Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நம் எல்லையில் போர் வெடித்தால் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கும் தெரியுமா...?

ம்மு-காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீதான தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 19 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்தது. தீவிரவாதத்தை தங்கள் நாட்டின் கொள்கையாகக் கொண்டுள்ள பாகிஸ்தானை  உலகநாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார். கடந்த மாதம் 29-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தியதும், இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

பதான்கோட் விமான படைத்தளம், உரி  ராணுவ முகாம் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் எழுந்துள்ள பதற்றத்தால், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல் செயல்பாடுகளால், ஆப்கானிஸ்தானில் இருந்து, உற்பத்திப் பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கட்டவிழ்த்து விடும் பயங்கரவாதம், வன்முறைச் சம்பவங்களால், ஆப்கானிஸ்தானின்   முதலீடு வரத்து, வளர்ச்சித் திட்டங்கள் , உரிய நேரத்தில் உதவி கிடைத்தல்  போன்றவை பாதிப்புக்கு உள்ளாகின்றன.ஆப்கானிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதச் சம்பவங்களுக்கு காரணம் பாகிஸ்தானே என்று இந்தியா நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ஆசிய மண்டலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக திகழ்வது பாகிஸ்தான் தான் என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானின் தாலிபான் தீவிரவாதிகளுக்கு இஸ்லாபாத்தில் உள்ள பாதுகாப்புப் படையினர் உதவி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் தொடர்பான பிரெஸ்ஸல்ஸ் மாநாட்டுக்கு முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் , இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.  ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்த உலக நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

பிரெஸ்ஸல்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு தலைமை வகிக்கும் அக்பர் , "ஆப்கானிஸ்தானுக்கு உள்கட்டமைப்பு, தகவல்தொடர்பு, மண்டல அளவிலான சந்தை தொடர்புகள் அவசியம். ஆப்கானிஸ்தானின்  லாபகரமான சந்தை பெரிதும் இந்தியாவிலேயே உள்ளது. ஆப்கானிஸ்தானின் உற்பத்திப் பொருட்கள் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி வழியாகவே இந்தியாவுக்கு கொண்டுவரப்படும். தற்போது அட்டாரி எல்லையில் பதற்றம் நிலவுவதால், ஆப்கானிஸ்தான் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மிகப்பெரிய ஆசிய மண்டலத்தில் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் இதனால் பாதிக்கப்படுகிறது. ”ஆப்கானிஸ்தானில் அணைகள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இந்தியா நிறைவேற்றி முடித்துள்ளது. சபாஹர் துறைமுகம் அமைப்பதற்காக, அண்மையில் இந்தியா-ஈரான்-ஆப்கானிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இது ஆப்கானிஸ்தானின் அபரிமித பொருளாதார வாய்ப்புகளுக்கு வித்திடும்.அதே நேரத்தில், அதிக அளவில் கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாதச் செயல்களால், திட்டங்களை செயல்படுத்துவது, முதலீடுகளை பெறுவது உள்ளிட்டவை பாதிப்புக்கு உள்ளாகும். ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மையையும், மேம்பாட்டையும் உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்" என்று எம்.ஜே. அக்பர் கேட்டுக்கொண்டார். 

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாஜ் அஜிஸ்,   "பாகிஸ்தானை பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நாடாக இந்தியா பிரசாரம் செய்கிறது. காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டுகோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா நடந்து கொள்கிறது.  இதுபோன்ற செயலால், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அதிக படைகளை நிறுத்தும் பாகிஸ்தான் ராணுவத்தின் திறன் பாதிப்படைகிறது" என்று குற்றம்சாட்டினார் .

காஷ்மீர் பிரச்னையை  எழுப்பிய பாகிஸ்தான் அமைச்சர், "எல்லைப் பகுதியில் ராணுவப் படைகளை  இந்தியா குவிப்பதாலும், அதிநவீன ஆயுதங்களை கொண்டு வருவதாலும் நாங்களும் பதிலடித் தாக்குதல் நடத்தத் தயாராக வேண்டியுள்ளது. பாகிஸ்தான்  ராணுவப் படைகளை நிறுத்தவும் எங்களை இந்தியா  தூண்டுகிறது" என்றார்.

எல்லையில் பதற்றம்  அதிகரித்துக் கொண்டே செல்வது, ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்த வழிவகுக்கும்.

- சி.வெங்கட சேது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ