Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போலோ வளர்ந்த கதையும், ஜெயலலிதா மருத்துவச் செலவும்...!

"ரசாங்க ஹாஸ்பிடல் வேண்டாம், என்ன செலவானாலும் சரி, பெஸ்ட் டிரீட்மென்ட் வேணும்ன்னு வர்றவங்களுக்காக வெளிநாட்டுல இருந்து விலை உயர்ந்த கருவிகள் வரவழைக்கப் போறோம். டாக்டர்கள் கூட வெளிநாட்டுல இருந்து வரப் போறாங்க. இதன் மூலமா வெளிநாட்டுப் பயணக் கட்டணம்,நேர விரயம்,மொழிப் பிரச்னை ஏதும் இல்லாம சிகிச்சையைக் குறைந்த செலவுல எடுக்கலாம் " 33 ஆண்டுகளுக்கு முன்பு அப்போலோ ஆரம்பிக்கப்பட்ட போது பிரதாப் ரெட்டி சொன்ன வார்த்தைகள்தான் இவை.

ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாகக் கொண்ட ரெட்டி படித்தது சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில். 1983-ம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை இன்று இந்தியா முழுவதிலும் 69 மருத்துவமனைகள் என கிளைகளை பரப்பி இருப்பது, ரெட்டி வாழ்க்கையின் நெடும் பயணத்தின் வெற்றி தான் என்கிறார்கள் மருத்துவ உலகில்.

தொலைநோக்கு

நாள் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்த பிரதாப் ரெட்டி என்கிற அந்த இளைஞன், கார்ப்பரேட் மருத்துவமனை தொடங்கப் போவதாக 33 வருடத்துக்கு முன்பு கூறியதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் 150 படுக்கையுடன் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை இன்று 12 நாடுகளில் 69 மருத்துவமனைகளையும் 9,500 படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவ சாம்ராஜ்யமாக வளர்ந்து உள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சிகிச்சையை அப்போலோ அளித்து வருகிறது. 60 ஆயிரம் செவிலியர்கள் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் என தற்போதைய வளர்ச்சி எல்லாமே 'மெடிக்கல் மிராக்கிள்' பிரம்மாண்டம் தான். வருடத்திற்கு 3லட்சத்து 70 ஆயிரம் உள்நோயாளிகளும் 33 லட்சம் வெளிநோயாளிகளும் அப்போலோ வந்து செல்கின்றனர். இந்த வருடத்தில் மட்டும் 5,900 மூட்டு ,இடுப்பு அறுவை சிகிச்சைகளும், 14 ஆயிரம் நரம்பு அறுவை சிகிச்சையும், 400 கல்லீரல் மாற்றும், 1,100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளன. 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 100 கோடி அதிகம். நாள் ஒன்றுக்கு எல்லா செலவுகளும் போக 2 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது அப்போலோ.

பிரபலங்களால் பிரபலம்

1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்போலோ பிரபலம் ஆனதே 1984-ல்தான்.  அப்போதுதான் எம் .ஜி .ஆர். சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்த 10 நாட்களும் அப்போலோ ஏரியாவை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். எம் .ஜி .ஆர் உடல் நிலை குறித்த அறிக்கைகளை அப்போது உடனுக்குடன் வெளியிட்டது அப்போலோ. அதன் பிறகு கடந்த 2002-ம் ஆண்டு உடல்நல குறைவால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முரசொலி மாறனை பார்க்க, திமுக தலைவர் கருணாநிதி தினமும் அப்போலோ வந்தார். அப்போதும் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது அப்போலோ. சென்ற 2011-ம் ஆண்டு தொடர் பிரசாரத்தால் கருணாநிதியும் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். ரஜினியும் உதடு சிகிச்சைக்காக அப்போலோ வந்துள்ளார். இப்படி அரசியல், சினிமா நட்சத்திரங்களின் மருத்துவமனையாகத் திகழ்கிறது அப்போலோ.

எல்லாமே காசு தான்..... 

இந்தியாவின் அத்தனை மெட்ரோ நகரங்களிலும் அப்போலோ மருத்துவமனை உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மதுரை,கோவை, காரைக்குடி என இரண்டாம் நிலை நகரங்களிலும் தனது கிளைகளை தொடங்கியுள்ளது.33 வருடத்திற்கு முன்பு ரெட்டி சொன்னது போல், அப்போலோ இப்போது பணக்காரர்களின் மருத்துவமனை தான். நட்சத்திர ஹோட்டல்களில் வசூலிக்கப்படும் அறை வாடகையை விட அப்போலோ ரூம் வாடகை அதிகம். மேற்கு உலக நாடுகளில், மருத்துவமனைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் இயக்குகின்றன. இந்தியாவில் அப்படி ஒரு கார்ப்ரேட் மருத்துவமனை இருக்குமானால் அது அப்போலோ மட்டுமே. இங்கு நோயாளிகளுக்கான கட்டணங்கள் எல்லாமே பேக்கேஜ் முறையில் தான் வசூலிக்கப்படுகிறது. சாதாரண நோய்க்கே லட்சங்கள் இல்லாமல் நீங்கள் அப்போலோவிற்குள் நுழைய முடியாது. 3,500 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் வரை அப்போலோவில் அறைகள் உள்ளன என்பது கூடுதல் தகவல்.

ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு

செப்டம்பர் 22-ம் தேதி உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 15 நாட்கள் ஆகின்றன. அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் கால் பதித்த ஒவ்வொருவரின் மனதிலும், முதல்வர் எப்படி இருக்கிறார் என்ற கேள்வியோடு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆகிருக்கும் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுவதைத் தவிர்க்க இயலாது. அதுபற்றிய ஒரு கணிப்பு..... 

முதல்வர் ஜெயலலிதா தங்கியுள்ள அப்போலோ மருத்துவமனையில், இரண்டாவது தளத்தில் மொத்தம் 30 அறைகள் உள்ளன. முதல் 2 நாட்களுக்கு மற்ற நோயாளிகளும் அதில் இருந்தனர். அதன் பின்னர் அங்கு இருந்த அனைவரும் மாற்றப்பட்டு முதல்வர் மட்டுமே அந்த தளத்தில் இருக்கிறார்.அவருக்கென தனியாக அறை ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையின் அறை வாடகை பட்டியல்படி பார்த்தால், உயர் ரக அறையான சூட் ரூமின் ஒரு நாள் வாடகை 26,300 ரூபாய். இரண்டு சூட் ரூம்களை இணைத்து புது அறையாக மாற்றப்பட்டு இருந்தால் ஒருநாளைக்கு முதல்வர் அறைக்கு மட்டும் 52 ஆயிரத்து 600 ரூபாய் வாடகையாக இருக்கும். முதல்வர் தங்கி இருக்கும் அறையில் அதிகபட்ச வசதிகள் செய்யப்பட்டு இருப்பதால் அந்த அறையின் ஒரு நாள் கட்டணம் லட்சத்தை எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.  இதுபோக அந்த தளத்தில் உள்ள மற்ற 28 அறைகளில் 8 அறைகள் பொது வார்டாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.பொது வார்டுக்கு, ரூம் ஒன்றுக்கு 3,500 ல் இருந்து 5,200 ரூபாய் வரை நாள் வாடகை வசூலிக்கப்படுகிறது. முன்பு எம்.ஜி.ஆர் தங்கி சிகிச்சை பெற்றபோது, அந்த அறையின் கட்டணம் ரூ.525 தான்.

அப்போலோ அறை வாடகை விபரம்

அடுத்த 10 அறைகள் தனி வார்டுகள் ஆகும். அறை. ஒன்றுக்கு ரூ.8,500-ல் இருந்து ரூ.8,800 வரை உள்ளது. அதன்படி 10 நாட்களுக்கு ரூ. 85 ஆயிரம் ஆகிறது. மீதம் உள்ள அறைகள் மூன்று வகை சூட் ரூம்கள் உள்ளன. அதன் தொடக்க வாடகை 12,500 ரூபாயில் இருந்து 26,300 வரை உள்ளது. மொத்தம் முதல்வர் தங்கிய, தங்காத என அந்த தளத்துக்கான ஒரு நாள் வாடகை மட்டும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 600 ரூபாய். 12 நாட்களுக்கு 38 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் வரை ஆகும் என்கின்றனர் .

 

வெளிநாடுகளில் இருந்து வந்த மருத்துவர்கள் 

இதற்கு முன்பு சிகிச்சை அளிக்க வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்கள், ஒரு முறை அப்போலோ வந்து செல்ல 50 லட்ச ரூபாய் வரை வாங்கியதாகக் கூறுகின்றனர்.  இங்கேயே தங்கி சிகிச்சை அளித்தால் அந்த தொகை மேலும் கூடும். முதல்வர் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவர்கள் இதுவரை 2 முறை வந்து இருக்கிறார்கள் . வெளிநாடுகளில் இருந்து அவர்கள் விலையுர்ந்த மருந்துகளையும் கொண்டு வந்ததாக கூறுகின்றனர். லண்டன் மருத்துவருக்கு முன்பு புகழ் பெற்ற இந்திய மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று வந்து சிகிச்சை அளித்து விட்டு சென்றது. அதேபோல் வெளிநாட்டு மருத்துவர்கள், சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்க, கன்சல்டிங் தொகையாக நிமிடத்திற்கு லட்சங்களில் வாங்குவது வழக்கம். முதல்வரின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்  வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை பெறபட்டது.

ஆறாம் தேதி அப்போலோ வெளியிட்டு உள்ள அறிக்கையில், தற்போது சிகிச்சை அளித்து வரும் இதய, சுவாச ,சர்க்கரை நோய் நிபுணர்கள். சிகிச்சை அளித்து வருவதாக கூறியுள்ளது .இவர்கள் அனைவருமே உலகில் முதல் நிலை மருத்துவர்கள். இவர்களின் கட்டணங்கள் எல்லாம் மணிக்கு இவ்வளவு என்று தான் வாங்கப்படும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

 

-  பிரம்மா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close