Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சித் தேர்தலில் இந்த கூட்டணிகள் இடையேதான் போட்டி...!



மிழக சட்டமன்றத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிரடிக் கூட்டணி மாற்றங்கள் ஏதும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் மோதும் கூட்டணிகள் இவைதான்...


அ.தி.மு.க அதிரடி


ஆளும் கட்சி என்ற அந்தஸ்துடன் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க. சட்டப்பேரவைத் தேர்தலின் போதே கூட்டணி குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாத அ.தி.மு.க உள்ளாட்சித் தேர்தலையும் தனி வழியில் சந்திக்கிறது.  உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூட்டுடன், அ.தி.மு.க சார்பில்  அனைத்து மாநகராட்சிகளிலும் கவுன்சிலர்  வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அடுத்தடுத்து பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.


தொடரும் கூட்டணி


சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் மீது தி.மு.க-வுக்கு ஒரு வருத்தம் இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டதற்கு தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தி கிளம்பியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தி.மு.க-வே வேட்பாளர்களை நிறுத்தி இருக்க வேண்டும் என்ற கருத்தும் தி.மு.க நிர்வாகிகளிடத்தில் இருந்து வந்தது. எனவே உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இருக்காது என்று யூகங்கள் இருந்தன. ஆனால், உன்னை விட்டால் எனக்கு வேறு வழியில்லை என்று தி.மு.க-வும், காங்கிரஸ் கட்சியும் பரஸ்பரம் உணர்ந்திருப்பதால்  உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 10 சதவிகித உள்ளாட்சி இடங்களை தி.மு.க ஒதுக்கியிருக்கிறது. இதற்கு சில இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை. காங்கிரஸ் தவிர தி.மு.க கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவையும் இடம் பெற்று இருக்கின்றன.

 


மக்களுடன் கூட்டணி


சட்டப்பேரவைத் தேர்தலின் போது தி.மு.க கூட்டணியில் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க, கடைசி நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியில் ஐக்கியமானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் கட்சியை விட்டு வரிசைகட்டி வெளியேறினர். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், அடுத்து என்ன செய்வது என பல கட்ட ஆலோசனைகளை விஜயகாந்த் மேற்கொண்டார்.  உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி இடுவது என விஜயகாந்த் முடிவு எடுத்திருக்கிறார். இது குறித்து தே.மு.தி.க வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். "சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் கூறியதை கேட்காமல் தன் சுயமுடிவில்தான் கேப்டன் கூட்டணி அமைத்தார். அதன் விளைவாக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் தே.மு.தி.க பெரும் தோல்வியைத் தழுவியது. உள்ளாட்சித் தேர்தலில் இன்னொரு தோல்வியை தாங்க முடியாது என கேப்டனிடம் தெரிவித்தோம். கட்சியிலிருந்து பலர் வேறு கட்சிகளுக்கும் தாவி வருகின்றனர். நிர்வாகிகளின் முடிவுப்படி கூட்டணி அமைக்க வேண்டும் அல்லது தனியாகப் போட்டியிட வேண்டும் என்று கூறினோம். அதன்படி இப்போது தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்சி முடிவின்படி பலர் ஆர்வத்துடன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்" என்றனர்.

 

தோற்றாலும் கெத்து


சட்டப்பேரவைத் தேர்தலில்  மக்கள் நலக்கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தபோதிலும், அதில் உள்ள கட்சிகளான ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் ஒற்றுமையுடன் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு செய்திருக்கிறார்கள். கூட்டணியில் இருந்து விஜயகாந்த், வாசன் இருவரும் வெளியேறிய போதும் தங்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்லி வருகின்றனர். அடுத்ததாக திருமாவளவனும் வெளியேறி  விடுவார் என்று ஒரு தகவல் வெளியானது. ஆனால், அதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வட்டாரம் மறுத்திருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மக்கள் நலக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றாலும் கெத்து காட்டுகிறார்கள் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்.


பரிசோதனைக் களம்


சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசி நேரம் வரை அ.தி.மு.க-வில் அணி சேர முயற்சித்து விட்டு, திடீரென மக்கள் நலக் கூட்டணியில் கைகோத்தார் ஜி.கே.வாசன். மக்கள் நலக் கூட்டணி படுதோல்வி அடைந்ததால், கூட்டணியில் இருந்து முதல் ஆளாக வெளியே வந்தார் வாசன். உள்ளாட்சித் தேர்தலில் பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வாசனுக்கு கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால், தி.மு.க-வுடன் கூட்டணி சேருவதற்காக மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். என்ன நடந்ததோ திடீரென தனியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார். வேட்பாளர்கள் லிஸ்டையும் அறிவித்து விட்டார்.  தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்க உள்ளாட்சித் தேர்தல் ஒரு பரிசோதனைக் களமாக இருக்கும் என்கிறார்கள் த.மா.கா நிர்வாகிகள்.


வலுவான வேட்பாளர்கள்


தனி வழியில் உறுதியாக இருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், உள்ளாட்சித் தேர்தலிலும் தனது உறுதியை முன்னெடுத்துச் செல்கிறார். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறி உள்ளனர். வட மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான இடங்களை பிடித்து விட வேண்டும் என்பதில் அன்புமணி ராமதாஸ் தீவிரமாக இருக்கிறாராம். எனவே, வலுவான வேட்பாளர்களை நிறுத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

 

இளைஞர்களுக்கு வாய்ப்பு


சட்டப்பேரவைத் தேர்தலில் முதன் முதலாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது நாம் தமிழர் கட்சி. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் சைலன்ட் ஆக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனை செய்து வருகிறாராம். தனித்துப் போட்டியிடுவதில் தீவிரமாக இருக்கிறாராம். அ.தி.மு.க., தி.மு.க இரண்டு கட்சிகளில் இருந்தும் உள்ளாட்சி அமைப்புகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் சீமான் உறுதியாக இருக்கிறார். குறிப்பிட்ட எண்ணிக்கையில் இளைஞர்களை கவுன்சிலர்கள் ஆக்க வேண்டும் என்பதை நோக்கி சீமான் காய்களை நகர்த்தி வருகிறார்.


உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் முடிவுகள் எப்போதுமே ஆளும் கட்சிக்குச் சாதகமாகத்தான் இருந்து வருகிறது. எனவே எதிர்கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவே போட்டியிடுகின்றன.


-கே.பாலசுப்பிரமணி, ஐஷ்வர்யா     

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ