Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் உடல் நலக்குறைவின் போது கவர்னரின் ரோல் என்ன?

முதல்வர் உடல்நலம் என்பது அரசு நிர்வாகம் நல்ல நிலையில் உள்ளது என்பதையும் சார்ந்த ஒன்று. 18 நாட்களுக்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த அசாதாரண சூழலில் அரசு நிர்வாகம் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு அரசியல் சட்டத்தில் எந்தவித முன்னுதாரணமும் இல்லை என்று சொல்கிறார்கள்.


அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?


மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் கேட்டோம். "முதல்வர் மருத்துவமனையில் இருந்தாலும், அவருடைய ஆலோசனைப்படி ஒரு மாநில அரசு செயல்படுகிறது என்று அமைச்சர்கள் சொல்வதை கவர்னர் ஏற்றுக்கொள்ள முடியும்." என்று சொன்னார். இன்னொரு மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம், "ஒரு மாநிலத்தின் முதல்வர் உடல் நலக்குறைவாக இருந்தால், யார் அவர் பொறுப்புகளைக் கவனிக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் எந்தப்பிரிவிலும் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதும் இல்லை. எந்த ஒரு மாநிலத்திலும் இதுபோன்ற முன்னுதாரணம் இதற்கு முன்பு இருந்தது இல்லை" என்கிறார்.


கவர்னரின் உரிமைகள்...

முதல்வர் உடல் நலக்குறைவாக மருத்துவமனையில் இருக்கும்போது மாநிலத்தின் கவர்னர் எந்தப் பணியும் மேற்கொள்ள முடியாது. இரண்டு சூழல்களில் மட்டும்தான் கவர்னர், தன் சுயமுடிவின்படி செயல்பட முடியும். தேர்தல் முடிந்த உடன், யாரை அரசு அமைக்கக் கூப்பிடுவது என்பது குறித்த முடிவு செய்வது ஒரு கவர்னரின் சுய உரிமை. அதேபோல ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவின்போது அது குறித்து சுயமாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதும் அவரது உரிமை. இந்த இரண்டு விஷயங்களில் அவர் மாநில அரசைக் கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை. முதல்வர் உடல் நலக்குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மாநில அமைச்சரவையின் முடிவின் படி அல்லது மாநில அமைச்சர்களின் அறிவுரைப்படிதான் அவர் செயல்பட முடியும் என்று சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர்.


எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றியபோது...


முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது 1984-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, மருத்துவமனையில் இருந்தபடியே அவர் ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்பட்டது. அக்டோபர் 13-ம் தேதிக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் உடல் நிலை மோசமானபோது, அப்போது கவர்னராக இருந்த எஸ்.எல். குரானா, அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதன்பின்னர், முதலமைச்சர் இல்லாத நிலையில் அமைச்சரவையை கூட்டக் கூடாது என்றும், முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக அப்போதைய தலைமைச் செயலாளர் கவர்னருக்கு அனுப்பிய தகவலில், முதல்வர் எம்.ஜி.ஆர், அமைச்சர் நெடுஞ்செழியனை முதல்வருக்கு உரிய கடமைகளை ஆற்றும்படி கூறியதாகத் தெரிவித்திருக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட கவர்னர்,  அக்டோபர் 25-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், நெடுஞ்செழியன் தலைமையில் அமைச்சரவையைக் கூட்ட அனுமதி அளித்து இருக்கிறார்.  எம்.ஜி.ஆர் கவனித்து வந்த 14 துறைகளையும் நெடுஞ்செழியனுக்கு ஒதுக்கி உத்தரவிட்டார்.


அமைச்சர்கள் மறுப்பு


இப்போதும் அதேபோன்ற ஒரு ஏற்பாட்டை கவர்னர் வித்யாசாகர் ராவ் செய்ய முயன்றதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதனை அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். முதல்வர் ஆலோசனைப் படி நாங்கள் செயல்படுகின்றோம் என்று அமைச்சர்கள் ஆளுநரிடம் சொல்லியிருக்கின்றனர். அமைச்சர்களே இப்படிச் சொல்லிவிட்டபிறகு அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இதற்கு மேல் கவர்னரால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே கவர்னர் இப்போதைக்கு தமிழக அரசை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.  


- கே.பாலசுப்பிரமணி

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ