தம்' என எழுந்த கேள்விகளுக்கு, "அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருக்கிறது. அம்மாவை அரசு மருத்துவமனையில்  சேர்த்தால் அங்கு சிகிச்சை பெற வரும் ஏழை மக்களுக்கு வீண் இடையூறு ஏற்படும்.  அதனாலயே, அவர் தன் சொந்த செலவில் சிகிச்சை மேற்கொள்கிறார்," எனச்சொல்லி அசரடிக்கின்றனர் அதிமுகவினர்.

'கால்பால் மாத்திரையை வாங்கி சாப்பிட்டாலும் சாப்பிடுவேனே தவிர, கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போக மாட்டேன்' என அடம்பிடிக்கும் கிராமவாசிகளும் இப்போது இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அரசு மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருக்கிறது எனச்சொல்கிறார்களே? அது உண்மையா?. உண்மையில் அரசு மருத்துவமனை எப்படித்தான் இருக்கிறது?' என்பதை அறிய தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விசிட் அடித்தோம்...

மருத்துவமனைக்குள் நுழைய மருத்துவமனை வளாகம்  ஓரளவு சுத்தமாகவே இருந்தது. அட அரசு மருத்துவமனை டெவலப் ஆகிடுச்சுப்பா! என்று சற்று பெருமையோடு உள்ளே நுழைந்தால் 'இலவச மிக்ஸி கிரைண்டர் கொடுக்கும் இடத்தைப்போல கூட்டத்தால் திணறிக்கொண்டிருந்தது மருத்துவமனை.

மருந்து வழங்கும் இடம் என்ற  போர்டு தொங்கிகொண்டிருந்த இடத்துக்கு சென்று, மாத்திரை வாங்கிக்கொண்டு வந்த ஒருவரிடம், 'என்னண்ணே பிரச்னை? நல்லா கவனிச்சாங்களா?" என கேட்டோம். 'எங்கே கவனிச்சாங்க. நாலு மாத்திரையை கொடுத்திருக்காங்க... சாப்பிட்டு பார்ப்போம். காசு இருந்தா ப்ரைவேட் ஆஸ்பிட்டல் போயிருக்கலாம். நமக்கு இது தானே வழி," எனச்சொல்லி நடையை கட்டினார்.

உடம்பு முடியாமல் வந்த பலர், கூட்டத்தை பார்த்து மிரண்டு ஓரமாய் அமர்ந்திருந்தார்கள். கையில் சிறுநீர் பையை பிடித்தபடி அமர்ந்திருந்த ஒருவரிடம் பேசினோம். "என் பேரு செல்வம் தம்பி..  கிருஷ்ணகிரியில இருந்து வர்றேன் ஒண்ணுக்கு போறதுல பிரச்னை.  நாலு மாசமா வலி தாங்கல. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சேலம் ஜி.ஹெச்.ல தான் ட்யூப் போட்டாங்க. ஒன்றரை மாசம் அங்கேயே இருந்தேன். ஒரு முன்னேற்றமும்  இல்ல. ட்ரீட்மெண்டும் ஒழுங்கா பாக்கல.  உங்களுக்கு ரொம்ப ஆபத்தான இடத்துல பிரச்னை. இங்க இருந்தா சரியா வராது தனியாருக்கு போய் காட்டுங்கனு சொன்னாங்க. தனியார் ஆஸ்பிட்டல் போனேன் ஒன்றரை லட்சம் வரைக்கும் செலவு பண்ணேன். அதுக்கு மேலயும் தேவைப்பட்டுச்சு. அதுக்குமேல செலவு பண்ண காசு இல்ல.. நோயும் சரியாகல. 

அதான்  மறுபடியும் இங்க காமிக்கலாம்னு வந்தேன். இப்போ டாக்டர் இல்ல சனிக்கிழமை வாங்கனு சொல்லி ஏதோ நாலு மாத்திரையை எழுதி கொடுத்திருக்காங்க.  மாத்திரை போட்டா ஒரு மணிநேரம் வலி பொறுக்கும் தம்பி அதுக்கு அப்புறம் உசுறு போய்டுது. சனிக்கிழமை வரை  இந்த வலியை தாங்கணும்.  காசு இருந்தா தனியார் மருத்துவமனையில தங்கி சிகிச்சை பார்க்கலாம். ஏழைக்கு இதான் தம்பி நிலைமை.. காசு இருந்தா உடனே பாக்கலாம்," என தன் நிலையை புலம்பியவர், மாத்திரை எங்க தம்பி குடுக்குறாங்க என்று விசாரித்துக்கொண்டு  சிறுநீர் பையை கையில் பிடித்தபடி மெல்ல நகர்ந்தார்.

அடுத்து எக்ஸ்ரே எடுக்குமிடத்துக்கு நகர்ந்தோம். அங்கும் கூட்டம் நிறைந்திருந்தது. அங்கிருந்த சுவற்றில் அப்பியபடி நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவரிடம் பேசினோம். “என் சொந்த ஊரு தருமபுரிதான் கண்ணு. அஞ்சு நாளா அலையறேன் தொண்டையில் பிரச்னை உள்ள பொறுத்தியிருந்த குழாய் கழண்டுகிச்சாம். எக்ஸ்ரே எடு.. ஸ்கேன் எடுங்குனு சொல்றாங்க  ஆனா, இங்க வந்தா அப்புறமா வா.. அப்புறமா வானு துரத்தி அடிக்கிறாங்க. நேத்து 11 மணிக்கு வந்து எக்ஸ்ரே வாங்கிக்க சொன்னாங்க. வந்து பாத்தா பூட்டிட்டு போய்ட்டாங்க. இன்னைக்கு 12 மணிக்கு வர சொன்னாங்க.. இப்போ 2 மணி ஆகுது. இன்னமும் குடுக்கல. டாக்டரெல்லாம் நல்லாதான் பாக்குறாங்க.  இவுங்கதான் நாய் மாதிரி அலைய வைக்கிறாங்க.  இங்க வைத்தியம் பாத்தா.... ரொம்ப லேட் ஆவும் கண்ணு அவ்ளோதான்," என்றவரின் குரலில் நம்பிக்கையின்மை அதிகமாகவே வெளிப்பட்டது.

அடுத்ததாக அம்மா காப்பீட்டு வார்டுக்குள் நுழைந்தோம். பெயர் பலகையில் ஜெயலலிதா மின்னிக்கொண்டிருந்தார். மருத்துவமனையில் நுழையும்போது எட்டிப்பார்த்த பெருமிதம் இப்போது காணாமல் போயிருந்தது. நாற்றம் குடலை பிடுங்கியது. நாமும் வியாதிக்காரர் போன்ற உணர்வு ஏற்பட துவங்கியிருந்தது.  பெண்கள் எல்லோரும் சேலையால் மூக்கை மூடியபடியே அந்த பகுதியை கடந்தார்கள்.  அதுதான் தீவிர சிகிச்சை பிரிவு.  

கருங்கல்பாடியிலிருந்து வந்திருந்த ராமலிங்கம் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தார் “அப்பாவுக்கு காலையில 5 மணிக்கு பாம்பு கடிச்சிடுச்சி... உடனே தீர்த்தமலை ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போனோம்...அங்கிருந்து அரூருக்கு அனுப்பினாங்க.. அரூர்ல இருந்து இங்க அனுப்பிட்டாங்க எங்க அப்பா பொழப்பாறானு பதட்டத்துல இருக்கோம். எமெர்ஜென்ஸி வார்டுல இருக்கார். ட்ரீட்மெண்ட் நடந்துகிட்டு இருக்கு,"  என்றார் படபடப்புடன்.

மீண்டும் வெளியே வந்தோம். நோயாளிகள் தண்ணீரை தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். குடிநீர் என்ற எழுத்துகளுடன் இருந்த வாட்டர் டேங்குகளை காட்டினோம். அதுல தண்ணீ எல்லாம் இருக்காது தம்பி எனச்சொல்லி விட்டு சென்றனர். ஆம் ஒரு டேங்கில் கூட தண்ணீர் வரவில்லை. அமர்ந்து சாப்பிட இடமில்லை. குடலை புரட்டும் நாற்றத்தில் சைக்கிள் ஸ்டேண்டிலும், மரத்தடியிலும் அமர்ந்து மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். மிகுந்த மன உளைச்சலுடனே வெளியே வந்தோம்.

பொதுக்கூட்டங்களிலேயே பொதுமக்களிடத்திலிருந்து வெகுதூரத்தில் மேடை அமைத்து பேசும் முதல்வர்  இதுபோன்ற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்வாரா என்ன.?

குறிப்பு : உங்களில் பலர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருப்பீர்கள். உங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அனுபவங்கள் எப்படியிருந்தது..? என்பதை நீங்கள் கமென்ட்டில் பதியலாம்.

- எம்.புண்ணியமூர்த்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close