Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீக்குளித்து இறந்த நிஜ 'ஜோக்கர்' !

ரு ஆண்டுகளுக்கு முன்னர்... தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகே 16 வயது சிறுவன் ஒருவர், தலை மற்றும் முகத்தை துண்டால் மூடியபடி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினான். 'நோ பிளாஸ்டிக்... நோ பொல்யூசன்' எனும் வாசகங்களோடு பதாகை ஒன்றை கையில் ஏந்தியிருந்தான் அந்த சிறுவன்.
ஒரு மணி நேரம் தனியொருவனாக சாலையின் மத்தியில் அமர்ந்து தர்ணா நடத்தியவனிடம் காவல்துறையினர் பேச... 'எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கிறது பிளாஸ்டிக். இதனால் சுற்றுப்புற சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.பிளாஸ்டிக்கை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்காகவே இந்த போராட்டம்," என காவல்துறையினரிடம் ஆவேசமாக முழங்கினான் அந்தச் சிறுவன். சிறிது நேரத்துக்கு பிறகு அந்த சிறுவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தது காவல்துறை.

சில மாதங்களுக்கு பின்னர்... 2014 அக்டோபர் மாதத்தில் ஒரு திங்கட்கிழமை. பொதுமக்கள் குறை தீர் கூட்டத்தின் காரணமாக பரபரத்து காணப்பட்டது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். அப்போது அலுவலகத்தின் மாடியில் நின்று அந்த சிறுவன் மீண்டும் தற்கொலை மிரட்டல் விடுத்தான். 'பிளாஸ்டிக் ஒழிக்கப் படவேண்டும். நாட்டில் மரங்களை வெட்டக் கூடாது' என முழக்கங்களை விடுத்த சிறுவனை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர், பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் ஒழிப்பை முன்வைத்து பலவித போராட்டங்களிலும் ஈடுபட்டான் அந்த சிறுவன். 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்திய அவர், தனது இறுதியான போராட்டத்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.16 வயதில் பிளாஸ்டிக் ஒழிப்பை முன்வைத்து போராட்டங்களை துவங்கிய அந்த சிறுவன், 19 வயது வாலிபராக அதே கோரிக்கைக்காக தன் உயிரை நீத்துள்ளார். அவர் தஞ்சாவூர் கருணாவதி நகரை சேர்ந்த குமரன் என்பவர் மகன் ஜவஹர்.

கடந்த திங்கட்கிழமை மாலை தஞ்சாவூர் புதிய ஆற்றுப் பாலத்தில் உடலில் தீ பற்றி எரிய ஒருவர் குதித்தை அங்கிருந்த சிலர் பார்த்தனர். இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க தீக்குளித்து இறந்தது யார் என தேடுதல் பணி துவங்கியது. அதே நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜவஹர் வீடு திரும்பாததால் அவரைத் தேடி வந்தனர் அவரது உறவினர்கள்.

அடுத்த ஓரிரு மணி நேரங்களில் ஜவஹரின் உடல் பாதி எரிந்த நிலையில் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், ஜவஹர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர்.
அவனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பிளாஸ்டிக் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மட்டுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தான்," என ஜவஹரின் தந்தை குமரன் சொல்ல, தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், தற்கொலைக்கு முன்னர், தனது இறப்பு குறித்து பேசிய வீடியோ இப்போது வாட்ஸ் அப்பில் பரவியுள்ளது. "என் சாவுக்கு யாரும் காரணமில்லை இது முழுக்க முழுக்க இயற்கையை காப்பாற்ற நான் செய்யும் தியாகம்" என்று அவர் பேசி பதிவான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது.

ஜவஹரின் தந்தை குமரனிடம் பேசினோம். "என் பையன் எப்போதும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் பத்தி மட்டும் தான் பேசிட்டு இருப்பான். பிளாஸ்டிக்னால எத்தனை உயிரிழப்பு ஏற்படுது தெரியுமானு கவலைப்படுவான். எப்படியாவது பிளாஸ்டிக்கை தடை பண்ணனும்னு சொல்லீட்டு இருந்தான். வீட்டுல கொஞ்சம் கூட பிளாஸ்டிக் பயன்படுத்த விட மாட்டான். அதை தடை செய்யணும்னு தனி ஆளா போராடீட்டே இருந்தான்.

ஒரு முறை இதே மாதிரி போராட்டம் நடத்துனப்ப,  அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டீட்டுப் போயிட்டு இருந்தாங்க. நான் அங்கே போனேன். அப்போ என்கிட்ட பேசின போலீஸ் அதிகாரி ஒருத்தர், 'உன் மகன் தொடர்ந்து இது மாதிரி பண்ணிகிட்டே இருக்கான். அவன் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனா யார் கேட்பாங்க," என சொன்னார். 'இனிமேல் இது மாதிரி செய்யாமல் பார்த்துக்கோங்க'னு சொல்லி அனுப்பி வைச்சாங்க. ஆனாலும் அவனால சும்மா இருக்க முடியலை.

பிளாஸ்டிக்கை ஒழிக்க எந்தவிதமான நடவடிக்கையும் அரசு எடுக்கலைங்கற ஏக்கத்தோடவே இருந்தான். தன் உயிர் போனால்தான் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு தடை வரும்னு நினைச்சானோ என்னவோ, செல்போனில் வீடியோவை பதிவு செஞ்சு வைச்சுட்டு இப்படி செஞ்சுட்டான்," என்றார் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.

"இது இன்னுமொரு தற்கொலை வழக்காகவே காவல்துறையால் பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டும் என ஜவஹர் முன்னெடுத்த போராட்டங்களை அலட்சியப்படுத்த முடியாது. 2 ஆண்டுகளுக்கு மேலாக ஜவஹர் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். ஆனால் அவர் கோமாளியாகவே பார்க்கப்பட்டார். 'பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் இல்லை என்றால் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன்' என ஜவஹர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் இதை எதையும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இந்த அலட்சியம் தான் இப்படி ஒரு சம்பவத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.

ஒருவேளை ஜவஹரின் கோரிக்கையை ஏற்று மாவட்ட அளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த தற்கொலையை தடுத்திருக்கலாம். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை," என்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

பிளாஸ்டிக் ஒழிப்பு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் கவனம் ஈர்த்தவர் ஜவஹர். தனது கோரிக்கையை தொடர்ந்து முன்வைக்க... அதற்காக போராட... ஜவஹர் இருந்திருக்க வேண்டும். சூழலியல் கோரிக்கைக்காக உயிர் தியாகம் என்பது போற்றப்பட வேண்டியது தான். ஆனால் உயிரோடு இருந்து ஜவஹர் செய்ய வேண்டியதை இப்போது யார் செய்வார்? ஜவஹர் உயிரோடு இருந்திருக்க வேண்டும்...

- கே.குணசீலன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close