Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளம் 2-வது உலையில் உற்பத்தி தொடக்கம்; அணுமின் உற்பத்தித் திட்டங்கள் அவசியமா?

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா -ரஷ்யா கூட்டு முயற்சியில் அணு உலைகள் அமைப்பது தொடர்பாக, கடந்த 1988- ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. அணுஉலை  மின் உற்பத்தித் திட்டம் பல்வேறு காரணங்களால்  ஒத்திவைக்கப்பட்டு, உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, கடந்த 2013-ம் ஆண்டு, கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. 

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலை மூலம் 2013 அக்டோபர் 22-ல் மின் உற்பத்தி தொடங்கியது. முதல் கட்டமாக 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது. படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதியன்று, கூடங்குளம் முதல் அணுஉலையில் முழு மின் உற்பத்தித் திறனான  ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 

இரண்டாவது அணு உலையில், கடந்த மே 18-ம் தேதி யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஜூலை 10-ம் தேதி இரவு அணுப்பிளவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னர், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, செப்டம்பர் 6-ம் தேதி நிறுத்தப்பட்டது. 

தற்போது, இரண்டாவது உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் ஒரு வாரகாலமாக நடைபெற்றன. சோதனை  நிறைவடைந்து, ஓரிரு நாளில், 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு படிப்படியாக அதிகரித்து, விரைவில் ஆயிரம் மெகாவாட்டாக உயரும்" என்று கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.  "இதன்மூலம் இந்திய அணு மின் கழகம் மற்றும் தமிழக மின்சாரத் தேவைக்கான 28 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது. கூடங்குளம் முதல் அணுஉலையிலிருந்து தமிழகத்துக்கு 562.50 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. தற்போது 2-வது அணு உலையும் மின் உற்பத்தியை தொடங்கியுள்ளதால் தமிழகத்துக்குக் கூடுதலாக 562.50 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 2-வது அணு உலையில் மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்டும்போது தமிழகத்தின் பங்கான 56 சதவீதம் உறுதி செய்யப்படும்" என்றார் அவர்.

கூடங்குளம் அணுஉலைக்கான பணிகள் தொடங்கியதுமே, அப்பகுதி மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் ஒரு தரப்பினர். தொடர் உண்ணாவிரதம், மறியல், முற்றுகை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்த, 2012-ல் நால்வர் குழுவை அமைத்தது தமிழக அரசு. இக்குழுவினர், கூடங்குளத்துக்கு நேரில் சென்று, அப்பகுதி மக்களைச் சந்தித்து, அணுஉலையால் ஆபத்து ஏற்படாது என்று உறுதி அளித்ததுடன், அப்பகுதி மேம்பாட்டுக்கும் உத்தரவாதம் அளித்தனர். கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்ற தமிழக அரசு நிதி ஒதுக்கீடும் செய்தது. ஆனால், பெரிய அளவில்  மேம்பாட்டுப் பணிகள் ஏதும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை என்பதுதான் சோகம்.  முதலாவது அணுஉலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வர்த்தகப் பயன்பாட்டுக்கு அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது அணு உலையும் மின் உற்பத்தியைத் தொடங்கவுள்ளது. 

அணு மின் உற்பத்தி, தொழில்நுட்ப வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டாலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், அணு மின் உற்பத்தியில் இருந்து விலகி, பசுமை எரிசக்தி, சூரிய மின்சக்திக்கு மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் அணுமின் சக்தி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது சரிதானா? என்பதே நமது கேள்வி.

- சி. வெங்கட சேது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close