Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி வாரியம் காலி..! கர்நாடகாவின் கைப்பாவையா நரேந்திர மோடி?!

அய்யா மாவீரன் நரேந்திர மோடி அவர்களே...

உங்க வீரம், தீரம், பராக்கிரமம் எல்லாம் தெரிஞ்சிருந்தும் இந்த பாகிஸ்தான்காரன் வாலாட்டுனா சும்மாவா விடமுடியும். 'தண்ணீரும் ரத்தமும் ஒரேநேரத்தில் சிந்து நதியில் ஓடமுடியாது'னு சொல்லி, பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை நிமிஷத்துல தூக்கி எறிஞ்சு, உலகத்தையே திரும்பிப் பார்க்க வெச்சுட்டீங்க. பின்னே, காஷ்மீர்ல இந்திய ராணுவத்து மேல குண்டுபோட்டு பத்து, இருபது வீரர்களை ஒருபக்கம் கொன்னுபோட்டுக்கிட்டே... மறுபக்கம் தண்ணிக்காக... வெண்ணெய்க்காக பேச்சுவார்த்தைனு வந்தா, கொஞ்சி, குலாவிக்கிட்டா இருக்க முடியும்? சும்மா நெத்தியடி அடிச்சுட்டீங்க மோடிஜி. இதுக்காக உங்கள உச்சி மோந்து பாராட்டிக் குவிக்கலாம்னு கிடையா கிடந்தேன். ஆனா, காவிரி விஷயத்துல நீங்க போட்டுக்கிட்டிருக்கிற போங்கு ஆட்டம்... மொத்தமா கவுத்துடுச்சே!

சுப்ரீம் கோர்ட்டே சொல்லியும் காதுல போட்டுக்கல
காவிரி தண்ணிக்காக கர்நாடக அரசுகிட்ட நாங்க கத்தாத நாளில்ல. சுப்ரீம் கோர்ட்டே சொல்லியும் காதுல போட்டுக்கல கர்நாடகா. உங்க பாஷையில சொன்னா, காவிரியில ரத்தத்தையே ஓடவிட்டாங்க. பஸ்ஸுகளை கொளுத்துனாங்க. தமிழக லாரிக்காரங்கள அடிச்சு உதைச்சாங்க. இது எதுக்குமே நீங்க வாயைத் தொறக்கலையே. ஏன், அப்ப மட்டும் உங்க வாய் வடை சாப்பிட்டுகிட்டு இருந்துச்சோ. ஒட்டுமொத்த இந்தியாவோட பிரதமரா... பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த நீங்க? அதே ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதமரா செயல்படாம, கர்நாடகாவுக்கு கையாள் கணக்கா செயல்பட ஆரம்பிச்சுட்டீங்களே இது என்னங்க நியாயம்?

இந்தப் பிரச்னையில தமிழ்நாட்டுக்குத்தான் பாதிப்பு அதிகம். நாங்க, 'தண்ணி வரலையே'னு கண்ணீர் வடிச்சிட்டு இருக்கிற நிலையில... அவங்க பாட்டுக்கு ரத்தத்தை ஓடவிட்டாங்க காவிரியில. நீங்க என்னடான்னா... வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் நடக்குற யுத்தத்தை அமெரிக்க அதிபர் வேடிக்கை பார்க்கற மாதிரி பார்த்துட்டு, 'இரு தரப்பும் சமாதானமா இருக்கவேண்டும்'னு சந்திரா சாமியார் கணக்கா கையைத் தூக்கிக் காட்டிட்டு போயே போயிட்டீங்க. அடிபட்டுக் கிடக்கிறவனையும்... அடிச்சி உதைச்சவனையும் ஒண்ணுபோல பாவிச்ச உங்க 'உயர்ந்த மனசு' உலகத்துல வேற யாருக்குமே வராதுங்கய்யா.


'கர்நாடகாவுல சீக்கிரமே தேர்தல் வரப்போகுது. அதுல காவிக் கட்சியை ஆட்சிக் கட்டில்ல உட்கார வெச்சே தீரணும்கிறதுக்காக கங்கணம் கட்டிக்கிட்டு வேலை பார்க்கிறார் மோடி'னு பலரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. ஆனாலும் நான் நம்பலீங்க. 'கதர்ச்சட்டை போட்ட பிரதமருங்க பலபேர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்குத் துரோகம் பண்ணினாங்க. இவரு காவி உடை தரிச்ச பிரதமர்... ராமராஜ்யத்தைக் கனவு காண்ற பிரதமர்... நிச்சயமா, நேர்மையா நடந்துப்பார்'னு என்னைப் போலவே பலரும் உங்கள ரொம்பவே நம்பிக்கிட்டிருந்தோம். ஆனா, அதுல லாரி லாரியா மண் அள்ளி போட்டுட்டீங்களே மோடிஜி.

நீதிமன்றங்களை நம்பறதுதான் ஒரே தீர்வு


சரி, இந்தியாவுல ரொம்ப நாளா நீதியோட ஆட்சிதானே நடக்குது. நீதிமன்றங்களை நம்பறதுதான் ஒரே தீர்வுனு மக்கள் நினைக்க ஆரம்பிச்சு பல வருஷங்களாயிடுச்சே. அந்த நம்பிக்கையிலதான் உச்ச நீதிமன்றத்தை தெய்வமா நினைச்சுட்டிருந்தோம். தெய்வம் எங்கள கைவிடல. 'நடுவர் மன்ற தீர்ப்புப்படி பற்றாக்குறை காலத்துக்கான தண்ணீரை காவிரியில கர்நாடகா திறந்தே ஆகணும். நாலே நாள்ல காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைச்சே ஆகணும்'னு நெத்தியடியா உத்தரவு போட்டுச்சு உச்ச நீதிமன்றம்.
நம்ம வயித்துல பால் வார்த்திடுச்சி உச்ச நீதிமன்றம்னு நாங்கள்லாம் புளகாங்கிதப்பட்டுப்போனோம். மத்திய அரசாங்கத்தோட வக்கீல்களும், கோர்ட்ல எல்லாத்துக்கும் தலையாட்டி எங்கள புல்லரிக்க வெச்சாங்க. அடுத்தடுத்த நாள்லயே காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாநிலங்கள் சார்பா உறுப்பினர்களை நியமிக்கச் சொல்லி கடுதாசி வேற போட்டீங்க. சட்டுபுட்டுனு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மூணு மாநிலங்களும் உறுப்பினர்களை அறிவிச்சாங்க. ஆனா, கர்நாடகா மட்டும் அறிவிக்க முடியாதுனு பிடிவாதமா சொல்லுச்சு. அதேபோல தண்ணியை திறந்துவிட முடியாதுனும் சட்டசபையைக் கூட்டி தீர்மானமே போட்டுச்சு.

தட்டிக்கேட்பீங்கனு கனவுக் கோட்டை கட்டினோம்


எல்லோரும் பாரத மாதாவின் புதல்வர்கள்... இது ஹிந்துதேசம்... இங்கே பிரிவினைக்கு இடமே இல்லைனு எப்பப் பார்த்தாலும முழங்கித் தீர்த்துக்கிட்டிருக்கு உங்க கட்சி. இப்படிப்பட்ட கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி, 'இந்தியாவுல இப்படி ஒரு மாநில அரசா?'னு கொஞ்சமாச்சும் தட்டிக்கேட்பீங்கனு கனவுக் கோட்டை கட்டினோம். ஆனா, சட்டப்படி அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தோட தீர்ப்பையும் மதிக்காம, அதை மதிக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் சொன்னதையும் கேட்காம, கிட்டத்தட்ட இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கே வேட்டு வைக்கிற அளவுக்கு நடந்துக்கிட்டிருக்கிற கர்நாடாகவுக்கு எதிரா ஒரு வார்த்தையைக் கூட நீங்க எடுத்துவிடல. இந்திரா காந்தி காலம் தொடங்கி, மன்மோகன் சிங் காலம் வரைக்கும் இதே நிலைதான் எங்களுக்கு. இப்ப கதரும் ஒண்ணுதான்... காவியும் ஒண்ணுதான்கிறத சரியா நிரூபிச்சீட்டிங்க.


'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது; அமைக்கச் சொல்றதுக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது; ஏன், நடுவர் மன்றத்துக்கேகூட அதிகாரம் கிடையாது; நடுவர் மன்றம் பரிந்துரைதான் செய்யலாம். மேலாண்மை வாரியம் அமைக்கணும்னு உத்தரவு போட முடியாது. அப்படியே பரிந்துரைச்சாலும் அதை நிறைவேத்தறதும்... நிறைவேத்தாததும் மத்திய அரசோட இஷ்டம்'னு உச்ச நீதிமன்றத்துல சொல்லி, காவிரிப் பிரச்னையை தொடங்கின இடத்துக்கே துரத்தி அடிச்சிட்டீங்களே... இந்திய ஒற்றுமைக்கு வேட்டு வெக்க ஆரம்பிச்ச்ட்டீங்களே!

அமைச்சர்கள் பேசுவது சரியா?
உங்களுக்கு முன்னாடியே உங்க மங்குனி அமைச்சர்கள் பலரும் வேட்டு வெச்சாங்க. இந்திய இறையான்மையைக் காப்பேன்... இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்க மாட்டேன்... ஊறுகாய் விற்க மாட்டேன்னு உறுதிமொழி எடுத்துக்கிட்டு மத்திய அமைச்சர் பதவியில உட்கார்ந்த ஆனந்த குமார், சதானந்த கவுடா இவங்க ரெண்டு பேரும், ஏதோ கர்நாடக மாநிலத்துக்கு மட்டுமே அமைச்சரா இருக்கிற மாதிரி  கண்டபடி பேசறாங்க. தமிழர்களை தாக்கி நேரடியாவே அறிக்கையெல்லாம் விடறாங்க. இதுதான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அமைச்சரா இருக்கிற லட்சணமா?! இப்படித்தான் முன்ன மத்திய அமைச்சரவையில இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வாழப்பாடி ராமமூர்த்தி, இதே காவிரி பிரச்னையில தாறுமாறா எதையோ சொல்லப்போக, பதவிப்பிரமாணத்தை மீறிட்டார்னு அவரை ராஜினாமா பண்ண வெச்சாங்க. ஆனா, இப்ப உங்க அமைச்சரவையில இருக்கிற ரெண்டு மூணு பேரு இப்படியே பேசிக்கிட்டு திரியறதை கொஞ்சம்கூட கண்டுக்கவே இல்லையே. சரி அமைச்சர்கள்தான் பதவிப்பிரமாணத்தை மீறிட்டாங்கனு பார்த்தா, நீங்க எல்லாத்தையும் கால்லயே தூக்கிப் போட்டுல்ல மிதிக்க ஆரம்பிச்சிட்டீங்க.

தமிழ்நாடு பி.ஜே.பி.யினர் பேச்சு


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாதுனு நீங்க சொன்னதுமே... தமிழ்நாட்டுல பல பேர் கொதிச்செழுந்து கண்ணீர் வெச்சிக்கிட்டிருக்கோம். ஆனா, தமிழ்நாட்டுல பி.ஜே.பி-யை முளைக்க வைக்கறதுக்காக ரிடையர்மென்ட் காலத்துலயும் ஓயாம உழைக்கிற இல.கணேசன்; ஒரு தொகுதியில ஓராயிரம் ஓட்டுகூட வாங்கமுடியாத உங்க படைத்தளபதி ஹெச்.ராஜா, எங்க இருக்கிறாங்கனு அவங்களுக்கே தெரியாம சுத்திக்கிட்டிருக்கிற அக்கா தமிழிசை எல்லாம்... ரொம்ப ஓவரா பேச ஆரம்பிச்சுட்டாங்க.
இந்த இல.கணேசன், அரும்பெரும் கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்காரு. அதாவது, 'நீதிமன்றம் சொல்லி மேலாண்மை வாரியத்தை அமைச்சா, அதுக்கு அதிகாரம் இருக்காது. அதனால நாடாளுமன்றத்துல சட்டமியற்றி அதை அமைக்கப்போறார் மோடி. அவர் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்றதுக்குத்தான் வாரியத்தை அமைக்க முடியாதுனு கோர்ட்ல சொல்லியிருக்காரு. அதுக்குள்ள எதுக்காக அவரை திட்டித்தீக்கறீங்க'னு சும்மா பின்னி எடுத்திருக்காரு. தமிழ்நாட்டுல எந்தத் தொகுதியில நின்னாலும் நூறு வாக்குகூட வாங்க ஓட்டு இல்லாததாலதான் மத்தியப் பிரதேசத்துல இருந்து நாடாளுமன்றத்துக்கு உங்கள தேர்ந்தெடுத்திருக்காங்க கணேசன். அந்த நன்றிக் கடனுக்காக வேற எதைவேணும்னாலும் வாந்தியா எடுத்து தொலைச்சுட்டுப் போங்க. ஆனா, காவிரி பாயுற தஞ்சாவூர் மண்ணுல பொறந்து வளர்ந்துட்டு இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ற வேலையை மட்டும் செய்யவேணாம்.


அட தமிழ்நாட்டு பி.ஜே.பி மங்குனிகளே... மோடிக்கும் கர்நாடகாவுக்கும் உள்ள கனெக்ஷன் என்னனு, உங்க கட்சியைச் சேர்ந்த அந்த மாநில முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரே புட்டு வெச்சுட்டாரே! 'காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பா நமக்குக் கொடுத்த வாக்கை பிரதமர் நரேந்திர மோடி காப்பாத்திட்டார். அதனால அவருக்கு நன்றி'னு கர்நாடக சட்டசபையிலயே பகிரங்கமா அறிவிச்சிருக்கார். இதுக்காக மோடியை பாராட்டித் தீர்மானமே போட்டிருக்காங்க.

காவிரிக்காக களத்துல இறங்கி போராடுறவங்கள கிண்டல் பண்ணாதீங்க!
இந்த விஷயங்கள் மட்டும் சரியா உங்க காதுகள்ல விழாம போயிடுறதுதான் ஆச்சர்யத்துலயும் ஆச்சர்யம்! உங்க காதுல விழாத மாதிரியே நடிங்க... இல்ல கவுந்தடிச்சி தூங்குங்க. யாரும் உங்கள கேள்வி கேக்க போறதில்ல. நீங்கள்லாம் காமெடி பீஸுனு ஊர் உலகத்துக்கே தெரியும். ஆனா, அப்படி பண்ணாம... காவிரிக்காக களத்துல இறங்கி போராடுறவங்கள கிண்டல் கேலியில்ல பண்ணிக்கிட்டு திரியறீங்க. இந்த ஹெச். ராஜா என்னடான்னா... 'வாரியம் வந்துட்டா தண்ணி வந்துடுமா'னு கேக்கறாரு. அட விளக்கெண்ணெய்ங்களா... அப்புறம் என்னாத்துக்கு உங்களை ஆட்சியில உக்கார வெச்சாங்க. பிரச்னை பெரிதாகாம சமாதானப்படுத்தி, யார் பக்கம் நியாயம் இருக்கோ அவங்க பக்கம் பேசி, விஷயத்தை முடிச்சுவிடறதுதானே நியாயஸ்தனுக்கு அழகு. அதைவிட்டு, இந்த நேரத்துல வாரியத்தை அமைக்க முடியாதுனு சொல்லி பழையபடி முதல் புரோட்டாவுக்கே விஷயத்தை திருப்பிவிட்டா... உங்களையெல்லாம் என்னத்த சொல்றது?

அவங்க அம்மா படுத்த படுக்கையா கிடந்தாலும், இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே கொதிச்சி எழுந்து பிரதமர் வீட்டை நோக்கி வீறு நடை போட்டாங்க அ.தி.மு.க எம்.பிங்க. ஆனா, அவங்களகூட சந்திக்கல இந்திய பிரதமர். ஆனா ஆஸ்திரேலியாக்காரன சந்திக்கிறார்... அமெரிக்கக்காரன சந்திக்கிறார்... ஏன் நடிகர், நடிகைகளைக் கூட சந்திச்சி குசலம் விசாரிக்கிறார். ஆனா, தவிச்ச வாய்க்கு தண்ணிக் கேட்டு நடந்து வந்தவங்கள கண்டுக்கவே இல்லை. இதுதான், 'ஒரே தேசம்... ஒரே சட்டம்'னு கூப்பாடு போடுற கட்சியின் பிரதிநிதியான உங்களோட லட்சணமா மோடிஜி!
போற போக்குல 'கரடியே காரித்துப்பின மன்னர்'ங்கிற பட்டத்தை வாங்கற நிலைக்கு ஆளாகிடாதீங்க... ஆமாம் சொல்லிப்புட்டேன்.

இப்படிக்கு
ஜூனியர் கோவணாண்டி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ