Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மட்டுமல்ல... தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி தறிகெட்டுதான் ஓடுகிறது! (Data Story)

நேற்று கிண்டியில் 3 மாணவிகளை பலி கொண்ட லாரி விபத்து பற்றி அதிர்ச்சி கலந்த விவாதம் டீக்கடைகளிலும், பல குடும்பங்களிலும் நடந்து கொண்டிருந்தது. சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு நடந்தது போல பயத்தோடு வருந்தினர். அதில் சிலரிடம் “ ஏன் இந்த விபத்துக்கு இவ்வளவு அதிர்ச்சியாக்குறீங்க?” என்று கேட்டதற்கு “ சென்னையோடு ஒரு மெயின் ரோட்டுல இப்படி நடந்திருக்கு, அதிர்ச்சியாகாம என்ன செய்யுறது. சென்னையிலயே இப்படி ஆகிடுச்சே….” என்றனர். இப்படி சென்னையிலேயே… என்று அதிர்ச்சியடையும் பெற்றோர்களுக்கும் சென்னை வாழ் மக்களும் தெரிந்து கொள்ள இரண்டு விஷயங்கள் இருக்கிறது.

 

 

 

 

ஒன்று - அது என்ன சென்னையிலேயே? பாதுகாப்பான போக்குவரத்துக்கு உகந்த நிலையில் சென்னை மாநகரம் இல்லை. 2015-ம் ஆண்டு மட்டும் சென்னையில் நடந்த விபத்துகளால் 886 பேர் உயிரை இழந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக விபத்து நடக்கும் மாநகரங்களில் சென்னைக்கு இரண்டாம் இடம். இப்படி ஒரு மாநகரத்தில் விபத்து நடந்தால்,அது சாதாரண விஷயம்தான். விபத்துகளின் காரணிகளை புரிந்துகொண்டு, வாகனம் இயக்கும்போது எச்சரிக்கையாக செயல்பட நாம் முன்வராத வரை, விபத்துகளைக் கண்டு நாம் அதிர்ச்சியடைய வேண்டிய அவசியம் இல்லை.


இராண்டாவது - கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் லாரிகளால் நடந்த விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 161. இப்போது கண்ணை விரித்து பாருங்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டு லாரி மற்றும் கனரக வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகள் 11,514. அதில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 3,578. ஆக சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் 3,417 பேர், தாறுமாறாக ஓடும் லாரிகளில் அடிபட்டு இறந்துள்ளனர். இறந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் நம் கண்ணுக்கு தெரிந்தது நேற்று உயிரிழந்த அந்த 3 மாணவிகள் மட்டும் தான். மீதம் உள்ள அந்த 3,417 பேருக்காக யாரும் வருத்தப்பட தயாராக இல்லை. இன்னும் பார்க்கப் போனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் லாரிகளால் ஏற்படும் பலி எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால், சென்னைக்கு மூன்றாவது இடம் தான். வேலூர் 171, காஞ்சிபுரம் 169 ஆகிய நகரங்கள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன.

 

எண்ணூர், பொன்னேரி, தூத்துகுடி போன்று துறைமுகங்கள் மற்றும் மணல் குவாரிகள் செயல்படும் இடங்களில் மாதம் ஒருவரையாவது கட்டுப்பாடற்ற லாரிகள் காவு வாங்குகின்றன. இழப்புக்கு நியாயம் கேட்டு அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபடுகின்றனர். அதோடு அது காற்றில் கரைந்து விடுகிறது. மிஞ்சிப் போனால் செய்தித்தாள்களில் ஒரு பிட்டு செய்தியாக வரும். அவ்வளவு தான்.

 

மாநகரமோ, சிறு கிராமமோ விபத்துகளுக்கு பாரபட்சம் கிடையாது. ஆக எங்கு விபத்து நடக்கிறது என்பது இங்கு பேசு பொருள் அல்ல. இனி விபத்து நடக்காமல் இருக்க செய்ய வேண்டியவற்றை முன்னெடுப்பது தான் நாம் செய்ய வேண்டியது.

 

“சரியாத்தான் சொல்றீங்க பாஸ். இதற்கு அரசாங்கம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கீழே கமெண்ட் செய்ய முனைந்தீர்களானால், இன்னும் கொஞ்சம் டேட்டா உங்களுக்காக இருக்கிறது.


 

தமிழகத்தில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலான விபத்துகள் ஓட்டுநரின் தவறால் தான் நடக்கிறது என்கிறது இந்த புள்ளி விவரம். ஓட்டுநர்களின் எந்த மாதிரியான செயல்கள் விபத்தை எற்படுத்துகிறது என்பதை கீழே உள்ள டேட்டா சார்ட்டில் காணலாம்.

 

 

மேலே சார்ட்டில் உள்ள காராணங்கள் அனைத்தும் தவறு என்று நமக்கு தெரிந்தவையே. ஆட்டோ, கார், லாரி போன்ற வாகனங்களில் எழுதப்பட்ட அறிவுரை வரிகளாக, தினமும் இவற்றை பார்க்கிறோம். என்ன பிரயோஜனம், ஆம்புலன்ஸ் பின்னால் சென்றால் டிராஃபிக்கில் இருந்து தப்பிக்கலாம் என ஆம்புலன்ஸை ஒட்ட துரத்திக் கொண்டு தான் இருக்கிறோம். இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?.

இதை விட அதிர்ச்சியான விஷயம், சுமார் 2,500 பிரேக் பிடிக்காத வாகனங்களுக்கு மத்தியில் தான் நாம தினமும் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 8,000 வாகனங்கள் ஏதோ ஒரு வகையான ஆபத்தான கோளாறுடனே இயங்கிக் கொண்டிருக்கின்றன. 2015-ல் வாகன கோளாறால் ஏற்பட்ட விபத்துகளின் அளவை கீழே பார்க்கலாம்.

 

 

வாகனத்தை இயக்கத் தொடங்கும் முன் பிரேக் பிடிக்கிறதா என்பதை செக் செய்ய ஒரு நிமிடம் ஆகுமா?. அதற்கு நமக்கு பொறுமை இல்லை. “சரி, ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் கிண்டி விபத்து போன்ற பிரேக் ஃபெயிலியர் விபத்துகள் எதிர்பாராததுதானே?” என்றால், ஆம் எதிர்பாரத்துதான். ஆனால் அந்த ஓட்டுநர் அதை எதிர்பார்த்திருக்க வேண்டும். பிரேக்கின் கன்டிஷனை முறையாக கவனித்து சரி செய்திருந்தாலே, இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. சரி செய்யாத பட்சத்தில் வளைவில் வேகமாக திரும்பினால் பிரேக் பிடிக்காமல் போகும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும்.


 

விபத்து ஏற்பட இன்னொரு முக்கிய காரணம், அவசரம். போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று தெரிந்தும் தாமதமாக கிளம்பி, லாஸ் ஆஃப் பேவை தவிர்க்க பிளாட்பாரத்தில் எல்லாம் வண்டி ஓட்டுபவர்கள் உண்டு. அலுவலகத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் வர வேண்டும் என்று உங்கள் HR உத்தரவிட்டால் பின்பற்றாத நீங்கள் கீழே இருக்கும் தகவலை பார்த்து நிச்சயம் பின்பற்றுவீர்கள்

 





 

பெரும்பாலும் விபத்துகள் அலுவலகம் செல்லும் போதும், அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது தான் நடக்கின்றன. சொல்லுங்கள், அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?


 

“ஆக, மொத்தமும் மக்கள் தவறு தான், அரசாங்கத்துக்கு இதில் பங்கில்லையா?” என்றால், நிச்சயம் இருக்கிறது. தரமான சாலைகள், இடத்துக்கு ஏற்ப பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்படுத்தல் போன்ற அத்தியாவசிய கடமைகள் அரசுக்கும் உண்டு. கீழே உள்ள டேட்டா அரசால் வழங்கப்பட்டது. அதில் பள்ளி கல்லூரிகள் உள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு 4,021 விபத்துகள் நடந்துள்ளது. அதில் 941 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை கொஞ்சம் கவனத்தோடு கையாண்டிருந்தால், நேற்று நடந்த விபத்தை தவிர்த்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

 


 

சென்னையின் உயிர்நாடி அண்ணாசாலையில் எத்தனை சிக்னல்கள் முறையாக இயங்குகின்றன என்பதை கவனித்து பாருங்கள். உலகின் முக்கியமான ஒரு மாநகரின், சாதாராண மக்களை விடுங்கள், போக்குவரத்தை நிறுத்தி மரியாதையுடன் அனுப்பி வைக்கப்படும் விவிஐபிகள் செல்லும் முக்கிய சாலையே இந்த நிலையில் இருக்கிறது என்றால், இதற்கு அரசு நிச்சயம் பொறுப்பேற்றுத் தான் ஆக வேண்டும்.

- ரெ.சு.வெங்கடேஷ்

Infograph: ஹாரிஃப் முகமது

எடிட்டர் சாய்ஸ்