Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்துல் கலாமின் நிறைவேறாத அந்த விருப்பம்...!

"சிறு வயதில் கிணற்றுக்குள் கல்லைத் தூக்கிப் போட்டார் அந்த சிறுவன். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று கேள்வி எழுப்பினார். இந்த அறிவியல் கேள்வியை கேட்ட அந்த சிறுவன் தான், அறிவியல், விஞ்ஞான தொழில்நுட்பத்துக்கான பல தேசிய விருதுகளை பெற்ற அப்துல் கலாம்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11-வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர் என அப்துல் கலாமுக்கு ஏகப்பட்ட பெருமைகள். நாளைய இந்தியா குறித்து கனவு கண்ட விஞ்ஞான நாயகனின் 85-வது பிறந்த நாள் நாளை (அக்.15) கொண்டாடப்படுகிறது.

அவர் நம்முடன் இல்லாமல் கொண்டாடப்படும் அவரது 2-வது பிறந்த நாள் இது. கலாமின் நினைவுகளை அவரது சகோதரர் முத்து முகமது மீரா மரைக்காயரின் மகள் டாக்டர் நசீமா மரைக்காயர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘பால்ய வயதில் இருந்தே குடும்பத்தாரிடம் பாசமும் பரிவும் நிரம்பக் கொண்டிருந்தவர் கலாம் சித்தப்பா. பணியின் காரணமாக அவர் எங்களை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும் அத்தகைய சிந்தனையே எங்களுக்கு எழாதவாறு பார்த்து கொண்டவர். அவருக்கு இருந்த உச்சபட்ச பணிகளுக்கு மத்தியிலும் தினம்தோறும் தொலைபேசி மூலம் எங்களை அழைத்து அப்பாவின் நலன் குறித்தும், குடும்பத்தில் அன்றாட நிகழ்வுகளையும் தவறாது கேட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தொலைபேசியில் பேசும்போது எனது குரலில் சோர்வு தெரிந்தால், அதற்கான காரணத்தை அறிந்து உரிய ஆலோசனை சொல்வார். உலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதை எங்களுக்கு கற்றுத் தந்தவர். அத்தகைய பாசமும், நேசமும் கொண்ட சித்தப்பா இன்று எங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும் அவர் சொல்லிச் சென்ற அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் இன்றளவும் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. 'வாழ்வில் இனிப்பை எப்படி சந்தோஷமாக ஏற்று கொள்கிறோமோ அதேபோல் கசப்பையும் ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்' என அடிக்கடி சொல்வார். அதன் வெளிப்பாடாக அவரது உணவில் பாகற்காய் எப்போதும் இடம் பெற்றிருக்கும்.

டெல்லியில் சித்தப்பா தங்கியிருக்கும்போது அவரது வீட்டுத் தோட்டத்தில் அமைந்துள்ள ‘அர்ச்சுனா’ என்ற மரத்தின் நிழலில் தனது சகோதரருடன் அமர்ந்து கொண்டு தங்கள் இளமைக் காலத்தை பகிர்ந்து கொள்வது சித்தப்பாவுக்கு அளவிலா ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்தப்பாவின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி உற்சாகத்துடன் துவங்கும்.

தனது பிறந்த நாளில் உலகின் எந்த மூளையில் இருந்தாலும் காலை எட்டு மணிக்குள் தனது சகோதரர் மரைக்காயரை போனில் தொடர்பு கொண்டு ஆசி பெறுவதுடன், தனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளவும் சொல்வார். அதன்படி அன்றைய தினம் சிறப்பு தொழுகை நடத்திய பின் சித்தப்பா கலாம் விரும்பி உண்ணும் பாசிப் பருப்பு லட்டு செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்வோம். அவரது நண்பர்கள் டாக்டர் விஜயராகவன், சம்பத் குமார் ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும் ராமேஸ்வரத்துக்கு வந்து சித்தப்பா கலாம் படித்த பள்ளி குழந்தைகள் மத்தியில் இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள்.

உலகமெல்லாம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்க அவரோ தனது சகோதரரின் 100-வது பிறந்த நாளை எப்படி சிறப்பாக கொண்டாடலாம் என்பது குறித்தே எங்களிடத்தில் விவாதித்துக் கொண்டிருந்தார். வரும் நவம்பர் 5-ம் தேதி எங்கள் தந்தை முத்து முகம்மது மீரா மரைக்காயரின் 100-வது பிறந்த நாள். அன்றைய தினம் அவருக்குப் பிறந்த தின பரிசாக விலை உயர்ந்த அக்தர் பாட்டிகள் அடங்கிய பேழையை கொடுக்க சித்தப்பா நினைத்திருந்தார்.

சுற்றுப்பயணங்களின்போது சித்தப்பாவுக்கு வழங்கப்பட்ட விலைமதிப்பில்லா பொருட்களை விட ராஜஸ்தான் சென்றிருந்தபோது வாங்கி வந்திருந்த இந்த அக்தர் பேழையைதான் சிறந்ததாக கருதினார். அதனால்தான் விலை மதிப்பில்லா அந்த பொருட்களை எல்லாம் அரசிடமே கொடுத்துவிட்டு இந்த அக்தர் பேழையை மட்டுமே சொந்தமாக வைத்திருந்தார். சகோதருக்கு பரிசளிப்பதற்காக தனது வீட்டில் பாதுகாத்து வைத்திருந்த அந்த பேழையினை தினந்தோறும் எடுத்து பார்த்து மகிழ்ந்தவர் தனது சகோதரரின் நூறாவது பிறந்த நாளுக்காக காத்திருந்தார்.

ஆனால் சித்தப்பாவின் அந்த பெரும் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. உலகையே கனவு காண சொன்னவரின் நிறைவேறாத கனவை நிறைவேற்ற எங்கள் தந்தையின் நூறாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதுடன், சித்தப்பா வாங்கி வைத்திருந்த அந்த அக்தர் பேழையை எங்கள் தந்தையின் கைகளில் பரிசளித்து மகிழ்விக்க சித்தப்பாவின் பிறந்த தினமான இன்று முடிவு எடுத்து உள்ளோம்’’ என்றார். எளிமை என்றால் என்ன என்பதை எத்தனையோ விதங்களில் அறிஞர்கள் பலர் விளக்க முயன்றிருக்கிறார்கள். அப்படி வாழ்ந்து காட்டியவர்கள் சிலர் தான். அதில் மிக முக்கியமானவராக இருக்கிறார் அப்துல் கலாம். கலாமை போற்றுவோம்.

- இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ