Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில் நிலையத்தில் 'கட்டபொம்மன்' வசன கலகம்! ரயில்வே சங்கம் கலகல

தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓட்டப்பட்டுள்ள நோட்டீஸில் பராசக்தி பட வசனம் போல வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது இரண்டு ரயில்வே யூனியன்களுக்கு இடையே நடக்கும் மோதலின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

அந்த நோட்டீஸின் சாரம்சம் இதுதான்!

ஏமாறாதீர்! ஏமாறாதீர் என்ற தலைப்புடன் அன்பார்ந்த தொழிலாள சொந்தங்களே என தொடங்குகிறது நோட்டீஸ் வரிகள். மத்திய அரசு, ரயில்வே ஊழியர்களுக்கு 7-வது ஊதிய கமிஷனில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 என நிர்ணயித்துள்ளது. ஆனால் ஒரு சங்கம் குறைந்தபட்ச ஊதியத்தை 26,000 ரூபாயாக மாற்றுவோம்,  இல்லையெனில் ரயில் சக்கரம் சூழலாது, காலவரையற்ற வேலைநிறுத்தம் என்று பித்தலாட்ட நாடகமாடிவிட்டு 10 பைசா கூட கூடுதலாக பெறாமல் வேலை நிறுத்தத்துக்கு 11 நாள் முன்னரே அந்தர்பல்டி அடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த சங்கத்துக்கு 4 நாள் சம்பளம் 2000 ரூபாய் ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அடுத்து பராசக்தி பட வசனத்தைப் போல வரிகள் நோட்டீஸில் இடம் பெற்றுள்ளன.

'வெயிலும், மழையிலும் ஒதுங்க ஓய்வறை இல்லாமல் எங்களுடன் கஷ்டப்பட்டாயா... 3 பகல், 3 இரவு என்று ஓய்வில்லாமல், உறக்கமில்லாமல் 72 மணி நேர பணி பார்த்தாயா.... ஓய்வெடுக்கவும், உடை மாற்றவும், இயற்கை உபாதைக்கு செல்ல கழிப்பறை இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறாயா... மெக்கானிக்கல் பிரிவில் எங்களுடன் கோச்சுகளை சுத்தம் செய்தாயா... பிட் லைனில் உள்ள கழிவுகளை கையுறை இல்லாமல் சுத்தம் செய்து உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு இருக்கிறாயா... வெட்கங்கெட்டவர்களே... உங்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் நன்கொடை. பெண்கள் உடை மாற்றும் அறை இல்லாமலும் இயற்கை உபாதைக்கு செல்ல கழிப்பறை இல்லாத நிலையில் அதை கட்டித்தர நிர்வாகத்திடம் போராடினாயா... மானங்கெட்டவர்களே உங்களுக்கு ஏன் தர வேண்டும் கிஸ்தி (நன்கொடை) என்ற வரிகள் நோட்டீஸில் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து இந்திய ரயில்வே எஸ்.சி., எஸ்.டி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஏ.ஞானசேகரனிடம் கேட்டபோது, "ரயில்வேயில் அங்கீகாரம் பெற்ற சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ, தொழிலாளர்களிடமிருந்து (சங்க உறுப்பினர்கள்) 2000 ரூபாயை நன்கொடையாக கேட்டுள்ளது. இதைக் கொடுக்க தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். தொழிலாளர்களின் நலன்கருதியே சங்கம் செயல்பட வேண்டும். எங்கள் சங்க உறுப்பினர்களிடமும் நன்கொடை பெறப்படுவதுண்டு. ஆனால் அவை குறைந்தபட்சத் தொகை. ஆனால் ஆயிரக்கணக்கில் இப்படி வசூலிப்பதை எதிர்த்துதான் இந்த நோட்டீஸை ஓட்டியுள்ளோம் என்றவரிடம், இதுபோல குறிப்பிட்ட ஒரு சங்கத்தை விமர்சனம் செய்து நோட்டீஸ் ஓட்டியுள்ளீர்களே என்று கேட்டதற்கு, ஏற்கெனவே இதுபோல பல நோட்டீஸ்களை ஓட்டி இருக்கிறோம். அவற்றுக்கெல்லாம் அந்த சங்கத்தினரிடமிருந்து எதிர்ப்பு வந்துள்ளது. அதற்கு எங்கள் தரப்பிலிருந்தும் பதிலடி கொடுத்துள்ளோம்" என்றார். 

இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.யூ சங்க நிர்வாகிகள் கூறுகையில், "தேவையில்லாமல் எங்க சங்கத்தை இழுத்துள்ளனர். இதுவே அவர்களுக்கு வேலையாக உள்ளது. எங்கள் சங்கத்தை விமர்சித்து அவர்கள் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். ரயில்வே தொழிலாளர்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்னைகள் உள்ளன. அதில் தலையிடாமல் எங்கள் சங்கத்தை விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதியுள்ளது" என்றனர் ஆதங்கத்துடன்.

நமது நிருபர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ