Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் இல்லாமல் இன்னும் எத்தனை நாட்கள் அரசு இயந்திரம் இயங்கும் ?

15 நாட்களைக் கடந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் 22ம் தேதி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வருக்குக் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என தொடக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், லண்டனிலிருந்து சிறப்பு நுரையீரல் மற்றும் செப்ஸிஸ் மருத்துவ நிபுணர் வந்து சென்ற பிறகுதான் தொற்றுக்கான சிகிச்சை தருகிறோம் என்று அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு அப்போலோ வந்து முதல்வருக்கான சிகிச்சைகளை பார்த்துச்சென்றுள்ளனர். இந்தநிலையில், முதல்வருக்கு இதுநாள் வரை அளிக்கப்பட்ட சிகிச்சைகளே தொடரும் எனவும், அதற்கு அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது எனவும் அப்போலோ இரண்டு பக்க செய்தியறிக்கையை  வெளியிட்டது.


உயர்நீதிமன்றமும் பொதுநல வழக்கும்

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வரின் உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பி ட்ராபிக் ராமசாமியால் பொதுநலவழக்கு ஒன்று தொடரப்பட்டது. மனுவை முதலில் விசாரித்த நீதிமன்றம் அரசுதரப்பு வழக்கறிஞர் அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு கேட்டது. ஆனால், அதே உயர்நீதிமன்றம் இரண்டே நாட்களில் நிலையை மாற்றிக்கொண்டு அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

 

முதல்வரைப் பார்க்கவில்லை ராகுல் 

இந்நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முதல்வரை பார்க்க அப்போலோவுக்கு வருகை தந்தார். மாநிலத்தில் எதிர்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் ஒரு தேசிய கட்சியின் தலைவர் திடீரென மருத்துவமனைக்கு வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முதல்வரின் தோழி சசிகலா, இளவரசி மற்றும் சில அதிமுக முன்னணியினர் தவிர ஜெயலலிதாவை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை. ’யாருக்கும்’ என்பது ஆளுநரையும் சேர்த்துத் தான். ஆளுநருக்கே அனுமதி இல்லாத போதும், டெல்லியிலிருந்து வந்த காங்கிரஸ் தலைவர் ராகுலையாவது ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் அவரும் மருத்துவர்களை மட்டுமே சந்தித்துவிட்டு முதல்வரின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்து விட்டுத் திரும்பினார்.

 

சுப்ரமணியசாமி கடிதம் 

தற்போது முதல்வர் உடல்நிலை மீதான பரபரப்பு அடங்கியுள்ள நிலையில்,  கடந்த 15 நாட்களாக முடங்கிக் கிடக்கும் அரசு இயந்திரத்தை யார் கவனிப்பது என்கிற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதே கேள்வியை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான சுப்பிரமணிய சாமி எழுப்பி உள்ளார்.  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் மருத்துவமனையில் இருப்பதால் அரசு இயந்திரம் இயங்காமல் கிடக்கிறது என்றும், அதனால் வன்முறைகள் அதிகரித்து ஐ.எஸ்.ஐ.எஸ் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிலரை கோவையில் கைது செய்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

 

ஆளுநரும் அமைச்சர்களும்!

இத்தகைய சூழலில் அப்போலோவுக்கும், ஆளுநர் மாளிகைக்குமாக அமைச்சர்களும், அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகனராவும் மாற்றி மாற்றி சென்று வந்திருக்கிறார்கள்.ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர்களை நேரில் அழைத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவர்களுடன் சில மணிநேரம் விவாதித்தார். இந்த விவாதத்தின்போது,  அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இருந்தனர். துணை முதல்வர் அல்லது தற்காலிக முதல்வர் பதவியில் யாராவது நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், காவிரி பிரச்னை தொடர்பாகவும், அரசின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர்களுடன் ஆளுநர் விவாதித்தார் என ராஜ் பவன் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
 


சட்டத்துக்குப் புறம்பானதா?

முதல்வர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் பொறுப்பில் இல்லாதவர்கள்  சென்று மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு பற்றி விவாதிப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையில், இத்தனை நாட்களுக்குப் பிறகும் அமைச்சர்களோ அல்லது தலைமைச் செயலக வட்டாரமோ, முதல்வரின் உடல்நிலை குறித்தான அறிக்கை எதையும் வெளியிடவில்லை, முதல்வர் பொறுப்புகளை யார் தற்போது கவனிப்பார்கள் என்பது பற்றிய தகவலும் மக்களுக்குத் தரப்படவில்லை.

இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒவ்வொரு தேர்தலின்போதும் மக்களிடம் அடையாளப்படுத்தி வாக்கு கேட்கும் கட்சி, இத்தகைய இக்கட்டான சூழலில் இவர்தான் தற்போதைய முதல்வர் என அடையாளம் காட்டத் தயங்குவது ஏன் என்றும், சசிகலா தரப்புக்கும் அமைச்சர்கள் தரப்புக்கும் யாரை முதல்வராக நியமிக்கலாம் என்பதில் கருத்து வேறுபாடு நிலவி வருவதால் எத்தகைய முடிவையும் எட்டமுடியவில்லை என்றும் அரசியல் விமர்சகர்களிடையே கேள்விகள் எழுகின்றன.

தற்போதைய முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது எத்தகைய  'நீண்ட நாட்கள்' என்றும், இன்னமும் எத்தனை நாட்கள் முதல்வர் இன்றி அரசு இயந்திரம் இயங்கும் என்கிற கேள்விகளும் தமிழக மக்களின் மனதில் எழாமல் இல்லை? தமிழக அரசு இதுபற்றி சிந்திக்குமா ?

-ஐஷ்வர்யா           

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close