Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா..? 1991-ஐ பின்பற்றுமா அதிமுக அரசு?

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வரலாறு ஏற்கனவே நடந்திருக்கிறது. 1991-ல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட... அந்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரிகள் ஆட்சியே நடந்தது.  இப்போது அதே போன்றதொரு சூழல். என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?.

மக்களாட்சியில் வேர்களாகவும், விழுதுகளாகவும் இருப்பது உள்ளாட்சி அமைப்புகள் தான் என்பார்கள். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தமிழகத்தில் முறையாக நடந்ததில்லை. ஒன்று தேர்தலே நடக்காது அல்லது தேர்தல் முறையாக நடக்காது என்பது தான் தமிழகத்தின் கடந்த கால வரலாறு.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 10 ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றபோது,  'தாழ்த்தப்பட்டோர் ஒருவர் கூட இல்லாத ஒரு வார்டை தாழ்த்தப்பட்டோர் தொகுதி என அறிவித்திருக்கிறார்கள்' எனச்சொல்லி தேர்தலை தள்ளி வைக்க கோரியது திமுக. அதன்படி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தவே இல்லை. 1991 முதல் 1996ம் ஆண்டு வரை அதிகாரிகளின் ஆட்சி தான் தொடர்ந்தது.

அதன்பிறகு 1996 முதல் திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டாலும், ஆளுங்கட்சியின் தலையீட்டிலேயே தேர்தல் நடந்து வந்தது. தேர்தலின்போது எதிர்கட்சிகள் ஆளுங்கட்சி மீது புகார் தெரிவிப்பதும், வழக்கு தொடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக அதிமுக ஆட்சி காலங்களில் 1991, 2011-ம் ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தல், தற்போது நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றுக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

1991-ல் தொடர்ந்த வழக்கில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, பின்னர் நடக்காமல் போனது. 2011-ல் போடப்பட்ட வழக்கில் "முன்கூட்டியே இதுகுறித்து அரசிடம் ஏன் முறையிடவில்லை" என கேட்ட நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. இதனாலோ என்னவோ... இந்த முறை சில மாதங்களுக்கு முன்னரே இதுதொடர்பாக பேசத்துவங்கியிருந்தது திமுக. ஆளுநராக ரோசய்யா இருந்தபோது, அதாவது சில மாதங்களுக்கு முன்னரே உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாகத்தான், உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தவேண்டும் என்றும், தேர்தல் பணிக்கு மத்திய அரசு ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும்... அதுவரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலும், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையாக இட ஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் நடத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.

தேர்தலை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி. டிசம்பர் 30-ம் தேதிக்குள் குளறுபடிகளை சரிசெய்து தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மேல்முறையீடு செய்யலாம்... அல்லது நீதிமன்றம் சொன்னபடி குழப்பங்களை தீர்த்து விட்டு தேர்தலை நடத்தலாம்... இன்னுமொரு வாய்ப்பும் இருக்கிறது அது 1991-ம் ஆண்டை போல தேர்தலையே நடத்தாமல், உள்ளாட்சி நிர்வாகத்தை அதிகாரிகள் கையில் விட்டு விடுவது. என்ன செய்யப்போகிறது அரசு?


- ச.ஜெ.ரவி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close