Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மெயின் களவாணியே அவுங்கதான்'..! ஏ.டி.எம் கொள்ளையில் திடீர் திருப்பம்

 

ஏ.டி.எம் கொள்ளையில் தேடப்பட்டு வந்த இசக்கிபாண்டியன் தலைமறைவாக  இருந்த இடத்தை போலீஸார் கண்டுப்பிடித்தும் அவரை கோட்டை விட்டுள்ளனர். இதனால் இசக்கிபாண்டியன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை திருவேற்காடு அருகே உள்ள வேலப்பன்சாவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.டி.எம் மையத்துக்கு 1.18 கோடி ரூபாய் கொண்டு வந்த கார் பணத்துடன் மாயமானது. இதுகுறித்து விசாரித்தபோது, பணத்தை காரின் டிரைவர் இசக்கிபாண்டியன் கொள்ளையடித்ததாக திருவேற்காடு போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, இசக்கிபாண்டியனை போலீஸார் தேடி வந்தனர். தனிப்படை போலீஸார் இசக்கிபாண்டியனின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நெல்லையிலும் தேடுதல் வேட்டை நடந்தது. 
இந்நிலையில் இசக்கிபாண்டியன், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். அவரை வரும் 13-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி முருகன் உத்தரவிட்டார். அதன்பேரில் பாளையங்கோட்டை சிறையில் இசக்கிபாண்டியன் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து இசக்கிபாண்டியனின் வழக்கறிஞர் துரை ராஜ் கூறுகையில், "வரும் 14-ம் தேதி இசக்கிபாண்டியனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் தேவைகருதி அவரை பூந்தமல்லி எல்லைக்குட்பட்ட சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்" என்றார்.

இதற்கிடையில் இசக்கிபாண்டியன், நீதிமன்றத்தில் சரண் அடைந்த தகவல் குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "தூத்துக்குடிக்கு சென்ற தனிப்படை போலீஸார், இசக்கிபாண்டியனின் மனைவி பேச்சித்தாய் மற்றும் இசக்கிபாண்டியனின் அப்பா செல்லத்துரை ஆகியோரிடம் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் அவர்கள் இசக்கிபாண்டியன் குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை. இருப்பினும் போலீஸாரின் கவனிப்பில் இசக்கிபாண்டியன் இருக்கும் இடம் குறித்த தகவலை அவர்கள் உளறியதாக தெரிகிறது. இசக்கிபாண்டியன் தலைமறைவாக இருந்த இடம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் அவரை கைது செய்ய அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் இந்த தகவல் இசக்கிபாண்டியனுக்கு தெரியவர அங்கிருந்து அவர் எஸ்கேப் ஆகி விட்டார். இதனால் தனிப்படை போலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர். இந்த தகவலை சென்னையில் உள்ள போலீஸ் உயரதிகாரிகளுக்கு போனில் தெரிவித்தனர். அப்போது, போலீஸ் உயரதிகாரி, 'எப்படியாவது இசக்கிபாண்டியனை கைது செய்துவிட்டு சென்னைக்கு வாருங்கள்' என்று தெரிவித்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த தனிப்படை போலீஸார், மீண்டும் இசக்கிபாண்டியனின் மனைவி, அப்பாவிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

போலீஸ் விசாரணை வளையத்துக்குள் மனைவியும், அப்பாவும் இருப்பதை அறிந்த இசக்கிபாண்டியன், வழக்கறிஞர் மூலம் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைய முடிவு செய்தார். இதற்காக அவர், தேர்வு செய்தது ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம். போலீஸுக்குத் தெரியாமல் வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதன்பிறகே தனிப்படை போலீஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. உடனடியாக தனிப்படை போலீஸார் ஸ்ரீவைகுண்டத்துக்கு சென்றனர். ஆனால் அதற்குள் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  இதனால் அவரை சென்னைக்கு அழைத்து வந்து காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்" என்றனர்.

இதற்கிடையில்  இசக்கிபாண்டி, 'இந்த கொள்ளை வழக்குக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது போலீஸ் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளையில் மெயின் களவாணி யார் என்ற கேள்வி போலீஸாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "இசக்கிபாண்டியனை கைது செய்ய தனிப்படை போலீஸார் முடிவு செய்து அவர் தலைமறைவாக இருந்த இடத்துக்கு சென்றனர். அப்போது, போனில் அவருடன் போலீஸார் பேசியுள்ளனர். இதன்பிறகே இசக்கிபாண்டியன் தலைமறைவாகி விட்டார். குற்றவாளி இருக்கும் இடம் தெரிந்தும் போலீஸாரின் செயலால் அவரை தப்பவிட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. கொள்ளைப் போன பணம் எங்கே இருக்கிறது என்றும் விசாரணை நடக்கிறது" என்றார்.

இசக்கிபாண்டியனின் நண்பரான குமாரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 7 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இசக்கிபாண்டியன் பணத்தை பலருக்கு பிரித்துக் கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இசக்கிபாண்டியன் யாருக்கெல்லாம் போனில் பேசி இருக்கிறார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்களின் விவரங்களை சேகரித்து அந்த நபர்களிடமும் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இசக்கிபாண்டியன், இந்த சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்பே திட்டமிட்டு காரியத்தை செயல்படுத்தியுள்ளார் என்பது இப்போதுதான் போலீசுக்கு தெரியவந்துள்ளது. இதனால் இசக்கிபாண்டியனுக்கு இந்த திட்டத்தை போட்டுக் கொடுத்தது வேறுயாரும் உள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்